டெலிவரி ஊழியர்களுக்கு இனி ஏசி ரூமில் ரெஸ்ட்.. சென்னை மாநகராட்சியின் மாஸ் திட்டம்.. எங்கே தெரியுமா?
சென்னை: சென்னையில் வெயில், மழைன்னு பார்க்காமல் ஓடி ஓடி வேலை பார்க்கும் டெலிவரி ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.. உணவு, மளிகைப் பொருட்களை வீடு வீடாகக் கொண்டு போய் கொடுக்கும் ஊழியர்கள், வேலைக்கு நடுவில் கொஞ்ச நேரம் நிம்மதியாக ஓய்வெடுக்க ஒரு வசதி ஏற்படுத்தப்படுகிறது. அதுவும் ஏசி வசதியுடன் இந்த அறை தயாராகி வருகிறது.. இது எங்கே அமைகிறது, இதில் வேறு என்னென்ன வசதிகள் இருக்கப்போகின்றன தெரியுமா?
சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சோமேட்டோ, ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் 24 மணி நேரம் சேவையை வழங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் உணவு டெலிவரி செய்யும் வேலையில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். .

சென்னை மாநகராட்சி மாஸ் திட்டம்
உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை வீடுகளுக்குக் கொண்டு சேர்க்கும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் மழை, வெயில் உள்ளிட்ட கடினமான சூழல்களிலும் கூட, டூவீலர்களில் சுற்றிச் சுற்றி டெலிவரி சேவையை தொடர வேண்டிய கட்டாயம் உள்ளது. டெலிவரி ஊழியர்களில் 10 சதவீதம் பேர் பெண்கள் உள்ளதால் அவர்களுக்கான குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் பணி புரிய வேண்டிய நிலைமை உள்ளது.
அதனால்தான், இவர்களுக்காக சென்னை மாநகராட்சி ஒரு சிறப்பான ஏற்பாட்டை செய்து வருகிறது. குளிர்சாதன வசதியுடன் கூடிய ஓய்வறை அமைக்கும் திட்டம் ஏற்கனவே கடந்த வருடம் அண்ணா நகர், கேகே நகரில் செயல்படுத்தப்பட்டது.
டெலிவரி ஊழியர்களுக்கு வசதி
இப்போது பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையிலும் ஓய்வறை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த ஓய்வறையில் ஊழியர்கள் உட்கார்ந்து ஓய்வெடுக்க இருக்கைகள் போடப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், கழிவறை, குடிநீர் வசதி, செல்போன் சார்ஜ் செய்யும் வசதி எனப் பல ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.
டெலிவரி கொடுக்கச் செல்லும் இடங்களுக்கு இடையில் கிடைக்கும் சிறிய இடைவெளியில்கூட ஊழியர்கள் இந்த அறையைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதுமட்டுமல்ல, உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் அதற்கான சீருடை, உரிய அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்களாம்.. இதை கண்காணிக்க 24 மணி நேரமும் செக்யூரிட்டியும் நியமிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
குளுகுளு ஏசி வசதி ஓய்வறை
கண்டெய்னர் வடிவில் இந்த ஓய்வறையை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இன்னும் 20 நாட்களில் பயன்பாட்டுக்கு வந்துவிடும்... ஒரே நேரத்தில் 10 பேர் வரை அமர்ந்து ஓய்வெடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரும் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான விஜய்யின் அறிவுறுத்தலின்படி, ரூ.1 கோடியே 45 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் 4 வளர்ச்சிப் பணிகளுக்கு அண்மையில் பூஜை போடப்பட்டது.
வெயிலிலும் மழையிலும் ஓய்வில்லாமல் உழைக்கும் டெலிவரி ஊழியர்களுக்கு ஏசி ஓய்வறை, பேருந்துக்காகக் காத்திருப்பவர்களுக்கு நவீன நிழற்கூடங்கள் எனப் பெரம்பூர் தொகுதியில் அடுத்தடுத்து இந்த வசதிகள் வரவுள்ளன..!!




Click it and Unblock the Notifications
