121 கிலோ தங்கம் திருப்பதிக்கு காணிக்கை.. யார் இந்த வர்தமான் ஜெயின்? என்ன பிஸ்னஸ் செய்கிறார்?
சென்னை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சுமார் ரூ.206 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்க நகைகள் காணிக்கையாக கொடுக்கப்பட்டது தான் நேற்றைய தினம் பேசுபொருளாகவே இருந்தது. இதை கொடுத்தவர் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் வர்தமான் ஜெயின். யார் இவர்.. இவர் என்ன பிஸ்னஸ் செய்து வருகிறார் என்பது தொடர்பாக நாம் பார்க்கலாம்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்னையை சேர்ந்த தொழிலதிபர் வர்தமான் ஜெயின் நேற்றைய தினம் தங்க நகைகளை காணிக்கையாக கொடுத்தார். ஏதோ ஓரிரு கிராம் தரவில்லை. மொத்தம் 121 கிலோ தங்கத்தை அவர் தனது மனைவி ராதிகா ஜெயினுடன் இணைந்து காணிக்கையாக வழங்கியுள்ளார். இதன் மதிப்பு சுமார் ரூ.206 கோடி என கூறப்படுகிறது.

திருப்பதி நன்கொடை
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் இந்த காணிக்கை வழங்கப்பட்டது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வரலாற்றில் தனிநபர் கொடுத்த அதிகபட்ச காணிக்கை இது என சொல்லப்படுகிறது. வைரங்கள் பதிக்கப்பட்ட கிரீடம், நெக்லஸ்கள், கை மற்றும் இடுப்பு ஆபரணங்கள் உள்ளிட்ட 46 வகையான நகைகள் காணிக்கையாக வழங்கப்பட்டன. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் டிரெண்டான நிலையில், இவ்வளவு பெரிய நன்கொடை கொடுத்த தொழிலதிபர் வர்தமான் ஜெயின் யார், அவரது பிஸ்னஸ் என்ன என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!
யார் இந்த வர்தமான் ஜெயின்?
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச ஹெல்த்கேர் தொழில்நுட்பம் நிறுவனமான ஆக்சஸ் ஹெல்த்கேர் (Access Healthcare) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் துணை தலைவர்தான் இந்த வர்தமான் ஜெயின். ஆசியா (சென்னை) இன்ஜினியரிங் என்ற நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் புள்ளியியல் படித்த இவர், பின்னர் அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் கம்யூட்டர் சயின்ஸ் முதுநிலை பட்டம் பெற்றார்.
1997ஆம் ஆண்டு அனுராக் ஜெயின் என்பவருடன் இணைந்து விஷன் ஹெல்த்சோர்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். மருத்துவமனைகளில் மருத்துவ கட்டணங்களை நிர்வகிப்பது, மருத்துவமனைகளில் ஹெல்த் இன்சூரன்ஸ் கோரிக்கைகளை பிராசஸ் செய்வது உள்ளிட்ட பணிகளில் இந்த நிறுவனம் செய்கிறது. 2003ஆம் ஆண்டு பெரோட் சிஸ்டம்ஸ் நிறுவனம் இதனை வாங்கியது.
ஹெல்த்கேர்
பின்னர் 2009ஆம் ஆண்டு டெல் நிறுவனம் பெரோட் சிஸ்டம்ஸை கையகப்படுத்தியதை தொடர்ந்து, டெல் சர்வீசஸ் நிறுவனத்தின் சர்வதேச பிசினஸ் பிராசஸ் அவுட்சோர்சிங் பிரிவின் நிர்வாக இயக்குநராக வர்தமான் ஜெயின் பொறுப்பேற்றார். அப்போது வாடிக்கையாளர்களாக இருந்த 100 க்கும் மேற்பட்ட நிறுவனங்களையும், சுமார் 9,000 ஊழியர்களையும் அவர் நிர்வகித்தார்.
அதன் பிறகு ஆக்சஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தை தொடங்கி சர்வதேச அளவில் வளர்த்தார். மருத்துவ துறையின் செயல்பாடுகளை எளிமைப்படுத்த ஆட்டோமேஷன், ஏஐ, மெஷின் லேர்னிங் ஆகிய தொழில்நுட்பங்களை இந்நிறுவனம் பயன்படுத்தி வருகிறது. 2025 ஜனவரியில் அமெரிக்காவின் நியூ மவுண்டன் கேபிடல் நிறுவனம், ஆக்சஸ் ஹெல்த்கேரில் பெரும்பான்மை பங்குகளை கையகப்படும் வகையில் முதலீட்டை அறிவித்தது. இந்த பரிவர்த்தனையின் மதிப்பு சுமார் 2 பில்லியன் டாலர் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.
சமூக சேவைகள்
தொழில் மட்டுமின்றி, சமூக சேவைகளிலும் வர்தமான் ஜெயின் ஈடுபட்டு வருகிறார். ஸ்ரீ சரிதா ஜெயின் என்ற அறக்கட்டளையை நிறுவி கல்வி, அன்னதானம், அவசர மருத்துவ உதவிகள் ஆகியற்றை செய்து வருகிறார். இந்த அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக வர்தமான் ஜெயின் உள்ளார். மேலும், ஏழை எளிய இளைஞர்களுக்கு திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்க ஆவிஷ்கார் (Aavishkaar) என்ற திட்டத்தையும் தொடங்கியுள்ளார். மேலும், சென்னையில் உள்ள காஞ்சி காமகோடி சைல்ட்ஸ் டிரஸ்ட் மருத்துவமனையின் குழந்தைகள் மருத்துவ சேவைகளுக்கும் அவர் உதவி செய்து வருகிறார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு அவர் காணிக்கை வழங்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலுக்கு ரூ.7 கோடி, திருப்பதி தேவஸ்தான கோசாலையில் கால்நடை தீவன கலவை ஆலை அமைக்க ரூ.5 கோடி, நாணயங்களை எண்ணும் இயந்திரம் வாங்க ரூ.1 கோடி என பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளார். கோயிலின் போக்குவரத்திற்காக மின்சார பேருந்துகளையும் வழங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications
