'இன்ஸ்டன்ட் அரசியல்' பாஜகவிடம் பொறுமை இல்லை.. நாளையே கோட்டைக்குள் போக நினைக்கிறது.. உதயநிதி அட்டாக்
சென்னை: இன்று அவதூறு பரப்பி, நாளையே கோட்டைக்குள் சென்றுவிடவேண்டும் என்ற வெறி மட்டுமே பாஜகவிடம் உள்ளது. இந்தப் போலி அரசியல் பயணத்தில் அங்கங்கு இருக்கும் சமூக விரோதிகளை எல்லாம் அள்ளிப்போட்டுக்கொண்டு, அரசியல் என்ற பெயரில், மக்கள் விரோதச் செயல்களில் பாஜக ஈடுபட்டு வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாஜகவை கடுமையாக விமர்சித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- 'இன்ஸ்டன்ட் அரசியல்' செய்யும் பா.ஜ.க.விடம் அவ்வளவு பொறுமை இல்லை. இன்று அவதூறு பரப்பி, நாளையே கோட்டைக்குள் சென்றுவிடவேண்டும் என்ற வெறி மட்டுமே அவர்களிடம் உள்ளது.

இந்தப் போலி அரசியல் பயணத்தில் அங்கங்கு இருக்கும் சமூக விரோதிகளை எல்லாம் அள்ளிப்போட்டுக்கொண்டு, அரசியல் என்ற பெயரில், மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இப்படி உருவாக்கப்படும் இந்தப் பரபரப்புகளால் வரும் ஊடக வெளிச்சத்தைத் தன் மீது வாங்கிக்கொண்டு மறுபக்கம் அ.தி.மு.க.வைப் பாதுகாக்கவும் நினைக்கிறது. பா.ஜ.க. உடனான கூட்டணி முறிவு, தனித்துப் போட்டி போன்றவை அந்த நாடகத்தின் சில அத்தியாயங்கள்தான்.
கை கட்டி நிற்கிறார் எடப்பாடி: இந்த நாடகத்தில், 'தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக்கொடுத்தவர்கள்', 'நீட் தேர்வை நுழையவிட்டு, 20-க்கும் மேற்பட்டோரின் சாவுக்குக் காரணமாக இருந்தவர்கள்', 'ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறப்புக்கு காரணமானவர்கள்', மக்களின் வரிப் பணத்தில் பல லட்சம் கோடி ரூபாயைச் சுருட்டியவர்கள்' என்ற அ.தி.மு.க. மீதுள்ள ஊழல் கறையை, இரத்தக் கறையைக் கழுவிவிடப் பா.ஜ.க. நினைக்கிறது. 'பூசியவர்களே கறைகளைக் கழுவியும் விடுகிறார்களே' என்று எடப்பாடியும் கைகளைக் காட்டிக்கொண்டு நிற்கிறார்.
ஊழல் கறை: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளுக்கு அனுமதி அளிக்காமல் ஆளுநர் முட்டுக்கட்டை போடுவது, பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்குகள் போன்ற முக்கியமான பல வழக்குகளைச் சி.பி.ஐ கிடப்பில் போட்டிருப்பது போன்றவை எல்லாம் அதைத்தான் உணர்த்துகின்றன. 'கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம்', தூண்டிவிடப்பட்ட 'மணிப்பூர் கலவரம்', 'சி.ஏ.ஜி.' வெளியிட்ட 7.5 லட்சம் கோடி ரூபாய் ஊழல் என ஏற்கெனவே இரத்தக் கறையும் ஊழல் கறையும் படிந்தவர்களால், எடப்பாடி மீதுள்ள அதே கறைகளை எப்படிக் கழுவிவிட முடியும்?
அடிமையாக இருந்து மக்களின் உரிமையை விட்டுக்கொடுத்ததற்கான தண்டனையை, மக்கள் எடப்பாடி அண்ட் கோ-வுக்கு வழங்குவார்கள் என்பது நிச்சயம். எடப்பாடியின் தொடர் தோல்வியும் அதைத்தான் உணர்த்துகின்றன." மக்கள் விரோத அடிமை அ.தி.மு.க. பாசிச பா.ஜ.க. குறித்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் இப்படிப் பேசும்போது அவர்கள் கூர்ந்து கவனித்து உள்வாங்குவதை உணரமுடிகிறது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை: நவீன தமிழ்நாட்டின் சிற்பியான முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டை அரசின் சார்பிலும், கழகத்தின் சார்பிலும், மக்களுக்குப் பயனுள்ள வகையில் எப்படியெல்லாம் கொண்டாடுகிறோம் என்பதை, ஒவ்வொரு மேடையிலும் பட்டியலிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். 'முடியவே முடியாது' என்றார்கள். ஆனால், கலைஞர் பெயரில் மகளிருக்கு மாதந்தோறும் உரிமைத் தொகை வழங்கி வருகிறோம்.
ஆறேழு ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டிய எய்ம்ஸைக் கட்ட அவர்களுக்கு மனமில்லை. ஆனால், கலைஞர் பெயரில் மதுரையில் பிரம்மாண்ட நூலகத்தையும், சென்னையில் மருத்துவமனையையும் நம் முதலமைச்சர் அவர்கள் கட்டியெழுப்பித் திறந்து வைத்துள்ளார்" என்பதைக் குறிப்பிடும்போது மக்கள் நல அரசுக்கும் - மக்கள் விரோத கும்பலுக்குமான வித்தியாசத்தை இளைஞர்கள் நன்றாகப் புரிந்துகொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications