தவெக பெண்களுக்கு மட்டுதான் மாண்பா? மற்ற பெண்களுக்கு மாண்பு இருக்கக் கூடாதா? மேயர் பிரியா கேள்வி
சென்னை: தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ் என்று சொல்லிக் கொண்டு விர்ச்சியல் அப்யூசர்ஸை முதல்வர் விஜய் உருவாக்குவது நியாயமா என்று சென்னை மேயர் கேள்வி எழுப்பியுள்ளார். தன் மீது தொடுக்கப்பட்ட அத்தனை ஆபாச, கேலி, இழி செயலுக்கும் தலைமை காவல் நிலையத்தில் புகாரளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி ஆபாசமாக கருத்துகளை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மேயர் பிரியா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், நான் பொது வாழ்வில் இருக்கிறேன் என்ற ஒரே காரணத்திற்காக என்னை பற்றி ஆபாசமாகப் பேசுவதும், என்னை இழிவாக தொடர்ந்து பேசுவதும் தான் த.வெ.க அரசின் கொள்கையா?

ஏன் பெண்கள் பொது வாழ்க்கையில் ஈடுபட கூடாதா? முதலமைச்சர் அவர்களே, த.வெ.க virtual warriors என்று சொல்லிக்கொண்டு, Virtual abusers உருவாக்குவது நியாயமா? என்மீது, தொடுக்கப்பட்ட அத்தனை, ஆபாச, கேலி இழி செயலுக்கும் தலைமை காவல் நிலையத்தில் புகாரளித்தும் உரிய நடவடிக்கை இல்லையே ஏன்?
கொள்கை ரீதியாக எதிர்காமல் இப்படி ஆபாச ரீதியாக பெண்களை சித்தரிப்பது எந்த வகையில் நியாயம்? த.வெ.க வை சேர்ந்த பெண்களுக்கு மட்டும் தான் மாண்பு உள்ளதா? இல்லை மற்ற பெண்களுக்கு மாண்பு இருக்கக் கூடாது என்பது தான் த.வெ.க. அரசின் நிலைபாடா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல் சென்னை காவல் ஆணைய அனுப்பிய புகார் கடிதத்தையும் இணைத்து வெளியிட்டுள்ளார்.
அண்மையில் தமிழ்நாட்டில் பெண்களை தவறாக பேசினால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்வர் விஜய் கூறி இருந்தார். ஆனால் திமுக மகளிரை குறித்து சோசியல் மீடியாவில் தொடர்ச்சியாக தவெகவினர் அச்சுறுத்தல் அளித்து வருகின்றனர். அதேபோல் சோசியல் மீடியாவில் இழிவாக பேசுவதும் தொடர் கதையாகி இருக்கிறது.
இதுதொடர்பாக திமுக தரப்பில் ஏராளமான புகார்கள் அளிக்கப்பட்டுவிட்டன. இருப்பினும் தவெகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று காவல்துறை மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் மேயர் பிரியாவின் புகார் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
