திருச்சி சூர்யாவை தொடர்ந்து அமர் பிரசாத் ரெட்டி மீது மேலும் ஒரு பாஜக ஆதரவாளர் 'கபடி பண மோசடி' புகார்
சென்னை: தமிழக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மீது அக்கட்சியின் நிர்வாகி கபடி லீக் போட்டிகளில் பண மோசடி செய்ததாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தமிழக பாஜக விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு தலைவராக இருப்பவர் அமர் பிரசாத் ரெட்டி. சமூக வலைதளங்களில் திமுகவை கடுமையாக விமர்சிப்பது, யூ டியூப் சேனல்களில் காட்டமாக பேசுவது என அதிகமான பரபரப்பை கிளப்பக் கூடியவர் அமர் பிரசாத் ரெட்டி.
நீட் தேர்வு எழுதிய மாணவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் காலில் விழச் செய்த சர்ச்சையில் சிக்கியவர். பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார் என்கிற குற்றச்சாட்டும் அமர் பிரசாத் ரெட்டி மீது உண்டு.
திருச்சி சூர்யாவின் ஓயாத அதிரடி- பாஜகவில் இருந்து வெளியேற காரணமே 'நீங்க'தான் பிரதர்...பொளேர் போடு!

கபடி லீக் மூலம் கணக்கு
பிரதமர் மோடியின் பிறந்த நாள் உள்ளிட்டவற்றை முன்வைத்து தமிழக பாஜக சார்பில் கபடி போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன்மூலம் கிராமங்களில் ஊடுருவ முடியும் என்பது பாஜகவின் கணக்கு. இந்த கபடி போட்டிகளுக்கான ஏற்பாடுகளை அமர் பிரசாத் ரெட்டியுடன் இணைந்து செய்து வந்தனர் பாலாஜி தங்கவேல் உள்ளிட்டோர்.

சக நிர்வாகி விலகல்
ஆனால் போஸ்டர் உள்ளிட்டவைகளில் தமது பெயர்தான் இடம்பெற வேண்டும்; தம்மையே முன்னிலைப்படுத்த வேண்டும் என அமர்பிரசாத் செயல்பட்டதாக கூறி பாஜகவின் இளைஞர் விளையாட்டு பிரிவு துணை தலைவர் பொறுப்பில் இருந்து பாலாஜி தங்கவேல் ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

அமர் பிரசாத் ரெட்டி மீது புகார்
அண்மையில் தமிழக பாஜகவில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா அறிவித்திருந்தார். பாஜக மாநில நிர்வாகி டெய்சி சரணை ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்த சர்ச்சையில் சிக்கியவர் திருச்சி சூர்யா. அவரது பாஜக கட்சிப் பதவி பறிக்கப்பட்டிருந்தது. ஆனால் தாமே பாஜகவை விட்டு விலகுகிறேன் என திருச்சி சூர்யா ட்விட்டரில் அறிவித்தார். அப்போதும் அமர் பிரசாத் ரெட்டிதான் தாம் கட்சியை விட்டு வெளியேற காரணம் என கூறியிருந்தார்.

கபடி லீக் பண மோசடி
இந்த பஞ்சாயத்துகள் போதாது என உச்சமாக, கபடி லீக் போட்டிகள் மூலம் அமர் பிரசாத் ரெட்டி பணத்தை சுருட்டி விட்டார் என பாஜக ஆதரவாளர் மீஞ்சூர் சலீம் என்பவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அத்துடன் தமது ட்விட்டர் பக்கத்தில் அமர் பிரசாத் ரெட்டி மீது அடுக்கடுக்கான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் மீஞ்சூர் சலீம் முன்வைத்தும் வருகிறார். இந்த குற்றச்சாட்டுகளின் உண்மை தன்மை உறுதி செய்யப்படவில்லை. நடிகை காயத்ரி ரகுராமும் அமர் பிரசாத் ரெட்டியை ஏற்கனவே மறைமுகமாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.