புரட்சியாளர் என். சங்கரய்யா 100வது பிறந்த நாள்:நினைவுகளைப் பகிரும் திராவிடப் பேராசிரியர் மு.நாகநாதன்
சென்னை: தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் 8 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்த புரட்சியாளர்.. நம்மிடையே வாழும் மகத்தான போராளி.. இன்று 100-வது பிறந்த நாளை கொண்டாடும் செங்கொடிச் செம்மல் என். சங்கரய்யா குறித்த நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார் திராவிடர் இயக்க பொருளாதார பேராசிரியர் மு.நாகநாதன்.
Recommended Video
மூத்த அரசியல் தலைவர் என். சங்கரய்யா குறித்த பேராசிரியர் மு. நாகநாதனின் நினைவலைகள்.....

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல். - 441
அறம், முதிர்ச்சி, அறிவு வாய்ந்த சான்றோரின் துணையைக் கொள்வது திறன் என்றார் வள்ளுவர்.
அத்தகைய சான்றோரின் தோழமையும், நட்பும், பேரன்பும் நூறு ஆண்டு காணும் பெரியவர் சங்கரய்யா வழியாகப் பெற்றுள்ளேன் என்பது நான் பெற்ற பேறு. தமிழ்நாட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிறுவன உறுப்பினர், நிர்வாகி என்ற பெருமைக்கு உரித்தானவர் எனது மாமனார் ஜமதக்னி.
கார்ல் மார்க்ஸின் மூலதனம், மிகை மதிப்பு நூல்களின் 6 தொகுப்புகளைத் தமிழாக்கம் செய்தவர் ஜமதக்னி. 1930 களில் சிறையில் மார்க்சிய வகுப்புகளை நடத்தியவர் ஜமதக்னி.
"இந்தியாவிற்கு ஏன் சோசியலிசம்" என்ற நூலை 1934 ஆம் ஆண்டில் எழுதி 6 மாதங்கள் சிறைத் தண்டனை பெற்றவர் ஜமதக்னி. ஜூலை 15 நாளுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.
பொதுத் தொண்டிற்கு இலக்கணமாய் திகழ்ந்த பெருந்தலைவர் காமராசரும் பொதுவுடமை பொதுவாழ்விற்கு இலக்கியமாய் திகழும் பெரியவர் சங்கரய்யாவும் பிறந்த நாள் ஜூலை 15 ஆகும். பெருந்தலைவர் காமராசரும் எனது மாமனார் ஜமதக்னியும் கோவை சிறையில் ஒரே அறையிலிருந்தபோது மார்க்சியக் கருத்துகளைக் கேட்டறிந்ததாக என்னிடம் நெருக்கடிக் காலத்தில் பெருந் தலைவர் குறிப்பிட்டார். வேறு வேறு இயக்கங்களின் தலைவர்களை மார்க்சியம் இணைத்துள்ளதல்லவா!
காலத்தால் உருவான இத்தகைய உறவையும், நட்பையும் பேணிக் காப்பதில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், கட்சிகள் கடந்து காட்டும் அக்கறையையும் அன்பும் தனித்தன்மையானது. இது இன்று பெரியளவில் தேவைப்படுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்ஸிட் கட்சிகளின் துணை அமைப்புக்கள் நடத்தும் பல கருத்தரங்கங்களில் என்னை அழைத்து இருக்கிறார்கள். எனது உரையில் சுட்டப்படும் கருத்துகளை ஏற்று இருக்கிறார்கள்.

நான் முகநூலில் எழுதும் கட்டுரைகள் அவ்வப்போது தீக்கதிரிலும், ஜனசக்தி இதழ்களில் இடம் பெறுகின்றன. ஒரு முறை சிறந்த சிந்தனையாளர் மறைந்த, மறக்க முடியாத நண்பர் தா.பாஎன்னை கம்யூனிஸ்ட் கட்சிகளின் மருமகன் என்று அன்புடன் அழைத்தார்.
என்னை முதன்முதலில் கருத்தரங்கில் பங்கு பெறுவதற்கு அழைத்த குரல் பெரியவர் சங்கரய்யாவின் அன்புக்குரல் தான். 1998 ஆம் ஆண்டு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் , "கம்யூனிஸ்ட் அறிக்கை" வெளியாகி 150 ஆவது ஆண்டு நிறைவு விழா கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. எழுத்தாளர் சமுத்திரம், பெண் இயக்கத் தலைவர் மைதிலி சிவராமன் ஆகியோர் பங்கேற்றனர். அவ்விழாவில் கம்யூனிஸ்ட் அறிக்கையின் பொருளாதார தாக்கங்கள் பற்றிப் பேசினேன்.
அதன் பின்னர் பெரியவர்.சங்கரய்யாவோடு உருப்பெற்ற நட்பும்,அன்பும், கனிவும், தோழமையும் வலிமைப் பெற்றன. எனது மகன்கள் மணவிழா நிகழ்வுகளில் பங்கேற்றார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது பெயரனின் திருமண நிகழ்வில் எனது வாழ்விணையர் ஜமதக்னி சாந்தியோடு கலந்து கொண்டேன். மணமக்களை நாங்கள் வாழ்த்தும் போது, எனது வாழ்விணையரைப் பார்த்து, "அம்மா - இன்று காலையில் கூட உங்கள் அப்பாவை நினைத்துக் கொண்டேன் என்றார் பெரியவர் சங்கரய்யா.
அவரது பிறந்த நாளில் மகிழ்வோடு இன்னும் பல்லாண்டு ஆண்டுகள் வாழ வேண்டும் என எங்கள் குடும்பத்தின் அன்பினை, பேரவாவினைத் தெரிவித்து கொள்கிறேன். இவர் போன்ற எண்ணற்ற விடுதலை இயக்க போராளிகள் கண்ட கனவு இன்றும் நிறைவேறவில்லையே என்ற மன உறுத்தல் இல்லாமல் இருக்க முடியாதல்லவா! சமூகத்தை சாதி மத அடிப்படையில் வேற்றுமை உண்டாக்கி மாந்த நேயத்தைக் கீழ்மைப்படுத்தும் சனாதன ஆர்.எஸ்.எஸ் கும்பலின் ஆதிக்கம் ஒன்றிய ஆட்சியில் எதிரொலிக்கிறது அல்லவா?
ஊருக்கு, உலகிற்கு உணவு வழங்கும் வேளாண் குடியினர் கடந்த 8 மாதங்களாகத் தங்களின் வாழ்வுரிமைக்காகப் புது டெல்லியில் களம் கண்டு வருகின்றார்களே! வேளாண் குடியினருக்குப் பயிர் எது! களை எது என்று நன்றாகத் தெரிகிறது. பயிரோடு வளர்ந்து பயிரை அழிக்கும் களைப் போன்று பாசிசமும், கொடுங்கோன்மை நிறைந்த முதலாளித்துவமும் பொருளாதாரத்தையும், சமூகத்தையும், பெரும்பான்மையான மக்களையும் எல்லாத் தளங்களிலும், எல்லா நிலைகளிலும் எல்லா மாநிலங்களிலும் வீழ்த்தி வருகிறதே!
173 ஆண்டுகளுக்கு முன்பு மார்க்ஸ்- ஏங்கெல்ஸ் அதிகார குவிப்பைப் பற்றிக் குறிப்பிட்ட கருத்தியல் நமக்குக் கலங்கரை விளக்கம் போல வெளிச்சம் காட்டுகிறதே! "தனித் தனியாகப் பிரிந்து நிற்கும் மக்களையும், உற்பத்திக் கருவிகளையும், சொத்துக்களையும் முதலாளிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்கிறார்கள். இதனால் சிலர் கையில் சொத்துக்கள் சேர்வதும், உற்பத்தி சாதனங்கள் மையப்படுத்துவதும், மக்கள் ஒன்று திரட்டப்படுவதும் நிகழ்கின்றன. இதன் விளைவாக அரசியல் அதிகாரம் ஓரிடத்தில் குவிக்கப்படுகிறது.
தனித்தனி நலன்களையும், சட்டங்களையும், அரசுகளையும், வரிவிதிப்பு முறைமைகளையும் கொண்ட சுயாட்சியுடைய அல்லது தனித்தனியாக இயங்குகின்ற மாநிலங்கள் ஒரே சட்டத்தோடு, ஒரே வரிவிதிப்பு முறையோடு, ஒரே தேசிய வர்க்க நலனுக்காக, ஒரே அரசாக, ஒரே எல்லையோடு ஒரே நாடாகத் திணிக்கப்படுகிறது.
"The bourgeoisie keeps more and more doing away with the scattered state of the population, of the means of production, and of property. It has agglomerated population, centralised means of production and has concentrated property in a few hands . The necessary consequence of this was political centralisation. Independent, or but loosely connected provinces with separate interests, laws, governments, and systems of taxation, became lumped together into one nation, with one government, one code of laws, one national class interest, one frontier and one customs- traiff."
(Ref: Communist Manifesto-1848- Karl Marx - Frederick Engels - On the National and Colonial Questions,--Selected Writings - Edited by. Aijaz Ahamad - 2001- page 37)
மேற் குறிப்பிட்ட கருத்துருவில் சில சிறிய மாற்றங்கள் பல நாடுகளில் ஏற்பட்டிருக்கலாம்.
ஆனால் ஆட்சி யாருக்காக என்ற கோட்பாடு மட்டும், சில நாடுகளைத் தவிர்த்து, அன்றும் இன்றும் ஒன்றாகவே உள்ளதே! பல மொழிகள், பல இனங்கள், பல சமயங்கள், பல உணவுப் பழக்கங்கள், பல சமூக கட்டமைப்புகள் கொண்ட இந்தியா போன்ற ஒரு துணைக் கண்டத்தில் சனாதன சங்கிகளின் ஆட்டங்கள், பாட்டங்கள் மார்க்ஸ் ஏங்கெல்ஸின் கணிப்பைத் தாண்டி சமூகத்தில், நாட்டில் சீரழிவு தன்மைகளை அதிக அளவில் பெருக்கி வருகிறது.
ஒன்றிய அரசில் , நீதி நிர்வாக அமைப்புகளில், அளவிற்கு அதிகமாகக் குவிந்து வரும் அதிகாரங்கள் இவற்றை வெளிப்படையாக அடையாளம் காட்டி வருகின்றன.. பெரியவர் சங்கரய்யா பிறந்த நாளில் இத்தகைய தீய, கயமை மிக்க அரசியலை, இளைஞர்களை அணி திரட்டி, எல்லோரும் ஒன்றிணைந்து வீழ்த்துவதே நாம் அவருக்குச் செலுத்தும் பிறந்த நாள் வாழ்த்துகளாகும். அப்போது தான் பாசிசம் வீழும். உண்மையான மக்களாட்சி மலரும். வாழ்க சங்கரய்யா ! வாழ்க பல்லாண்டு!!
படம். ஜமதக்னி தமிழாக்கம் செய்த காரல் மார்க்சு மூலதனம் மிகை மதிப்பு நூல்களை வெளியிட்ட போது- மறைந்த முதல்வர்.கலைஞர், இடதுசாரி தலைவர்கள் கே.டி.கே.தங்கமணி, சங்கரய்யா, பெரியாரிய போராளி வே ஆனைமுத்து, சிலம்பொலி செல்லப்பன், எனது வாழ்விணையர் ஜமதக்னி சாந்தி, முன்னாள் அமைச்சர் தமிழ்க்குடி மகன்.












Click it and Unblock the Notifications