இந்துக்களை திமுகவினர் தாக்கி பேசுவதால் பாஜக வளர்ந்து வருகிறது.. டிடிவி தினகரன் திடீர் கருத்து
சென்னை: ‛‛இந்துக்களை தாக்கி பேசி தமிழகத்தில் பாஜகவை திமுகவின் திராவிட மாடல் ஆட்சி தான் வளர்த்து வருகிறது. பாஜகவை கண்டு பயப்படும் திமுக, காங்கிரஸை கூட கூட்டணியில் இருந்து கழற்றிவிடும்'' என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சரமாரியாக குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் சொத்துவரி, மின்கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பை வெளிக்காட்டினர். இதற்கு மத்தியில் திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திமுக அரசுக்கு எதிராக கோஷமிடப்பட்டது. மேலும் சொத்து வரி, மின்கட்டணம் உயர்த்த மாட்டோம் எனக்கூறி பொதுமக்களை ஏமாற்றி விட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

சென்னையில் டிடிவி தினகரன் பேச்சு
இதேபோல் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதற்கு அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது டிடிவி தினகரன் பேசினார். அப்போது அவர் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக டிடிவி தினகரன் பேசியதாவது:

இந்துக்களை தாக்கும் திமுக-திருமா
திராவிடல் மாடல் திமுகவும், திருமாவளவனும் எதற்கெடுத்தாலும் இந்துக்களை தாக்கி பேசி வருகின்றனர். மதசார்பற்றவர்கள் என கூறும் நீங்கள் எந்த மதத்துக்கும் சார்பாக இருக்கக்கூடாது. யார் பாதிக்கப்பட்டாலும் அவருக்கு தோளோடு தோள் நின்று போராடக்ககூடியவர்கள் தான் அரசியல்வாதிகளே தவிர தனது விருப்பு, வெறுப்புக்கு செயல்படுபவர்கள் அல்ல.

சிறுபான்மையினர் ஏமாற மாட்டார்கள்
இந்து மதத்தை எதிர்த்து சிறுபான்மையினர்களின் ஓட்டுக்களை வாங்கலாம் என நினைக்கின்றனர். ஆனால் சிறுபான்மை மக்கள் ஏமாறமாட்டார்கள். ஏனென்றால் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்புக்கு வரும் முன்பு சிறுபான்மை மக்களுக்கு என்ன சொன்னார்?. 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுவிப்பதாக கூறினார். ஆனால் வெளியில் வர முடியாத அளவுக்கு அரசாணை போட்டுள்ளார்.

பாஜகவை பார்த்து பயப்படும் திமுக
பாஜகவுக்கு தமிழ்நாட்டில் பயப்படும் கட்சியினராக அதிமுக இல்லை. திமுகவினர் தான் பாஜகவை பார்த்து பயப்படுகின்றனர். மடியில் நிறைய கணம் இருப்பதால் பயம். இதுதான் உண்மை. இன்று தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதே திராவிட மாடல் தான். இந்த ஆட்சியால் திராவிடர்களாக இருப்பதில் வெட்கமாக உள்ளது. திமுகவின் ஒன்றரை ஆண்டு ஆட்சி என்பது மிகப்பெரிய தோல்வியடைந்துள்ளது. அவர்களின் குடும்பம் மட்டும் தான் வாழ்கிறது.

காங்கிரஸை கழற்றிவிடும் திமுக
பாஜகவை காட்டி சிறுபான்மை மக்களை திமுக பயமுறுத்துகிறது. பாஜகவுக்கு நான் சப்போர்ட் செய்யவில்லை. பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் ஆகிறது. அவர்கள் நம்மை என்ன செய்துவிட்டார்கள்?. எஸ்டிபிஐ நம் கூட்டணியில் உள்ளனர். அவர்களின் கட்சியை தடை செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என தேர்தல் ஆணையமே கூறிவிட்டது. நான் யாருக்கும் வக்காலத்து வாங்கவில்லை. மகாராஷ்டிரா போன்ற நிலை தமிழகத்தில் வந்துவிடக்கூடாது என்பதற்காக திமுக தேர்தல் நேரத்தில் காங்கிரஸை கூட கூட்டணியில் இருந்து வெளியேற்றிவிடும். இன்று இந்து, சனாதானம் ராஜராஜன் சோழன் என திமுகவின் பேசுகின்றனர். இந்துக்கள் ஒன்றிணையாமல் இருக்க தமிழ்நாட்டில் இப்படி பேசுவதால் தான் பாஜக வளர்கிறது'' என்றார்.












Click it and Unblock the Notifications