தவெகவுக்கு பிராமணர் சங்கம் ஆதரவு.. முதன்முறையாக ஓபனாக அடித்த சாதிய அமைப்பு.. விஜய்க்கு பிளஸ்?
சென்னை: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெகவிற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக தமிழ்நாடு பிராமணர் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திருநெல்வேலியில் நடைபெற்ற சங்கத்தின் மாநாட்டில் அதன் மாநிலத் தலைவர் நாராயணன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதுவரை எந்தவொரு சாதிய அமைப்பும் நேரடியாகத் தவெகவிற்கு ஆதரவு தெரிவிக்காத நிலையில், முதல்முறையாக பிராமணர் சங்கம் தனது ஆதரவை பகிரங்கமாக தெரிவித்திருப்பது அரசியல் களத்தில் பெரும் கவனத்தை பெற்று வருகிறது.
திருநெல்வேலியில் நடைபெற்ற தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில மாநாடு, நிர்வாகக் குழு, செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில மாநாடு
இந்த கூட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், முற்பட்டோர் நலவாரியம் அமைக்க வேண்டும், கோயில் நிர்வாகத்துக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும், அர்ச்சகர்களுக்கு முறையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநிலத் தலைவர் நாராயணன், "மதச்சார்பின்மை பேசும் அரசு ஹிந்து கோயில்களை மட்டும் நிர்வகிப்பது சரியல்ல. இஸ்லாமிய, கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களுக்கு தனி நிர்வாக அமைப்புகள் இருப்பதைப் போன்று, கோயில்களுக்கும் தனி வாரியம் அமைக்க வேண்டும். இதன் மூலம் கோயில் நிர்வாகக் குளறுபடிகளைச் சரிசெய்ய முடியும்.
முதல்வர் ஜோசப் விஜய் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். அவர் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்ய வேண்டும். பெரும்பான்மை இல்லாததால் பல்வேறு அரசியல் கட்சிகள் அவரை மிரட்டி வருகின்றன. தமிழகத்தில் நடக்கவுள்ள 5 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களிலும் தவெகவுக்கு முழு ஆதரவு அளிக்கிறோம்" என்றார்.
தவெகவுக்கு பிளஸ் பாயிண்ட்டா?
தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் இந்த அறிவிப்பு தவெகவுக்கு அரசியல் ரீதியாக ஒரு ஆதரவாகப் பார்க்கப்படலாம். குறிப்பாக, விஜய்யின் அரசியல் நிலைப்பாடு, அவரது ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் அமைப்புகள் குறித்த விவாதங்கள் நடந்து வரும் நிலையில், ஒரு சமூக அமைப்பு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆனால், இந்த ஆதரவு மட்டும் தவெகவின் தேர்தல் வெற்றியைத் தீர்மானித்துவிடும் என்று சொல்ல முடியாது. ஒரு அமைப்பின் ஆதரவு, அந்தச் சமூகத்தைச் சேர்ந்த அனைவரின் வாக்குகளும் ஒரே கட்சிக்கு செல்லும் என்பதற்கான உத்தரவாதமும் கிடையாது. இடைத்தேர்தல்களில் இந்த ஆதரவு எந்த அளவுக்கு வாக்குகளாக மாறுகிறது என்பதுதான் முக்கியம்.
பாஜகவுடன் நெருக்கம்
ஏற்கனவே தவெக, பாஜகவுடன் நெருக்கமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், பிராமணர் சங்கத்தின் ஆதரவு புதிய அரசியல் விவாதத்துக்கு வழிவகுக்கலாம். குறிப்பாக, சமூக நீதி, இடஒதுக்கீடு, மதச்சார்பின்மை போன்ற விவகாரங்களில் தவெகவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்ப வாய்ப்புள்ளது.
அதேசமயம், ஒரு சமூக அமைப்பு ஆதரவு தெரிவித்திருப்பதை வைத்து மட்டும் தவெக பாஜகவுடன் இணைந்து செயல்படுகிறது என்ற முடிவுக்கும் வந்துவிட முடியாது. அந்த அமைப்பின் ஆதரவை விஜய் எப்படிப் பயன்படுத்துகிறார், அதன் பின்னணியில் ஏதாவது அரசியல் புரிதல் இருக்கிறதா, தவெக தலைமை இதற்கு என்ன பதில் அளிக்கிறது என்பவை முக்கியமானவை.
தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமைப்புகள் அதிகரிக்கிறதா என்பதுடன், அந்த ஆதரவு தேர்தல் களத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதும் இங்கு கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.
ஆக, பிராமணர் சங்கத்தின் அறிவிப்பு விஜய்க்கு ஆதரவாக அமையுமா, அல்லது எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு மேலும் ஒரு காரணமாக மாறுமா என்பது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளில்தான் தெரியவரும்...!!



Click it and Unblock the Notifications
