• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

போடுங்கம்மா ஓட்டு.. நல்லவர்களை பார்த்து!

|

சென்னை: தமிழகத்தின் வளர்ச்சி விதை ஆழமாய் வேரூன்ற, எந்த ஆளுமைக்கு வேலை கொடுத்து நம் தேவைகளை செவ்வென சீரமைக்க வேண்டும் என்று உறுதிபட முடிவெடுக்க, இதுவே கடைசி தருணம்.

அடுத்த ஐந்து வருடம் பயணம், அசுர வளர்ச்சி மற்றும் சமூக நலன் நோக்கிய தெளிந்த பயணமா என்பதை அழுத்தமாக தீர்மானிப்பவர்கள் யாரோ தெருவில் செல்லும் பாதசாரி அல்ல. நீங்கள் தான். நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜனநாயக பங்களிப்பே - நாளைய தமிழகம்.

Caste your Vote to the right person

நாம் ஓட்டளிப்பது எப்படி மிக முக்கிய மக்களாட்சி கடமையோ, அதேபோல உங்கள் தொகுதியின் வேட்பாளரை தெரிவு செய்வதும் மிக முக்கியமே. நீங்கள் தேர்ந்தெடுக்கும் உங்கள் தொகுதியின் வேட்பாளர், நன்கு படித்தவரா, படிக்காதவரா, வசதியானவரா, பெரிய கட்சியின் பின் புலத்தில் இருப்பவரா, இல்லாதவரா என்ற தேவையற்ற, எதற்கும் பயனற்ற வரைமுறைகளை கணக்கில் எடுக்காமல், சாதி, மத, நிற, பாலின அடையாளங்கள் கடந்து அவரின் தனிப்பட்ட தகுதிகளை, திறமைகளை மட்டுமே உற்று நோக்கி தேர்ந்தெடுங்கள்.

முக்கியமாக பணமும்,பதவி வெறியும் இல்லாத, நேர்மையை விரும்பும் உங்களில் ஒருவர் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தும் ஒருவரை தேர்வு செய்யுங்கள். அதைவிட முக்கியம், கொடுக்கும் செயலை செய்து முடிக்கும் நெஞ்சுரம், துணிவு உள்ளவரா என்று பாருங்கள்.

உங்கள் தொகுதியின் உடனடி தேவைகள் மற்றும் பிரச்சனைகள் பற்றிய ஆழமான புரிதல், சமூக நலனில் அவருக்குள்ள அக்கறை, சுயநலமில்லாத தொலைநோக்கு பார்வை , உங்களுக்காக உழைப்பார் என்கிற எண்ணத்தை வெளிப்படுத்தும் ஆளுமை,அனுபவம் இருக்கிறதா என்று நோக்குங்கள். அவர் கொடுக்கும் வாக்குறுதிகள் மற்றும் அவர்கள் கட்சியின் தேர்தல் அறிக்கைகளை படித்து, ஆழமாய் சிந்தித்து, உங்களுக்கு உண்மையிலே அது பயனுள்ளவையா, அவரால் செய்ய கூடியதா, அவர் சார்ந்த கட்சி அதனை செயல்படுத்தும் என்று நம்பிக்கை உள்ளதா என்று சிந்தித்த பிறகு வேட்பாளரை தேர்வு செய்யுங்கள்.

படிக்கும் வயதில், பிடித்த துறையை தேர்ந்தெடுத்து படிக்கிறோம். வேலைக்கு செல்லும் போது பிடித்த நிறுவனத்தில் வேலை கிடைக்க ஆர்வமாய் உழைத்து அதில் சேருகிறோம். ஒரு மடிக்கணனி அல்லது கைபேசி வாங்க வேண்டும் என்றால் கூட வலைத் தளம் முழுதும் தேடி, நண்பர்களோடு கலந்து பேசி பின் வாங்குகிறோம்.

இப்படி, வாழ்க்கையின் ஒவ்வொரு அடியும் பலத்த அழுத்தங்களுக்கு இடையில் மட்டுமே முடிவு செய்கிறோம்.ஆனால், நம்மை ஐந்து ஆண்டுகள் நிர்வாகம் செய்ய போகும் ஆளுமைக்கு அடிப்படை தகுதி நேர்மையும், செய்து முடிக்கும் ஆற்றலும் இருக்கிறதா என்று ஆழமாய் ஆராயாமல் யாரோ ஒருவரை அல்லது பாரம்பரியம் என்று தேர்வு செய்யும் தவறை மட்டும் செய்து விடாதீர்கள்.

இதைவிட மிக முக்கியம். உங்களின் வாக்குகளை யாரோ தரும் சில ஆயிரத்துக்கு விற்று விடாதீர்கள் உறவுகளே. சமூக விரோதமாக, ஜனநாயக முறைக்கு எதிராக, அவர்கள் கொடுக்கும் சில ஆயிரத்திற்கு நீங்கள் விற்பது உங்கள் வாக்குகளை அல்ல. உங்கள் அடிப்படை உரிமையை.! உங்கள் வரிப் பணத்தை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று கேள்வி கேட்கும் தார்மீக உரிமையை குழி தோண்டி நீங்களே புதைத்து விடாதீர்கள். பின், அடுத்த ஐந்து வருடம் உங்கள் தொகுதி சீரமையாமல் இருக்க நீங்களே பாதை அமைத்து தந்த அவல நிலைக்கு ஆளாக வேண்டும். சிந்தியுங்கள். கொடுப்பவர் குற்றவாளி எனில் வாங்குபவரும் குற்றவாளியே.! சட்டம் சொல்கிறது.

தமிழகத்தில் மட்டும் இதுவரை தேர்தல் பறக்கும் படை 420 கோடி ருபாய் கணக்கில் வராத பணத்தை கைப்பற்றி இருப்பது, ஒவ்வொரு தேர்தலிலும் கேட்டு கேட்டு சலித்து போன, நிதர்சனமான - ஒரு பானை சோத்து பதம்.

ஒன்றை ஆழமாக நினைவில் கொள்ளுங்கள். பாரம்பரியம் மிக்க கட்சி, பண பலம் பொருந்திய வேட்பாளர், உங்கள் குடும்பம் பரம்பரையாக ஓட்டளிக்கும் கட்சி என, எந்த சமூக நலனிலும் அக்கறை இல்லாத, நேர்மையற்ற, சுயநலத்தின் பிம்பமாக இருக்கும் யாரோ ஒருவரை நீங்கள் தேர்வு செய்வது, கைநிறைய தீ கங்குகளை அள்ளி வயிறு நிறைய உண்பதற்கு சமம். எனவே, ஒரு நிமிடம் ஆழமாக சிந்தித்து முடிவெடுங்கள். உங்களின் தெளிந்த தேர்வு தான் நாளைய தமிழகம். அது சீரமைவதும், சீரழிவதும் உங்கள் விரலின் நுனியில் மட்டுமே உள்ளது.

இந்த தேர்தலில் உங்களின் வாக்கு, உங்கள் தொகுதியின் வளர்ச்சிக்கும், தமிழகத்தின் சமூக நலனுக்கும், அநீதிக்கும் எதிரான குரலாக ஓங்கி ஒலிக்கட்டும்.! மக்களாட்சி காப்போம்.! இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல், என்பதுதானே திருவள்ளுவர் வாக்கு.

எழுதியவர்: மாணிக்கம் விஜயபானு

டெக்சாஸ், ஆஸ்டின்

 
 
 
English summary
How one should caste his or her vote in Tamil Nadu assembly election?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X