சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் இறந்த பறவைகள்! நாளை முதல் 3 நாட்களுக்கு பூங்கா மூடல்
சென்னை: சென்னை கிண்டி சிறுவர் பூங்கா நாளை முதல் 3 நாட்கள் மூடப்படுவதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளன. இன்றைய தினம் நீர்வாழ் பறவைகள் சில இறந்துள்ள நிலையில் அவை பறவை காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தனவா என தெரியவில்லை. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்கா மூடப்படுகிறது.
இதுகுறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை, கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள நீர்வாழ் பறவைகள் அடைமிடத்தில் 27.11.2026 அன்று சில பறவைகள் உயிரிழந்துள்ளன. பறவைகளின் உயிரிழப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

பரிசோதனைக்காக மாதிரிகள் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனத்திற்கு (NIHSAD) அனுப்பப்பட உள்ளன. பறவைக் காய்ச்சல் தொற்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிண்டி சிறுவர் பூங்கா 28.11.2026 முதல் 30.11.2026 வரை மூன்று நாட்களுக்கு அல்லது மறு உத்தரவு வரும் வரை பார்வையாளர்களுக்கு மூடப்படும்.
இந்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, பாதிக்கப்பட்ட அடைப்பிடத்தைத் தனிமைப்படுத்துதல், கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல், தூய்மைப்படுத்துதல் மற்றும் உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை தீவிரமாக செயல்படுத்துதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பூங்காவில் உள்ள பிற பறவைகள் மற்றும் விலங்குகளின் உடல்நிலை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
