சென்னையில் 100+ இண்டிகோ விமானங்கள் ரத்து.. ஏர்போர்ட்டில் பரிதவிக்கும் பயணிகள்.. நிலைமை மோசம்
சென்னை: நாடு முழுக்க இண்டிகோ விமானச் சேவை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 5வது நாளான இன்றும் விமானச் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்றைய தினம் சென்னை விமான நிலையத்தில் 100+ இண்டிகோ விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் தொடர்ச்சியாக ரத்து செய்யப்படுவதால் பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் மிகப் பெரிய விமான நிறுவனமாக இருக்கும் இண்டிகோவின் சேவைகள் கடந்த சில நாட்களாகவே மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நாடு முழுக்க விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. சிறு நகரங்கள் மற்றும் பெரிய நகரங்களில் இண்டிகோ மட்டுமே சேவை வழங்கி வந்த நிலையில், இந்தப் பிரச்சினை பூதாகரமாக வெடித்தது.

கடந்த 4 நாட்களாகவே பல்வேறு நகரங்களிலும் விமான சேவை பாதிக்கப்பட்டது. குறிப்பாக டெல்லி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் எல்லா விமானங்களும் கூட ரத்து செய்யப்பட்டது. அந்தளவுக்கு விமான சேவை மிக மோசமாக இருந்தது. மத்திய அரசும் கூட இதில் நேரடியாகத் தலையிட்டு இண்டிகோ நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.
இதற்கிடையே இண்டிகோ விமானச் சேவை 5ஆவது நாளாக இன்றும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று (டிசம்பர் 07) 100 இண்டிகோ விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். மாற்று ஏற்பாடுகளும் போதியளவில் இல்லை என்பதால் பலரும் தங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்குப் போக முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு பைலட் மற்றும் விமான பணிக்குழுவுக்குப் புதிய விதிகளை அறிவித்திருந்தது. இருப்பினும், இண்டிகோ நிறுவனம் அந்த விதிகளை அமல்படுத்தத் தேவையான முன்னேற்பாடுகளை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications