சென்னையில் நாளை முதல் 19ம் தேதி வரை, மின்சார ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவையில் பெரும் மாற்றம்
சென்னை: தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-ஆவது ரயில் பாதை அமைக்கும் இறுதிகட்டத்தை எட்டி உள்ளதால் மார்ச் 14-ஆம் தேதி முதல் மார்ச் 19-ஆம்தேதி வரை சென்னையில் மின்சார ரயில் சேவை மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகா் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது..
தாம்பரம் - செங்கல்பட்டு ரயில் நிலையங்களுக்கிடையே 3-ஆவது ரயில்பாதை பணிகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.. இதன் காரணமாக ,தாம்பரம் ரயில் நிலையத்தைக் கடந்துசெல்லும் (வருகை /புறப்பாடு) புறநகா் சிறப்பு ரயில்களின் சேவை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாவண்ணம், தடையில்லா சேவை வழங்கிட புதிய கால அட்டவணை உருவாக்கப்பட்டு உள்ளது,

6 நாள் மாற்றம்
இந்தப் புதிய திருத்தப்பட்ட புறநகா் சிறப்பு ரயில்களுக்கான கால அட்டவணை மார்ச் 14-ஆம் தேதி முதல் மார்ச் 19 ஆம் தேதி வரை 6 நாள்கள் மட்டுமே அமலில் இருக்கும். என்று சென்னை ரயில்வே கோட்டம் செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

செங்கல்பட்டு வரை
இதேபோல் (நாளை) மார்ச் 14-ஆம் தேதி முதல் மார்ச் 21 ஆம் தேதி வரை சென்னையில் இருந்து தாம்பரம் வழியாக தென்மாவட்டங்களுக்கு புறப்பட்டு செல்லும் வைகை, பாண்டியன், காரைக்குடி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருச்செந்தூர், செங்கோட்டை மற்றும் ராமேஸ்வரம் ரயில்கள் செங்கல்பட்டு வரை மட்டுமே செல்லும்.

புதுச்சேரி ரயில்
இதேபோல் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்தே தென்மாவட்டங்களுக்கான அனைத்து ரயில்களும் புறப்படும். குருவாயூர் எக்ஸ்பிரஸ் மட்டும் விழுப்புரத்தில் இருந்து புறப்படும். சென்னை டூ புதுச்சேரி ரயில்கள் 14ம் தேதி முதல் 21ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா செல்லும் ரயில்கள் செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் வழியாக சென்று வரும். 22ம் தேதி முதல் வழக்கமான ரயில்சேவை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 11 டூ 2 வரை
இதனிடையே சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு நாளை முதல் வரும் 19-ம் தேதி வரையில் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரையில் நேரடியாக செல்லும் மின்சார ரயில் சேவை இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவை சிறிய அளவில் குறைக்கப்பட்டுள்ள போதிலும், பயணிகள் பாதிக்காத வகையில் சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.