போஸ்டர் ஒட்டினால் அபராதம்.. 2 குப்பைத் தொட்டி இல்லையா? அபராதம்..- சென்னையில் வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: இப்போது சென்னை பெருநகர மாநகராட்சி பழைய மாதிரி இல்லை. சென்னையைச் சிங்கப்பூராக மாற்ற வேண்டும் என்பதே முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவு. அவர் சென்னை மேயராக இருந்தபோதே அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டார். அவரது பதவிக் காலத்தில்தான் சென்னையில் பல மேம்பாலங்கள் கட்டப்பட்டன.
இப்போது முதன்முறையாக அவர் முதல்வராகப் பதவியேற்றவுடன் சென்னை நகரத்தை உலகத்தரத்திற்கு இணையாக மாற்ற வேண்டும் எனப் பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

சென்னை பெருநகர மாநகராட்சி திமுகவின் கையில்தான் உள்ளது. மேயராக பிரியா பதவியேற்ற பிறகு சென்னையின் முகம் ஏறக்குறைய மாற்றம் பெற்றுள்ளது. குறிப்பாகப் பாதாளச் சாக்கடைகள் பணி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதன் பயனாகக் கடந்த ஆண்டு மழை வெள்ளத்தில், சென்னை பாதிக்கவே இல்லை. மின்னல் வேகத்தில் வெள்ளநீர் வடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதைப் பல பத்திரிகைகள் பாராட்டி இருந்தன. சமூக வலைத்தளங்களில் பலரும் சென்னை பெருநகர மாநகராட்சியின் பணிக்கு வாழ்த்துக் கூறி இருந்தனர்.

1639இல் ஒரு சிறு நிலப்பகுதியாக இருந்த சென்னை:
சென்னையை உயரத்திற்கு உயர்த்துவதற்காக பெருநகர மாநகராட்சி செயல்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக, நலமிகு சென்னை, நம்ம சென்னை சிங்கார சென்னை, சீர்மிகு சென்னை, தூய்மை சென்னை, கல்வியில் சென்னை எனப் பல்வேறு ஹேஷ்டேக்குகளின் கீழ் பம்பரமாக பணியாற்றி வருகிறார்கள் மாநகராட்சியின் ஊழியர்கள்.
எவ்வளவு பெரிய திட்டம் போட்டாலும் சென்னை என்பது மக்கள் பெருக்கத்தால் அன்றாடம் நிரம்பி வழியக்கூடிய நகரமாகவே உள்ளது. ஆகவே இதனை முறைப்படுத்துவது பெரிய சவால். ஏறக்குறைய 400 ஆண்டுகளில் சென்னை படிப்படியாக வளர்ந்து இன்றைக்கு உலகில் மிக முக்கியமான பெருநகரங்களில் ஒன்றாக உள்ளது.

2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இந்திய அளவில் 6வது பெரிய நகரமாகச் சென்னை உள்ளது. பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியால் 1639 ம் ஆண்டு ஒரு சிறு நிலப்பகுதியில் உருவான மதராசபட்டினம் பின்பு படிப்படியாக விரிவடைந்து தற்போதைய நிலையை அடைந்துள்ளது.
இந்த மக்கள் தொகைப் பெருக்கத்தால், இந்நகரம் அதிகமாக மாசடைந்து வருகிறது. தலையாய பிரச்சினையாகக் குப்பைகள் உள்ளன. எரிக்க எரிக்க அதன் எல்லைகள் விரிந்துகொண்டே செல்கின்றன. ஆகவேதான் குப்பைகளை பயோமைனிங் முறை கையாளப்பட்டு, அழிக்கப்படுகின்றன. குப்பைகளை மக்குவது, மக்காதது என்று தரம் பிரித்து அதனை மறுசுழற்சிக்கு உட்படுத்தி வருகின்றனர்.

அதேபோல இப்போது பெருநகர சாலைகள் Sand sweeping முறையில், அதாவது எந்திரங்களைக் கொண்டு சுத்தம் செய்யப்படுகின்றன.
முடிந்த மட்டும் நகரச் சாலைகளில் பசுமையை உருவாக்கும் விதமாக அழகு செடிகள், தெருவோர பூங்காக்களை உருவாக்கப்படுகின்றன. இரவு நேரங்களில் அரசுக்குச் சொந்தமான ரிப்பன் பில்டிங் போன்ற கட்டடங்களில் மற்றும் பெரிய பாலங்களில், சுரங்க நடைபாதைகளில் வண்ண மின்விளக்குகளைப் பொருத்தி அழகுபடுத்தி வருகின்றனர்.

வண்ணமயமாக மாறிவரும் சென்னை:
அதேபோல பறக்கும் ரயில் நிலையம், விமானநிலையத்தின் சுற்றுச்சுவர், மெட்டோ ரயிலுக்காக அமைக்கப்பட்ட உயர்மட்ட தூண்கள் என அனைத்திலும் நமது பாரம்பரிய வரலாற்று அல்லது இலக்கிய நாயகர்களின் திரு உருவங்களை ஓவியங்களாக வரைந்து வருகின்றனர்.
இந்த ஓவியங்களால், பயணிகளின் மனநிலையே சமீப காலங்களாக மாறுதல் அடைந்துள்ளது. சாலைப் பயணம் என்பதே ஒரு மகிழ்ச்சிப் பயணம் என்ற நிலையை படிப்படியாக மாநகராட்சி செய்து தந்து வருகிறது.

இவை போக, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட, நீதிமன்றக் கட்டடம், விக்டோரியா ஹால் போன்ற பாரம்பரிய கட்டடங்களைப் புனரமைத்து அழகாக்கி வருகிறது. மெரினா கடற்கரை இதுவரை இல்லாத ஒரு சாதனையாக, மாற்றுத்திறனாளிகள் கடல் அலைகளில் கால் நனைக்கும்படி, ஒரு தரமான தரைப்பாலத்தை அமைத்துத் தந்துள்ளது.
இதைத்தவிர்த்து, சென்னை பெருநகரத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் ஒருங்கிணைந்த கட்டளைக் கட்டுப்பாடு மையத்தை முழுத் திறனோடு செயல்பாட்டிற்குள் வைத்துள்ளனர்.

எப்படி சென்னை மாநகராட்சிக்குக் குப்பைகள் ஒரு தலைவலியாக உள்ளதோ, அதே அளவுக்கு இந்தச் சுவரொட்டிகள் அதிகம் தொல்லை தரும் பிரச்சினையாக இருந்து வருகிறது.
குப்பையைத் தரம் பிரித்துத் தராவிட்டால், 100 ரூபாய் அபராதம் எனக் கடந்த 10 மாதங்களுக்கு முன் மாநகராட்சி அறிவித்தது. அதேபோலவே கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக குப்பைக் கொட்டியவர்கள், சுவரொட்டி ஒட்டியவர்கள், கட்டிடக் கழிவுகளைச் சரியாகப் பராமரிக்காதவர்கள் மீது 22.22 லட்சம் ரூபாயை அபராதமாக விதித்தது சென்னை மாநகராட்சி.

பொதுமக்களைத் தாண்டி, சென்னை மாநகராட்சி மின் விளக்குகளைச் சரியாகப் பராமரிக்காத ஒப்பந்ததாரர்கள் மீதும் கடந்த 6 மாதம் முன்னதாக அபராதத்தை வித்தது. ஏறக்குறைய 89.56 லட்சம் ரூபாய் இந்த அபராதத் தொகை என்றும் அறிவித்தது.
ஏறக்குறைய இந்த அபராதம் 10 மாதங்களில் விதிக்கப்பட்ட தொகை என்றும் அறிவித்திருந்தது. கடந்த 4 மாதங்கள் முன்னதாக 2 குப்பைத் தொட்டிகள், அதாவது மக்கும் குப்பை மக்காத குப்பை எனப் பிரித்து தொட்டி வைக்காத கடைகள் மீது ரூ.1.04 லட்சம் அபராதம் விதித்து அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டது.

சென்னை மாநகராட்சியின் அதிரடி அபராத வசூல்:
இப்போது சென்னை மாநகராட்சி அதன் ட்விட்டர் பக்கத்தில் கடந்த 11.01.2023 முதல் 01.02.2023 வரை திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, இராயபுரம், திருவிக நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் என ஆக மொத்தம் 15 மண்டலங்களில் மேற்கூறிய காலவரம்புக்குள் தெருக்களின் வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகைகள் மீது சுவரொட்டிகள் ஒட்டும் நபர்கள் மீது காவல்துறையில் புகார் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டவர்களின் விவரங்கள் பட்டியலாக வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, அடையாறு பகுதியில் மட்டும் அதிகப்படியாக 20,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிகப்படியாக தண்டையார்பேட்டையில் மட்டும் 279 புகார்கள் காவல்நிலையத்தில் பதிவாகி உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த 15 மண்டலங்களுக்கான பட்டியலில் மொத்தமாக 1,61,150 ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது. 716 புகார்கள் மொத்தமாகக் காவல்நிலையத்தில் பதியப்பட்டுள்ளன என்றும் தெரியவந்துள்ளது.
இதேபோல் 18.02.2023 முதல் 03.03.2023 வரை மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 2385 சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதன் மூலம் மட்டும் 5,69,200 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் மேற்கூறிய அதே 15 மண்டல பகுதிகளுக்கு உள்ளாகவே வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மண்டல வாரியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட விவரப் பட்டியலையும் மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில், மேற்சொன்ன அதே 15 மண்டல பகுதிகளில் 06.02.2023 முதல் 17.02.2023 வரை மட்டும் 440 தற்காலிக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. முன்னதாக 17.06.2022 முதல் 17.02.2023 வரை மொத்தமாக இதுவரை 3989 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

நிரந்தர ஆக்கிரமிப்புக்கள் பொறுத்தவரை அதே 06.02.23 முதல் 17.02.23 வரை 268 ஆக்கிரமிப்புகளும் 17.06.23 முதல் 17.02.23 வரை மொத்தமாக 2730 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, இராயபுரம், திருவிக நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் என ஆக மொத்த 15 மண்டலங்களில் குப்பைக் கொட்டிய நபர்களிடம் இருந்து பெறப்பட்ட அபராத தொகை விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது புகார் & அபராதம்:
அதன்படி, திருவொற்றியூர் ரூ 36,300, மணலி ரூ 22,500, மாதவரம் ரூ 56,000, தண்டையார்பேட்டை ரூ 51,500, இராயபுரம் ரூ 56,700, திருவிக நகர் ரூ 52,800, அம்பத்தூர் ரூ 64,300, அண்ணா நகர் ரூ 58,000, தேனாம்பேட்டை ரூ 103,100, கோடம்பாக்கம் ரூ 52,300, வளசரவாக்கம் ரூ 82,000, ஆலந்தூர் ரூ 56,000, அடையாறு ரூ 71,500, ஆலந்தூர், பெருங்குடி ரூ 74,000, சோழிங்கநல்லூர் ரூ 86,000 என ஆக மொத்தம் 9,23,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அதே மண்டலங்களில் கட்டுமான கழிவுகள் கொட்டிய நபர்களிடம் இருந்து மொத்தம் ரூ 7,68,890 வசூலிக்கப்பட்டுள்ளது. சுவரொட்டி ஒட்டியவர்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்த அபராதம் ரூ 1,36,900 எனக் கூறப்பட்டுள்ளது.

இதே மண்டலங்களில் கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு விதிக்கப்பட்ட மொத்த அபராதம் ரூ 5,09.500 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தளவுக்கு அதிரடியான அபராதங்களை விதித்தும் சென்னை மக்கள், சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சுகாதாரத்தைக் காப்பாற்றுவதில் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை. அதற்கான முயற்சியாக இந்த அபராத நடவடிக்கைகள் இருக்கும் என்பதில் இரண்டுவிதமான கருத்துகள் இருக்க வாய்ப்பில்லை.













Click it and Unblock the Notifications