சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மிசோரம் பாஜக நிகழ்ச்சிகள் பைபிள் வாசகங்கள், ஆமென் சொல்லியே தொடக்கம்..வானதி சீனிவாசன் பெருமிதம்

Google Oneindia Tamil News

சென்னை: மிசோரம் பாஜக நிகழ்ச்சிகள் பைபிள் வாசகங்கள் படிக்கப்பட்டு ஆமென் சொல்லித்தான் தொடங்குகின்றன என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பெருமிதம் தெரிவித்தார்.

இது தொடர்பாக வானதி சீனிவாசன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கொல்கத்தாவில் துர்கா பூஜை நிகழ்வுகளில் பங்கேற்று விட்டு, அந்த பக்தி பரவசமூட்டும் ஆன்மிக அனுபவத்துடன், அக்டோபர் 2-ம் தேதி, வட கிழக்கு மாநிலங்களில் கடைக்கோடி மாநிலமான மிசோரம் வந்து சேர்ந்தோம். வங்கதேசம், மியான்மர் ஆகிய இரு நாடுகளையும், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரையும் எல்லையாக கொண்டுள்ளது மிசோரம். எட்டு மாவட்டங்கள். மக்கள் தொகை 12 லட்சம் மட்டுமே. காணும் இடமெல்லாம் பசுமை போர்த்திய மலைக்குன்றுகள். நீர்வீழ்ச்சிகள், மனதிற்கும், உடலுக்கும் இதமளிக்கும் சில்லென்ற காலநிலை என்று இயற்கையோடு இணைந்து வாழ்வதற்கேற்ற மாநிலம் மிசோரம்.
ஆறுகள், மலைகள், பசுமை பரப்புகள், அடர்ந்த காடுகள், விளை நிலங்கள் என்று இயற்கை வளத்தையும், விவசாயத்தையும் மட்டுமே நம்பியிருக்கும் மாநிலங்களில் மற்ற வளர்ச்சி என்பது சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கிறது. பள்ளிக் கல்வி, உயர் கல்வி வேலைவாய்ப்பு என்பது பெரும் சிக்கல் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. இதனால், மேல் படிப்புக்காக டெல்லி, அசாம், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களுக்கு தான் அவர்கள் செல்ல வேண்டியிருக்கிறது.

மிசோரம் மட்டுமல்ல, வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் விவசாயம் தான் முக்கியமான வாழ்வாதாரம். வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் அரிசி தான் பிரதான உணவு என்பது, தென்கோடியில் இருக்கும் நமக்கு சற்று ஆச்சரியமாகத்தான் இருக்கும்.மிசோரமில் மூன்று வேளையும் அரிசியால் தயாரிக்கப்படும் உணவு வகைகளை தான் சாப்பிடுகிறார்கள். மிசோரமில் காணும் இடமெல்லாம் நீர்வீழ்ச்சிகள் நம் மனதை கொள்ளையடிக்கின்றன. அந்த மாநிலத்தின் அமைதியான சூழலில், நீர்வீழ்ச்சிகளில் இருந்து நீர் விழும் ஓசை என்பது, ஒரு இசைக்கச்சேரி கேட்பது போல் இருக்கிறது. அதுமட்டுமல்ல மலைக் குன்றுகள் வழியாக பாய்ந்தோடும் சிற்றோடைகளும், மலைக்குன்றுகளின் மேலே, மேகங்கள் தவழ்ந்து செல்லும் காட்சியும் நம்மை புதிய உலகிற்கே அழைத்துச் செல்கின்றன. சில இடங்களில் கைகளாலேயே மேகத்தை பிடித்து விடலாம் என்கிற அளவுக்கு மேகங்கள் நமக்கும் பரவச அனுபவத்தை தருகின்றன. மாசில்லாத காற்று, வான்வெளி, மேகங்கள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.

ராஜராஜ சோழன் விவகாரம்: சங்க இலக்கியத்தை சங்கீ இலக்கியமாக்குவதா? வானதி சீனிவாசனுக்கு தி.வி.க. பதிலடி! ராஜராஜ சோழன் விவகாரம்: சங்க இலக்கியத்தை சங்கீ இலக்கியமாக்குவதா? வானதி சீனிவாசனுக்கு தி.வி.க. பதிலடி!

மிசோ பழங்குடிகள்

மிசோ பழங்குடிகள்


மிசோரமில் அதிகமாக மிசோ இன பழங்குடியின மக்கள் வாழ்கிறார்கள். அதனாலேயே 'மிசோரம்' என்று பெயர் வந்திருக்கிறது. கூர்கா இன மக்களும் பல்வேறு வேலைகளுக்காக இங்கு வட மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் வசிக்கின்றனர்.'மிசோ தேசிய முன்னணி' என்ற கட்சி மிசோரமை ஆட்சி செய்கிறது. மிசோரமில் எட்டு மாவட்டங்கள் உள்ளன. ஆனால் 10 மொழிகளுக்கு மேல் பேசுகிறார்கள். பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவரான பிறகு நாடு முழுவதும் பயணிக்கும் வாய்ப்பு எனக்கு வாய்த்திருக்கிறது. நாகலாந்து, மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்கள் சிலவற்றுக்கு நான் ஏற்கனவே வந்திருக்கிறேன். அங்கெல்லாம் மாவட்டத்திற்கு ஒரு மொழி அல்ல, மாவட்டத்திற்குள்ளேயே பல மொழிகள் பேசும் மக்களையும் பார்த்திருக்கிறேன்.
நாகலாந்தில் ஒரு மொழி பேசும் பழங்குடியினருக்கு, மற்ற பழங்குடியின பிரிவினர் பேசும் மொழி புரிவதில்லை. ஆனால், மிசோ பழங்குடியினர் மாவட்டத்திற்கு ஒரு மொழி பேசினாலும், ஒரு மாவட்டத்தில் பேசும் மொழியை, மற்றொரு மாவட்டத்தினர் புரிந்து கொள்கிறார்கள். அவர்களின் மொழியை ஆங்கில எழுத்துகளை பயன்படுத்தியே எழுதுகிறார்கள். மிசோ பழங்குடியினர் 95 சதவீதம் கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். ஆங்கிலம் சரளமாக பேசுகிறார்கள்.

மிசோ திருமண முறை

மிசோ திருமண முறை

மிசோ பழங்குடியினரின் திருமண முறை விசித்திரமாக இருக்கிறது. பழங்குடியின மக்களிடம் ஒரு விநோத வழக்கம் இருக்கிறது. ஆண், ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால், அந்தப் பகுதியில் உள்ள வலிமை வாய்ந்த விலங்கு ஒன்றே வேட்டையாடிக் கொல்லும் அளவுக்கு வீரம் மிக்கவனாக இருக்க வேண்டும். வீரம் தான் ஆணுக்கு திருமணத்திற்கான தகுதியை அளிக்கிறது. மிசோ பழங்குடியினர் மிதுன் என்ற விலங்கை வேட்டையாட வேண்டும் என்ற வழக்கம் இருந்துள்ளது. இப்போது அந்த வழக்கம் இல்லாததால், வேட்டையாடுவதற்கு பதிலாக, மணப் பெண்ணுக்கு, மணமகன் ரூ. 420 கொடுக்கும் வழக்கத்தை வைத்துள்ளனர். அது என்ன 420 ரூபாய் என்று கேட்டேன். விவாகரத்து ஆகிவிட்டால் மணப்பெண் 20 ரூபாயை வைத்துக்கொண்டு 400 ரூபாயை திருப்பித் தந்து விடுவார்களாம். விசித்திரமாக இருந்தது. பழங்குடியினரின் ஒவ்வொரு பழக்க வழக்கங்களும் நமக்கு பெரும் ஆச்சர்யத்தை அளித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், மிசோ பழங்குடியினரில், விவாகரத்து என்பது மிகமிக அரிதாகவே நடக்கும் என்றார்கள்.

மிசோரம் அரசியல்

மிசோரம் அரசியல்

பின்னர், நான் தங்கும் ஹோட்டலுக்கு வந்தேன். அங்கு மகளிரணி மாநில நிர்வாகிகளுடன் ஒரு சிறு அறிமுகம் இருந்தது. அதனை முடித்துக் கொண்டு, பா.ஜ.க. மாநில இளைஞரணி செயலாளர் ஒருவரின் வீட்டுக்கு சென்றோம். அவரது கணவரும் பா.ஜ.க.வில் இருக்கிறார். மூன்று மாடி கீழே இறங்கி சென்றால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அவர்களின் வீடு. இப்படி பல மாடிகள் ஏறி இறங்குவது போல் வீடுகள் இருப்பதால் இயற்கையாகவே உடற்பயிற்சி கிடைத்து விடுகிறது. அதனால், இங்கு தொப்பை உள்ளவர்களை பார்ப்பது அரிதாக இருக்கிறது.தற்போது மிசோரம் முதல்வராக இருக்கும் திரு. சோரம்தாங்கா அவர்கள் சுமார் 20 ஆண்டுகள் தலைமறைவு இயக்கத்தை நடத்தியவர். தனது "மிசோ தேசிய முன்னணி'யை அரசியல் கட்சியாக மாற்றி, தேர்தலில் வென்று முதல்வராக இருக்கிறார். மிசோ தேசிய முன்னணி தற்போது பா.ஜ.க. கூட்டணியில் உள்ளது. 40 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மிசோரமில் பா.ஜ.க வுக்கு ஒரு எம்.எல்.ஏ. இருக்கிறார். விமான நிலைய விரிவாக்கம், சாலை பணிகள் என பா.ஜ.க. ஆட்சியில் அடிப்படை கட்டமைப்பு பணிகள் நடந்து வருவதை பார்க்க முடிந்தது. மலைக் குன்றுகள் நிறைந்த மாநிலம் என்பதால் ரயில் வசதி இல்லை. சுற்றிச்சுற்றி வர வேண்டியிருப்பதால் பயண தூரம் அதிகமாக இருக்கிறது. ஆனாலும், சாலைகள் விமானங்கள் மூலம் நாட்டின் மற்ற பகுதிகளோடு இணைக்கும் திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது.

கிறிஸ்தவ மத பிரார்த்தனையுடன்..

கிறிஸ்தவ மத பிரார்த்தனையுடன்..

கூட்டம் தொடங்குவதற்கு முன்பு மிசோரம் மாநிலத்தைப் பற்றியும், அங்குள்ள அரசியல் சூழல் பற்றியும், பா.ஜ.க. கட்சிப் பணிகளைப் பற்றியும் மகளிரணி நிர்வாகிகளுடன் உரையாடுனேன். மற்ற வட கிழக்கு மாநிலங்களைப் போலவே மிசோரமிலும், பா.ஜ.க. நிகழ்ச்சிகள் பைபிளில் இருந்து புனித வாசகங்கள் படிக்கப்பட்டு, கிறிஸ்துவ பிரார்த்தனையுடந்தான் ஆமென் சொல்லிதான் தொடங்கியது. ஐஸ்வால் பா.ஜ.க. அலுவலகத்தில் யேசு கிறிஸ்து படம் வைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் பலர் பா.ஜ.க.வை நோக்கி வருவதும், கட்சிப் பணிகளில் ஆர்வம் கட்டுவதும் பலருக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். ஆனால், பா.ஜ.க.வை பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு இது ஆச்சரியமாகவே தெரியாது. எனில் இந்தியாவில் பா.ஜ.க. மட்டுமே உண்மையான மதச் சார்பற்ற கட்சி. இந்தியாவில் சிறுபான்மை மதத்தினரின், ஓட்டுகளை மொத்தமாக அறுவடை செய்வதற்காக பெரும்பான்மையான இந்து மக்களை இழிவு படுத்துவதும், அவர்களுக்கு எதிராக செயல்படுவதும், அவர்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூட சொல்லாதது தான் மதச்சார்பின்மை என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. 'மதச்சார்பற்ற' என்றால், ஏதாவது ஒரு மதத்திற்கு எதிராக செயல்படுவது அல்ல. அனைத்து மதங்களையும் சமமாக மதித்து, அவர்களை உணர்வுகளை போற்றுவது தான் உண்மையான மதச்சார்பின்மை. அந்த அடிப்படையில் பா.ஜ.க. மட்டுமே, அனைத்து மதத்தினரையும் சமமாக மதிக்கிறது. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறது. இதனை வட கிழக்கு மாநிலங்களில் கண்கூடாக பார்க்க முடிகிறது.

மிசோரம் சிவன் கோவிலும் காஞ்சி ஜெயந்திரரும்..

மிசோரம் சிவன் கோவிலும் காஞ்சி ஜெயந்திரரும்..

நவராத்திரி காலம் என்பதால் இரவு அங்குள்ள ஒரு சிவன் கோயிலுக்கு சென்றோம். மிசோரமில் 2.11 சதவீதம் மட்டுமே இந்துக்கள் உள்ளனர். அவர்களில் பலர் நேபாள் நாட்டில் இருந்து வந்தவர்கள். மிசோரம் 37 இந்து கோயில்கள் இருப்பதாக சொன்னார்கள். நான் சென்ற சிவன் கோவிலுக்கு சிவலிங்கத்தையும் விநாயகர் சிலையையும் நம் தமிழகத்திலிருந்து காஞ்சி மடம் வழங்கியிருக்கிறது. காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயந்திரர் அவர்கள் இந்த கோயிலுக்கு வருகை தந்திருப்பதாகவும் சொன்னார்கள். துர்கா பூஜை நிகழ்வுகளும் இந்த கோவிலில் நடைபெற்றது. மிசோரமில் 2.11 சதவீதம் மட்டுமே இந்துக்கள் வசிக்கின்றனர். ஆனாலும், அவர்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து இல்லை. எந்த சலுகையும் இல்லை. இது பற்றி அவர்கள் வருத்தத்துடன் பல கோரிக்கைகளை முன் வைத்தனர். இதுபற்றி மத்திய அமைச்சர்களிடம் பேசுவதாக வாக்குறுதி அளித்துவிட்டு அங்கிருந்து விடை பெற்றோம். இயற்கை எழில் நிறைந்த மிசோரமில் தெரிந்து கொள்வதற்கு எண்ணற்ற விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவ்வாறு வானதி சீனிவாசன் பதிவிட்டுள்ளார்.

English summary
BJP MLA Vanathi Srinivasan has shared her Mizoram Travel experience.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X