ஆடிப்பெருக்கு நாளில் சொத்து வாங்க போறீங்களா? பதிவுத்துறைக்கு கூடுதல் வருவாய் தரும் பெயிரா யோசனை என்ன
சென்னை: வரும் ஆகஸ்ட் 3 ஆடிப்பெருக்கு நாளில் சொத்துப் பதிவிற்காக சார் பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால், கூடுதல் டோக்கன்கள் வழங்க FAIRA கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்புவதை தவிர்க்கவும், குடிநீர் மற்றும் நிழற்குடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவும் பதிவுத்துறைத் தலைவருக்கு டாக்டர் ஆ. ஹென்றி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் ஆடிப்பெருக்கு என்றாலே ஒரு தனி சந்தோஷம்தான்! ஆடி 18-ஆம் நாளில் எது தொடங்கினாலும் அது பல மடங்காகப் பெருகும் என்பது நம் மக்களின் ஆழமான நம்பிக்கை.

அதனால்தான், ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு நாளில் தமிழகம் முழுவதும் புதிய வீடுகள், மனைகள், விவசாய நிலங்கள் வாங்குவது, குடும்ப பாகப்பிரிவினை செய்வது மற்றும் தானப்பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய சொத்து ஆவணங்களைப் பதிவு செய்ய மக்கள் கூட்டம் அலைமோதும்.
ஆடிப்பெருக்கு சொத்துப்பதிவு
அந்தவகையில், வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி திங்கட்கிழமை ஆடிப்பெருக்கு வரவுள்ளது. அன்றைய தினம், தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப் பதிவு அலுவலகங்களில் டோக்கன் வாங்குவதற்காக அதிகாலையிலேயே ஆசையோடு வரும் பொதுமக்கள், டோக்கன் கிடைக்காமல் ஏமாற்றத்தோடும் வருத்தத்தோடும் வீடு திரும்பிவிடக் கூடாது என்பதில் FAIRA அமைப்பு தீவிரமாக உள்ளது.
ஆடிப்பெருக்கு நாளன்று பொதுமக்கள் சிரமமின்றி பத்திரப்பதிவு செய்ய ஏதுவாக, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (FAIRA) தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி, தமிழ்நாடு பதிவுத்துறைத் தலைவருக்கு ஒரு முக்கியமான கடிதத்தை எழுதியுள்ளார். பொதுமக்களின் அலைச்சலைத் தவிர்க்க சில முக்கியக் கோரிக்கைகளை அவர் அதில் முன்வைத்துள்ளார்.
பத்திரப்பதிவு - கூடுதல் டோக்கன்கள்
முதலாவதாக, ஆடிப்பெருக்கு நாளில் வழக்கமாகத் தரும் டோக்கன்களை விட கூடுதல் டோக்கன்களை வழங்க வேண்டும். இரண்டாவதாக, அன்றைய தினம் கூடும் கூட்டத்தைச் சமாளிக்கவும், பத்திரங்களைச் சீக்கிரமாகச் சரிபார்க்கவும் கூடுதல் அதிகாரிகளையும் ஊழியர்களையும் நியமிக்க வேண்டும்.
மூன்றாவதாக, வழக்கமாக நடக்கும் அந்த "சர்வர் கோளாறு" பஞ்சாயத்து இந்த முறையாவது வரக்கூடாது. இணையதள சேவைகள் எந்தத் தடங்கலும் இல்லாமல் இயங்குவதைப் பதிவுத்துறை உறுதி செய்ய வேண்டும்.
நான்காவதாக, வெயிலில் காத்திருக்கும் முதியவர்கள், பெண்களுக்குக் குடிநீர், உட்கார நாற்காலி, நிழற்குடை போன்ற அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசுக்கு வருவாய் லாபம்
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றினால் மக்களுக்கு நேரமும் அலைச்சலும் மிச்சமாகும்; அதேசமயம் அரசுக்கும் முத்திரைத்தாள் மூலம் கிடைக்க வேண்டிய வருமானம் கணிசமாக உயரும். அதனால்தான் ஹென்றி இப்படியொரு வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இந்த ஆடிப்பெருக்கு நாளில் பத்திரப் பதிவு செய்ய வரும் எந்தவொரு நபரும் "டோக்கன் இல்லை" என்று சொல்லி ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லக்கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. பொதுமக்களின் நலன் கருதி பதிவுத்துறை இந்த கோரிக்கையை உடனடியாக ஏற்றுச் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது!


Click it and Unblock the Notifications
