• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குஜராத்தில் பாஜகவுக்கு வரலாற்று வெற்றி ஏன் கிடைக்கும் தெரியுமா? கள அனுபவங்களுடன் வானதி சீனிவாசன்

Google Oneindia Tamil News

சென்னை: குஜராத் மாநிலத்தில் பாஜகவின் மக்கள் பிரதிநிதிகளின் எளிமைகள், ஏராளமான குடிநீர் திட்டங்கள் உள்ளிட்டவைதான் அம்மாநில சட்டசபை தேர்தலில் பாஜகவின் வரலாற்று வெற்றிக்கு காரணமாக இருக்கும் என்கிறார் பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவரான வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.

குஜராத் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலில் இதுவரை இல்லாத அமோக வெற்றியை பாஜக பெறும் என்கின்றன தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்து கணிப்புகள்.

குஜராத்தில் பாஜகவுக்காக தீவிர தேர்தல் பிரசாரம் செய்த வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ தமது அனுபவங்க்ளை சமூக வலைதளத்தில் விரிவாக பகிர்ந்துள்ளார். வானதி சீனிவாசனின் விரிவான பதிவு: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் திருவிழா நடத்த முடிந்திருக்கிறது. நாளை மறுநாள் தேர்தல் முடிவுக்காக எல்லோரையும் போல நானும் காத்திருக்கிறேன். குஜராத் பிரசார அனுபவங்களை உடனுக்குடன் பதிவிடலாம் என நினைத்தேன். ஆனால், இடைவிடாத, தொடர் பயணங்கள், பிரசாரத்திற்கு இடையே, டெல்லி, சென்னை, கோவை என, வந்து செல்ல வேண்டிய சூழல் இருந்ததால், உடனுக்குடன் பதிவிடுவது சாத்தியமில்லாமல் போய்விட்டது. அதனால், இப்போது ஒட்டுமொத்தமாக குஜராத் பிரசார அனுபவத்தை இப்போது பகிர்ந்து கொள்கிறேன். குஜராத்தில் தேர்தல் பிரசாரம் துவங்குவதற்கு முன்பே, இருமுறை அங்கு சென்று, தேர்தல் தொடர்பான ஆரம்பகட்ட பணிகளில் மகளிரணி நிர்வாகிகளுடன் ஈடுபட்டேன். பாஜக மகளிரணி தேசியப் பொதுச் செயலாளர் தீப்தி ராவத் அவர்களை, மகளிரணி சார்பில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக நியமித்திருந்தேன். நாடு முழுவதும் இருந்து வந்திருந்த மகளிரணி நிர்வாகிகளை, குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் ஒருங்கிணைக்கும் பணிகளை அவர் மேற்கொண்டார். தினமும் அவர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக பேசி, மகளிரணியின் தேர்தல் பணி அனுபவங்களை தெரிந்து கொண்டேன். அவர்களுக்கு சில ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கி வந்தேன். பாஜக மத்திய தேர்தல் குழு உறுப்பினர் என்ற முறையில், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். நான்கு மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி அவர்கள் முழுமையாக கலந்து கொண்டது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. வேட்பாளர் தேர்வில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், பெண் தலைவர்களை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியது எனக்கு பெரு மகிழ்ச்சி அளித்தது.

புதுமுகங்கள் 92 பேர்

புதுமுகங்கள் 92 பேர்

மகளிரணி சார்பாக தேர்தல் பணிகளை திட்டமிட்டோம். குஜராத் மகளிரணி நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் பிரசாரம் செய்தனர். மற்ற மாநிலங்களிலிருந்து வந்திருந்த மகளிரணி நிர்வாகிகளை, எந்தெந்த பகுதிகளுக்கு அனுப்புவது, தங்குமிடம், உணவு, போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள், அவர்களுக்கான பிரசாரப் பணிகள் குறித்து முன்கூட்டியே திட்டமிட்டோம். பாஜக தேசிய நிர்வாகிகள், அணிகளின் தேசிய தலைவர்கள், மாநில முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, அந்த தொகுதிகளில் மூன்று நாட்கள் தங்கி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கட்சி தலைமை திட்டமிட்டு இருந்தது. தலைநகர் அகமதாபாத் அருகில் உள்ள அசர்வா என்ற தொகுதி எனக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த பகுதியில் அகமதாபாத் மாநகராட்சி துணை மேயர் தர்ஷனாபென் வாஹ்லே வேட்பாளராக போட்டியிடுகிறார். குஜராத்தில் மொத்தம் 182 சட்டப்பேரவை தொகுதி உள்ளன. இதில் 92 புது முகங்களுக்கு பாஜக வாய்ப்பளித்துள்ளது. அங்கு மகளிரணி சார்பில், 'வீராங்கனா' என்ற பெயரில், மோட்டார்சைக்கிள் பேரணியும், குடியிருப்புகளில் சத்யநாராயணா கதை சொல்லி பூஜை நடத்தும் நிகழ்வு என இருபெரும் நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன.

எளிமையான பாஜக மக்கள் பிரதிநிதிகள்

எளிமையான பாஜக மக்கள் பிரதிநிதிகள்

அசர்வா தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி கவுன்சிலர்கள், தங்களது வார்டுகளில், மக்கள் சந்திப்பு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில் நான் கலந்து கொண்டு பேசினேன். அதில் ஒருவர் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்கிறார். நான்காவது முறையாக கவுன்சிலராக இருப்பதாக சொன்னார். இப்போதும் தள்ளுவண்டியில் வீடுவீடாகச் சென்றுகாய்கறி வியாபாரம் செய்கிறார். எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.
ஒரு மாநிலத்தின் தலைநகரில் உள்ள மாநகராட்சியில், நான்காவது முறையாக கவுன்சிலராக இருந்தும், தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்கிறார் என்பதை தமிழகத்தில் சத்தியம் செய்தாலும் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் குஜராத்தில் அதுதான் உண்மை. பாஜக வித்தியாசமான கட்சி என்பதற்கு கண்கூடான உதாரணம் அந்த கவுன்சிலர். இன்னொரு பாஜக கவுன்சிலர் திருமணம் செய்து கொள்ளாமல் மக்கள் பணியிலேயே ஈடுபட்டு வருகிறார். அதுவும் விதவைப் பெண்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறார். அவரது வீட்டுக்கு நான் சென்றிருந்தேன். இரவு அசர்வா தொகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நானும், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செஷகாவத் அவர்களும் பங்கேற்றோம். அகமதாபாத் ராஜஸ்தானை ஒட்டியுள்ள பகுதி என்பதால், ராஜஸ்தானை சேர்ந்த பலர் அங்கு வசிக்கின்றனர். நான் ஆங்கிலத்தில் பேசினேன். பேசி முடிந்து நடை விட்டு கீழே இறங்கியதும் ஒரு இளைஞர் ஒருவர் என்னிடம், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு தமிழில் பேசினார். அங்கு சுமார் 500 தமிழ் குடும்பங்கள் வசிப்பதாக சொன்னார். அவரிடம் சில நிமிடங்கள் உரையாடினேன்.

மணிநகர் தமிழர்களும் பிரதமர் மோடியும்

மணிநகர் தமிழர்களும் பிரதமர் மோடியும்

மறுநாள் காலை, பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது எம்.எல்.ஏ.வாக இருந்த மணிநகர் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டோம். இங்கு இரண்டாயிரத்துக்கும் அதிகமான தமிழ் குடும்பங்கள் இருக்கிறார்கள். தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தோம். தேர்தல் பிரசாரத்துக்காக வந்திருந்தாலும் ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து தமிழர்களை சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு ஈடு எதுவும் இல்லை.
குஜராத் தமிழர்கள், பாஜக மீதும், மோடி மீதும் மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளனர். மகளிரணி நிர்வாகிகள் கூட்டம், தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் கூட்டம் என்று பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு, தேர்தல் பணிகள் குறித்து அவ்வப்போது ஆலோசனைகள் நடத்தினோம். அசவா தொகுதியில் எனது பணிகளை முடித்துக் கொண்டு ராஜ்கோட் தொகுதிக்கு சென்றேன். 2001-ல் முதல் முதலாக நரேந்திர மோடி அவர்கள் முதலமைச்சரான போது, அவர் எம்.எல்.ஏ.வாக இருக்கவில்லை. அதனால், ஆறு மாதங்களுக்குள் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆக வேண்டி இருந்தது. மூன்று முறை மணிநகர் தொகுதியில் வென்றாலும், இன்று உலகத் தலைவராக உயர்ந்துள்ள மோடி, முதல் முதலாக தேர்தல் களம் கண்டது ராஜ்கோட் தொகுதியில்தான். இந்த முறை உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அதிகமாக பாஜகவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ராஜ்கோட் தொகுதியிலும் துணை மேயராக இருக்கும் பெண்தான் வேட்பாளர். இங்கும், பெண்கள் பங்கேற்ற மோட்டார்சைக்கிள் பேரணி நடைபெற்றது. அதில் பங்கேற்றுவிட்டு, ராஜ்கோட் கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன். அங்கு, முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி, அவரது மனைவி அஞ்சலி ஆகியோரும் இருந்தனர். விஜய் ரூபானி தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனாலும், தாங்களே தேர்தலில் போட்டியிடுவது போல மிகுந்த ஆர்வத்துடன் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

செளராஷ்டிரா குடிநீர் திட்டம்

செளராஷ்டிரா குடிநீர் திட்டம்

இந்த கூட்டம் முடிந்ததும், கர்நாடக முன்னாள் ஆளுநர், குஜராத் சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் வஜுபாய் வாலாவை சந்தித்தோம். அவர்தான், நரேந்திர மோடிக்காக, ராஜ்கோட் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தவர். அவர் தனது அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார். குஜராத், பொதுவாகவே நீர் வளம் மிகமிக குறைந்த மாநிலம். ராஜ்கோட் மாநகராட்சியில் எப்படி தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கண்டோம் என்பதை அவர் எங்களிடம் விவரித்தார். பிறகு ராஜ்கோட் தொகுதிக்கு அருகில் உள்ள வேறு ஒரு தொகுதியில் மகளிரணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் நானும், முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி அவர்களும் பேசினோம். குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நிறைந்த பகுதி ராஜ்கோட். பொதுக்கூட்டம் முடிந்ததும் கட்சி நிர்வாகி ஒருவர் வீட்டில் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். சௌராஷ்டிரா மக்கள் உபசரிப்புக்கு பெயர் பெற்றவர்கள். கிருஷ்ணர் பிறந்த துவாரகை சௌராஷ்டிரா பகுதி தான் உள்ளது. அதனால், வீட்டுக்கு யார் விருந்தினராக வந்தாலும், கிருஷ்ணரே வந்ததது போல நினைத்து உபசரிக்கக் கூடியவர்கள். சௌராஷ்ட்ரா உணவு குஜராத்தில் மிகவும் பிரபலம். அதனை கத்தியவாடி என்றழைக்கின்றனர்.
சௌராஷ்ட்ரா, கட்ச் பகுதிகள், குஜராத்திலேயே மிக மிக வறண்ட நிலப்பரப்பு. மழைப்பொழிவு என்பது அபூர்வம் தான். குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாத நிலைதான் இருந்துள்ளது. நர்மதா ஆற்று நீரை, 'சவுனி' என்ற திட்டத்தின் மூலம் அங்கு கொண்டு சேர்த்திருக்கிறார் மோடி. அந்த நன்றியுணர்வை சௌராஷ்ட்ரா மக்களிடம் பார்க்க முடிகிறது.மத்திய அமைச்சர்கள் புருஷோத்தம் ரூபாலா, மாண்ட்சுக் மால்வியா போன்றவர்கள் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள். குஜராத் பயணத்தில் என்னை வியப்பில் ஆழ்த்தியது அவர்களின் உழைப்பும், உபசரிப்பும். எந்த வீட்டுக்குச் சென்றாலும் அந்த வீட்டில் ஆண்கள் மட்டும் சம்பாதிப்பது இல்லை. பெண்களும் ஏதாவது சிறு தொழிலாக செய்து சம்பாதிக்கிறார்கள். இது அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். பெண்கள் பொருளீட்டும்போதுதான் அவர்களுக்கு தன்னம்பிக்கையும், வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற லட்சியமும் உருவாகிறது.

சுய தொழிலில் பெண்கள்

சுய தொழிலில் பெண்கள்

பாஜகவில் குஜராத் மாநிலத்தை குஜராத் வடக்கு (அகமதாபாத், கட்ச்), மத்திய குஜராத் (பரோடா), சௌராஷ்ட்ரா, தெற்கு குஜராத் (சூரத்) என நான்கு பகுதிகளாக பிரித்திருக்கிறார்கள். ராஜ்கோட்டில் இருந்து டெல்லி வழியாக சென்னை திரும்பி, சில நாட்களுக்கு பிறகு மீண்டும் சூரத் வந்தடைந்தேன். தாப்பி நதிக்கரையில் அமைந்துள்ள சூரத், குஜராத்தின் மிகப்பெரிய வணிக நகரம். நேர்த்தியான சாலைகள், மேம்பாலங்கள், விதவிதமான கட்டிடங்கள் என சூரத், பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. வைரம் பட்டை தீட்டுதல், ஜவுளித் தொழில் இங்கு பிரதானம். சூரத் புடவை வகைகள் உலகப் புகழ் பெற்றவை. சூரத் எம்.பி.யும், மத்திய அமைச்சருமான தர்ஷனா ஜர்தோஷ் என்னை வரவேற்றார். இங்கும் இருசக்கர வாகனப் பேரணி நடந்தது. சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு வாகனப் பேரணியை தொடங்கி வைத்தேன். ஒடிசா, பிகார் என வெளிமாநில மக்கள் அதிகம் வசிக்கின்றனர். காம்ரேஜ் என்ற தொகுதியில் பாஜக வேட்பாளருக்கான பிரசாரம் செய்தோம் அங்கு மகளிர் அணியின் கூட்டம் ஒன்றிலும் கலந்து கொண்டேன். பின்னர் தேநீர் அருந்துவதற்காக கட்சி நிர்வாகி ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அந்த வீட்டிலும் பெண்கள், புடவைக்கு ஜரிகை ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். தினமும் மூன்று புடவைகளுக்கு ஜரிகை ஒற்றுவோம் ஒரு புடவைக்கு 85 ரூபாய் கிடைக்கும் என்றார் அந்த பெண்மணி. வீட்டு வேலைகள், குழந்தைகளை கவனிப்பது என்ற குடும்ப பணிகளுக்கு இடையே, இப்படி சிறு சிறு வேலைகளை செய்து பொருளீட்டுவதை குஜராத்தில் எல்லா வீடுகளிலும் பார்க்க முடிகிறது. மத்திய அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் அவர்கள், என்னை வைரம் பற்றி தீட்டும் தொழிற்சாலை ஒன்றுக்கு அழைத்துச் சென்றார். வைரங்களை பட்டை தீட்டி,அதனை விதவிதமாக வடிவமைத்து, அதனை நகைகளில் பொருத்தும் காட்சிகள், பார்க்க பார்க்க பிரமிப்பூட்டியது.Lab grown diamond என்ற செயற்கையாக தயாரிக்கப்படும் வைரம் இங்குதான் தயாராவதாக சொன்னார்கள். இயற்கையான வைரத்தை விட இந்த Lab grown diamond ஐந்து மடங்கு விலை குறைவு என்றார்கள். பின்னர், மொத்த விலையில் புடவைகள் உள்ளிட்ட ஜவுளி வகைகள் விற்பனை செய்யும் இடங்களுக்குச் சென்றோம். அவற்றையெல்லாம் பிரமிப்புடன் பார்த்துவிட்டு இரவு சூரத்தில் தங்கினேன்.

ஆதி பழங்குடிகளின் ஆதரவு

ஆதி பழங்குடிகளின் ஆதரவு

மறுநாள் காலை மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு, மத்திய அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் அழைத்துச் சென்றார். அவர்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி எங்களை வரவேற்றனர். அவர்களிடம், மீண்டும் பாஜக என் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்கான காரணங்களை எடுத்து கூறினோம்.
குஜராத்தில் 'ஷகி மண்டல்' என்று ஒரு திட்டத்தை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது. பத்து பெண்கள் இணைந்து ஒரு குழுவாக செயல்பட்டால் அவர்களுக்கு மாநில அரசு, ஒரு லட்சம் ரூபாய் வட்டி இல்லாத கடனாக வழங்குகிறது. அதனைக் கொண்டு அவர்கள் சிறு சிறு தொழில்களை செய்து வருமானம் ஈட்டுகிறார்கள். மலைவாழ் பெண்களுக்கு இந்த திட்டம் பெருமளவில் கைகொடுத்து வருகிறது என்பதை அவர்களிடம் பேசும் போது தெரிந்து கொள்ள முடிந்தது. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வந்த பிறகு பெண்கள் அதிக அளவில் கவுன்சிலர்களாக, மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களாக வந்திருக்கிறார்கள். அரசியல் அதிகாரம் என்பது பெண்களை எந்த அளவுக்கு தன்னம்பிக்கை உடையவர்களாக மாற்றி இருக்கிறது என்பதை உள்ளாட்சி பிரதிநிதிகளாக இருக்கும் பெண்களிடம் பார்க்க முடிகிறது. அங்கு நடந்த கூட்டத்தில் அரசின் திட்டங்களால் தாங்கள் எப்படி பயன்படுத்துவோம் என்பதை அவர்கள் எடுத்துக் கூறினார்கள். பின்னர் வனஸ்ரீ என்ற பாரம்பரிய உணவு வகைகள் கிடைக்கும் உணவகத்திற்கு அழைத்துச் சென்றனர். நம்மூர் தோசை போல தான். ஆனால் உளுந்து இல்லாமல் வெறும் அரிசியில் செய்யப்பட்டது. ராகி ரொட்டி. இப்படி பழங்குடி மக்களின் உணவு வகைகளை பசுமையான குடிலில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு நர்மதா மாவட்டத்திற்கு புறப்பட்டோம். நர்மதா மாவட்டமும் பழங்குடி மக்கள் நிறைந்த மாவட்டம். இதுதான் கேவடியா என்ற இடத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கு உலகத்திலேயே மிக உயரமான சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை பார்த்ததும் எனக்கு பழைய நினைவுகள் சுழன்றடித்தன. பட்டேல் சிலை அமைப்பதற்காக, நாடு முழுவதும் விவசாயிகளிடம் இருந்து, இரும்பு பொருட்களை சேகரிப்பதற்கான இயக்கம், கடந்த 2013-ல் நடத்தப்பட்டது. அந்த இயக்கத்தின் தமிழ்நாடு மாநில பொறுப்பாளராக நான் இருந்தேன். தமிழகம் முழுவதும் இருந்து விவசாயிகள் பயன்படுத்தும் கலப்பை உள்ளிட்ட இரும்புப் பொருட்களை சேகரித்து அனுப்பினோம். அந்த நினைவு என்றும் மறக்க முடியாதது. அப்போது குஜராத் வந்திருந்தேன். முதல்வராக இருந்து நரேந்திர மோடியை சந்தித்து அவரிடம் பாராட்டு பெற்றேன். மறக்க முடியாத இந்த நினைவுகளுடன் கேவடியா வந்தடைந்தோம். சர்தார் சரோவர் அணையை ஒட்டி அமைந்துள்ள இந்த பட்டேல் சிலை என்பது வெறும் சிலை மட்டுமல்ல. அங்கு சர்வதேச தரத்தில் தங்குமிடங்கள் உணவகங்கள், கூட்ட அரங்குகள், பூங்காக்கள், பொழுதுபோக்கு இடங்கள் என்று அனைத்து வசதிகளும் உள்ளன இங்குள்ள நர்மதை ஆற்றில் நர்மதா ஆரத்தி நிகழ்வும் நடக்கிறது. அருகில் உள்ள கிராமங்ளில் இருந்து வந்திருந்த பழங்குடியின மக்களுடன் அமர்ந்து நர்மதா ஆரத்தியை கண்டு ரசித்தோம்.

நர்மதையை பார்த்தாலே புண்ணியம்

நர்மதையை பார்த்தாலே புண்ணியம்

'கங்கையில் குளித்தால் புண்ணியம்', 'யமுனை நதி நீரை அருந்தினால் புண்ணியம்', ஆனால், 'நர்மதை நதியை பார்த்தாலே புண்ணியம்' என்று அந்த பழங்குடியின மக்கள் எங்களிடம் பெருமையுடன் குறிப்பிட்டார்கள். நம் நாட்டில் நதிகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், அவற்றை கடவுளாக வழிபடுகிறார்கள் என்பதை கேட்கும் போது வியப்பாக இருக்கிறது. நதிகளை பாதுகாப்பதற்கு நம் முன்னோர்கள் கொடுத்த முக்கியத்துவத்தை தான் இது காட்டுகிறது. காலையில் எழுந்து சர்தார் சரோவர் அணையை பார்க்க சென்றேன். உடன், மகளிரணி நிர்வாகிகள் வந்தனர். புத்தகங்களில் மட்டுமே படித்திருந்த இடங்களை நேரில் பார்க்கும்போது ஏற்படும் அனுபவமே தனி. அதனை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. அணையின் மேல் பகுதியில் இருந்து, கடல் போல் பரந்து விரிந்த நீர்ப்பரப்பை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தோம். உடன், வந்திருந்த மகளிரணி நிர்வாகி ஒருவர், இந்த அணைக்குள் எங்களது கிராமமும் இருக்கிறது. ஆனால், இன்று எனது மகன், இந்த அணையில், பொறியாளராக வேலை செய்கிறார் என்றார். என் மகன் தான், அணையின் நீர்மட்ட அளவுகளை மதிப்பீடு செய்கிறார் என, பெருமையுடன் குறிப்பிட்டார். மகனின் முன்னேற்றம்தான் தாயின் மகிழ்ச்சி என்பதை அப்போது உணர முடிந்தது. எங்கள் கிராமம் மூழ்கினாலும் மலை மீதுள்ள கிராம கோவிலுக்கு படகில் சென்று வழிபடுகிறோம். அதனை நிறுத்தவில்லை என்ற அந்த பெண் தெரிவித்தார். கிராமம் என்றால் வெறும் வீடும், மண்ணும், நிலங்களும் மட்டுமல்ல. சாமியும் தான். அதனால்தான், கிராமமே இல்லாவிட்டாலும், படகில் சென்று சாமியை வணங்க சென்று கொண்டிருக்கிறார்கள். இதுதான் நம் மண்ணின் மகத்துவம். நர்மதையாற்றின் குறுக்கே சர்தார் சரோவர் அணை கட்ட எழுந்த எதிர்ப்புகள், நடந்த இடைவிடாத போராட்டங்கள் அனைத்தையும் நாம் அறிவோம். இந்த வழக்கில், பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு உதவியாக, எனது கணவர் சீனிவாசன் பணியாற்றி வந்தார். அந்த வழக்கு பற்றிய விவரங்களை எனது கணவருடன் விரிவாகவே பேசியிருக்கிறேன். சர்தார் சரோவர் அணையை பார்க்கும்போது இந்த நினைவுகள் எல்லாம் வந்து சென்றன. இந்த அணைக்காக 200-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. பட்டேல் சிலை அமைக்கப்பட்ட பிறகு, இந்த கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோருக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. அதனை நேரிலும் பார்த்தேன். அந்த அணையில் மின்சாரம் எடுக்கும் இடத்தில் இருந்து தண்ணீர், கால்வாய்கள் வழியாக கட்ச் மாவட்டம் வரை செல்கிறது. அணை நிரம்பி வழியும்போதும், திறக்கும்போது வரும் தண்ணீர் வழக்கமான நர்மதை ஆற்றில் சென்று, சூரத்தை தாண்டி பரூச் என்ற இடத்தில் கடலில் கலக்கிறது. மத்தியப்பிரதேசத்தில் உற்பத்தியாகும் நர்மதையாறு, மகாராஷ்டிரா வழியாக குஜராத்திற்குள் நுழைகிறது.

நர்மதை அணை

நர்மதை அணை

மகாராஷ்டிரா, குஜராத் எல்லையில் இந்த அணை அமைந்துள்ளது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தில் பாதிக்கும் மேல், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிராவுக்கு செல்கிறது. ஆனால், தண்ணீர் குஜராத்திற்கு பெரும் பயனளிக்கிறது என்றார்கள். 163மீட்டர் உயரம் கொண்ட இந்த அணை, பிரதமர் மோடியின் சளைக்காத, உறுதியால், 2017-ல் முழுமை அடைந்தது. குஜராத் மக்களின் 60 ஆண்டுகால கனவு நனவானது. இந்த அணையில் பட்டேல், பிரதமர் மோடியின் சிற்பபம் செதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் என்பதால் மோடியின் உருவம் மறைக்கப்பட்டிருந்தது. பின்னர், பட்டேல் சிலையை சுற்றிப்பார்த்தோம். அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை, இரண்டு முறை பார்த்திருக்கிறேன். அதைவிட அதிகமான வசதிகள் பட்டேல் சிலை வளாகத்தில் உள்ளன. இரு புறமும் எஸ்கிளேட்டர், பட்டேலின் வாழ்க்கை வரலாறு அடங்கிய அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளன.
பின்னர், அங்கிருந்து பரோடா வந்தடைந்தேன். பரோடா மேயராக இருந்தவர், இப்போது மகளிரணி தேசிய துணைத் தலைவராக இருக்கிறார். அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும், உற்சாகமாக தேர்தல் பணியாற்றி வருகிறார். நான் பிரசாரத்திற்கு வந்திருக்கிறேன் என்பத அறிந்ததும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்தும், அவரது மனைவியும் என்னை பார்க்க வந்திருந்தனர். அவர்களுடன் சேர்ந்து உணவருந்தினோம்.
பின்னர், பரோடாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. பரோடா தமிழ் சங்கத்தினர் என்னை வரவேற்று பெரிய மாலை அணிவித்தனர். தமிழ் பெண் ஒருவர், பரோடா மாநகராட்சி உறுப்பினராக இருக்கிறார். அவரும் இந்த பேரணியில் பங்கேற்றார். தமிழ்ச் சங்க நிர்வாகிகளுடன் சிறிது நேரம் பேச முடிந்தது.

பிரதமர் மோடி மீது அபரிதமான அன்பு

பிரதமர் மோடி மீது அபரிதமான அன்பு

குஜராத்தில் எங்கு பார்த்தாலும் பிரதமர் மோடி மீது அம்மக்கள் வைத்திருக்கிற அன்பு பிரமிக்க வைக்கிறது. அதுபோல பாஜக மீதும் பெரும் மரியாதை கொண்டுள்ளனர். தொழில் செய்வதில் குஜராத்திகள் காட்டும் ஆர்வம் எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்று நினைக்கிறேன். குஜராத்திகள் என்ற பெருமிதம் அனைவருக்குமே உள்ளது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, குஜராத் முதல்வர் பூபேந்திர பாடேல், மாநிலத் தலைவர் சி.ஆர். பாட்டீல் உள்ளிட்டோர் கடும் உழைப்பை கொடுத்துள்ளனர். குஜராத்தில் பாஜக தலைவர்கள் தங்களோடு சேர்த்து கட்சியையும் வளர்த்துள்ளனர். கட்சி வளர்ச்சிக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் அனைவருக்குமே ஒரு பாடம். தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது. அது இதுவரை காணாத வரலாற்று வெற்றியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

English summary
Tamilnadu BJP MLA Vanathi Srinivasan prediceted that BJP will get historical win in Gujarat Assembly Elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X