செய்தியாளர்களுக்கு கொலை மிரட்டல்.. உடனே பாதுகாப்பு வழங்க வேண்டும்! சென்னை பிரஸ் கிளப் வலியுறுத்தல்!
சென்னை: செய்தியை வெளியிட்டதற்காக செய்தியாளர்களை மிரட்டிய நாகை மாவட்டத்தின் தமிழக வெற்றிக் கழக நிர்வாகியை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் அனைவரும் அச்சமின்றி செய்தி வெளியிடுவதை உறுதிசெய்யும் வகையில், அவர்களுக்கு உரிய பாதுகாப்பைத் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," 137 கிலோ மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருளை வைத்திருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபாலன் என்பவரை, மத்திய வருவாய் குற்றப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் இரண்டு தினங்களுக்கு முன் கைது செய்தனர். அவரோடு சேர்ந்து மேலும் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

சர்வதேச அளவில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தத் திட்டமிட்டிருந்ததாக வருவாய் புலனாய்வுத்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருள் பிடிபட்டுள்ளது குறித்தும், கைது செய்யப்பட்ட பூபாலன் உட்பட அனைவர் மீதும் சட்டரீதியாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள் தொடர்ந்து செய்தி சேகரித்து, அவர்கள் சார்ந்த நிறுவனங்களுக்கு வழங்கி வருகின்றனர்.
கடந்த 17.10.26 அன்று நாகப்பட்டினம் சுங்கத் துறை அலுவலகத்தில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட நபர்கள் குறித்து செய்தியாளர்கள் அனைவரும் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, நாகப்பட்டினம் மாவட்ட தெற்கு நகரச் செயலாளர் பொறுப்பில் உள்ள பாலு என்பவர், பார்த்திபன் என்ற செய்தியாளரை வாட்ஸ்அப் மூலம் அழைத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையையும், மாவட்டச் செயலாளர் சுகுமாரன் அவர்களையும் அவமானப்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டுள்ளதாகவும், இதை உடனே நிறுத்த வேண்டும் என்றும் பார்த்திபனை எச்சரித்துள்ளார்.
அத்துடன், ஸ்பீக்கர் போனை ஆன் செய்யச் சொன்ன பாலு, அங்கு செய்தி சேகரித்துக்கொண்டிருந்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள் அனைவரையும் மிரட்டும் வகையில் "இது தான் உங்களுக்குக் கடைசி எச்சரிக்கை, இனி இது போல் நடந்தால் வேறுமாதிரி ஆகிவிடும்" என்று செய்தியாளர்கள் அனைவருக்கும் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து நாகப்பட்டினம் பத்திரிகையாளர் மன்றம் சார்பாக, செய்தியாளர்களுக்கு மிரட்டல் விடுத்த பாலுவுக்கு எதிராக மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகாரைத் தொடர்ந்து பாலு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருந்தபோதும், பாலு இதுவரை கைது செய்யப்படவில்லை. செய்தி வெளியிட்டதற்காகப் பத்திரிகையாளர்களை மிரட்டிய தமிழக வெற்றிக் கழகத்தின் நாகப்பட்டினம் மாவட்ட தெற்கு நகரச் செயலாளர் பாலுவின் நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.
அவர் மீது பத்திரிகையாளர்கள் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் அவரை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது. நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் அனைவரும் அச்சமின்றி செய்தி வெளியிடுவதை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கு உரிய பாதுகாப்பைத் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் கேட்டுக்கொள்கிறது." எனக் கூறியுள்ளது.



Click it and Unblock the Notifications
