'ஒன்றிய அரசு'.. தேவைப்பட்டால் தமிழ்நாடு அரசு மீது வழக்கு தொடருவோம்.. சொல்வது தமிழ்நாடு பா.ஜ.க!
சென்னை: ஒன்றிய அரசு என தமிழ்நாடு அரசு அழைப்பது பற்றி தேவைப்பட்டால் வழக்குத் தொடரப்படும் என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்தார்.
Recommended Video
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி அமைத்தவுடன் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இதில் மிகவும் பேசப்பட்டு வரும் ஒரு மாற்றம்தான் மத்திய அரசு என இருப்பதை ஒன்றிய அரசு என திமுக மாற்றியது.

ஒன்றிய அரசு
இந்த ஒன்றிய அரசு வார்த்தையை தமிழ்நாடு அரசு பயன்படுத்துவதற்கு பாஜக உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியும் மத்திய அரசு என இருப்பதில் என்ன தவறு இருக்கிறது? என்று கேட்டார். ஒன்றிய அரசு வார்த்தைக்கு தமிழ்நாடு பாஜக சட்டமன்றத்திலும் எதிர்ப்பு தெரிவித்தது.

முதல்வர் விளக்கம்
இதற்கு விளக்கம் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ''ஒன்றிய அரசு என்பது அரசியல் சட்டத்தில் உள்ளது. அதைத்தான் நாங்கள் பயன்படுத்துகிறோம். இதில் எந்த தவறும் இல்லை. இனிமேலும் அப்படித்தான் பயன்படுத்துவோம்'' என்று நெத்தியடி விளக்கம் கொடுத்தார். இந்த நிலையில் ஒன்றிய அரசு என அழைக்கும் திமுகவுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக தீர்மானம் நிறைவேறியுள்ளது.

கண்டன தீர்மானம்
சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற பிறகு பாஜகவின் முதல் செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஒன்றிய அரசு என அழைப்பதற்கும், தேர்தலை வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக்கூறியும் திமுகவுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஏதும் நன்மை இருக்கிறதா?
ஒன்றிய அரசு என அழைப்பதால் தமிழ்நாட்டுக்கு ஏதேனும் நன்மை இருக்கிறதா? ஒன்றிய அரசு என்பது வேண்டும் என்றே பொது மக்களை திசை திருப்பும் முயற்சி. ஒன்றிய அரசு என தமிழ்நாடு அரசு அழைப்பது பற்றி தேவைப்பட்டால் வழக்குத் தொடரப்படும் என்று கரு.நாகராஜன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications