பட்ட பாடெல்லாம் போச்சே.. ரிஸ்க் எடுக்கும் எடப்பாடி.. டிட்டோ "அவங்கள" மாதிரியே.. இதெல்லாம் சாத்தியமா?
சென்னை: 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற வியூகத்தை எடப்பாடி பழனிசாமி கையில் எடுக்க உள்ள நிலையில், அது எந்த அளவுக்கு அவருக்கு கை கொடுக்க போகிறது? என்ற எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் எழுந்துள்ளது.
40 தொகுதிகளிலும் நாமே என்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பாணி ஆகும்.. கடந்த ஒரு வருட காலமாகவே, எடப்பாடி பழனிசாமி தன்னை, ஒரு ஜெயலலிதா போலவே நினைத்து கொண்டு செயல்படுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து சொல்லி வருகிறார்கள்.
உண்மையை சொல்லப்போனால், கடந்த ஆட்சியின்போது, ஒவ்வொரு நடவடிக்கையிலும் எடப்பாடி பழனிசாமி, ஜெ.பாணி அரசியலைதான் கையில் எடுத்தார்.
அண்ணாமலைக்கு போன கால்.. மிட் நைட் நேரத்தில்.. அந்த 2 பேரை பார்த்த எடப்பாடி! டெல்லியில் நடந்தது என்ன?

சென்ட்டிமென்ட்
இன்னும் சொல்லப்போனால், கடந்த முறை தேர்தலை திருப்போரூர் கந்தசாமி கோல் அருகேதான் எடப்பாடி துவக்கினார்.. இதற்கு காரணம், 1988ம் ஆண்டு, ஜெயலலிதாவுக்கு மிகப்பெரிய நெருக்கடியை தந்த வருடம்.. அந்த தேர்தல் அவருக்கு மிகவும் சவாலான தேர்தலாக இருந்தது.. அந்த சூழலில், திருப்போரூர் வந்த ஜெயலலிதா, கந்தசுவாமி கோவில் அருகேதான், வேனில் இருந்தபடிதான் தன் பிரச்சாரத்தை துவக்கினார். கடந்த தேர்தலும் எடப்பாடிக்கு சவாலை தந்த நிலையில், இந்த இடத்தில் இருந்தே தன் பிரச்சாரத்தை துவக்கியதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.

டேமேஜ்
ஒவ்வொரு முறையும் அதிமுக கூட்டங்களில் பேசும்போது, திமுகவை எந்த அளவுக்கு டேமேஜ் செய்து பேசுகிறாரோ அதே அளவுக்கு, ஜெயலலிதா மீது போட்ட பொய் வழக்குகளையும், அந்த வழக்குகளில் இருந்து, அவர் மீண்டு வந்ததையும் சுட்டிக்காட்டுவதுடன், அதுபோலவே தானும் திமுகவை எதிர்த்து களமாடி வருவதாக பறைசாற்றி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.. ஜெயலலிதாவே போலவே தன்னையும் ஒரு ஆளுமை மிக்க தலைவராக தொண்டர்களிடம் காட்டிக்கொள்ளவே இப்படியான அனுதாப உரைகளையும் எடப்பாடி கையில் எடுத்து வருவதாக தெரிகிறது.

தலைகீழ் மாற்றம்
முதல்வர் மற்றும் பொதுச்செயலாளர் என்ற இந்த இரண்டு பதவியையுமே மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடைசிவரை விடாமல் தன்னிடம் வைத்திருந்ததுபோலவே, அந்த பதவிகளை தன்னகத்தே வைத்து கொள்ள எடப்பாடி எடுத்து வரும் முயற்சிகள் முதல், தன்னுடைய தலைமையில் அதிமுக மெகா கூட்டணி அமையும் என்று அறிவித்தது வரை அனைத்துமே ஜெ.பாணி அரசியலாகவே பார்க்கப்படுகிறது.. அதேபோல, பாஜகவின் முழு ஆதரவு என்பது கடந்த 6 மாத காலமாகவே எடப்பாடி பழனிசாமிக்கு கிடைக்கவில்லை என்றே சொல்லலாம்..

ப்ளான் 1
அதேசமயம், பாஜகவுக்கு எதிரான ஒரு மனநிலையை கடந்த சட்டப்பேரவை தேர்தலிலேயே எடப்பாடி எடுத்துவிட்டதாக சொல்கிறார்கள். உதாரணமாக, தேர்தலின்போது, தமிழக பாஜகவுக்கு 60 சீட் வேண்டும் என்று கேட்டார்கள்.. அதேபோல பாஜக சொல்லும் நபர்தான் முதல்வர் வேட்பாளர் என்றும் சொல்லி கொண்டே இருந்த நிலையில், கடைசி நேரத்தில் 20 சீட்டுக்களை மட்டும் பாஜகவுக்கு ஒதுக்கி தந்து, செயலில் தன் நிலைப்பாட்டை காட்டியிருந்தார்..

ப்ளான் 2
தேர்தல் சமயத்தில், தினகரன், சசிகலாவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும்படி மேலிட தலைவர்கள் சொன்னபோதும்கூட, "எந்த காலத்திலும், சசிகலாவுக்கு கட்சியில் இடமில்லை" என்று திட்டவட்டமாக ஆன் தி ஸ்பாட்டில் அறிவித்து, தன்னுடைய நிலைப்பாட்டை மறுபடியும் நிரூபித்திருந்தார்.. அதில் இன்றுவரை உறுதியாகவும் இருந்து வருகிறது.. ஆக, ஒவ்வொரு விஷயத்திலும் தன் அரசியல் நிலைப்பாட்டில் திடமாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறாரே தவிர, பாஜகவை எதிர்த்து அவர் அரசியல் செய்ததாக இதை வைத்து கருத முடியாது என்கிறார்கள்.. "அமித்ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று சொன்னதுகூட, இந்த அடிப்படையில்தான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்

திருமாவளவன்
போதாக்குறைக்கு மெஜாரிட்டி ஆதரவாளர்களை, தன்பக்கம் வைத்திருக்கும் நிலையில், 40 தொகுதிகளிலும் நாமே என்ற முழக்கத்தை துணிந்து அவர் எடுத்திருக்கலாம்.. அதற்கேற்றபடி, கூட்டணி விஷயமும் எந்த பக்கமிருந்தும் உறுதியாக இதுவரை அமையவில்லை.. பாரிவேந்தர் பாஜக பக்கம் போக போகிறார், தேமுதிக, பாமக திமுக பக்கம் ஆர்வம் காட்டி வருகின்றன.. கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் தடுமாற்றத்தில் இருந்தாலும், இதுவரை வெளிப்படையாக அதிமுக கூட்டணி பற்றி சொன்னதில்லை.. திருமாவளவன் திமுக கூட்டணிதான் என்று நேற்றுமுன்தினம்கூட கிருஷ்ணகிரியில் உறுதியாக சொல்லிவிட்டார்..

ஓபன் டாக்
அதற்கேற்றவாறு, பாமக உடனான கூட்டணி பற்றி எடப்பாடி பழனிசாமி இதுவரை எதுவுமே சொல்லாமல் உள்ளார்.. மநீமய்யமும், திமுகவுடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டி வருகிறது.. ஜிகே வாசனை பொறுத்தவரை பாஜக பக்கமே சாய்வார் என்கிறார்கள்.. புதிய தமிழகம் கட்சியும் பாஜகவின் நன்மதிப்பை பெறவே முயற்சிக்கும்.. அந்தவகையில், அதிமுகவுடன் இபபோதைக்கு கூட்டணி வைக்க தயாராக இருப்பவர்கள் யார் என்பது வெளிப்படையாக தெரியவில்லை. அதேசமயம், பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு இதுவரை சொன்னதில்லை.

40/40
அந்தவகையில், எடப்பாடியுடன் எந்த கட்சி இப்போதைக்கு இருக்கிறது என்றே தெரியாத சூழலில், 40 தொகுதிகளிலும் நாமே என்ற முடிவுக்கு, அவர் வேண்டியதாயிற்றா என்ற சந்தேகம் எழுகிறது. ஒருவேளை எடப்பாடி பழனிசாமி தனித்து நிற்கும் சூழல் வந்தால், அது நிச்சயம் அவருடைய துணிச்சலையும், ஆளுமையையும் மீண்டும் ஒருமுறை நிரூபிப்பதற்கான வாய்ப்பாகவே அமையும்.. அத்துடன் வெற்றியும் பெற்றுவிட்டால், தனிப்பெரும் தலைவராகவே உருவெடுக்கவும் கூடும்.. "நாற்பதும் நமக்கே" என்ற ஜெயலலிதாவின் கனவை எடப்பாடி பழனிசாமி நிச்சயம் நிறைவேற்றுவார் என்று மூத்த தலைவர் தம்பிதுரை சொல்வது பலிக்குமா? என்னதான் நடக்க போகிறது? பார்ப்போம்..!!