சொத்து வரி உயர்வை அதிரடியாக வாபஸ் வாங்கிய அரசு.. ஏற்கனவே கட்டியவர்களுக்கு பணம் திருப்பி வராது!
சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த சொத்து வரி உயர்வு மற்றும் திருத்த நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக தமிழக அரசு உடனடியாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. மேலும், உயர்த்தப்பட்ட வரிகளைத் திரும்பப்பெற்று, பழைய நிலையிலான சொத்து வரி விகிதமே தொடரும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சையை ஏற்படுத்திய வரி திருத்தம்
சென்னை மாநகராட்சியில் உள்ள குடியிருப்பு வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் காலியிடங்களுக்கு வசூலிக்கப்படும் சொத்து வரியே, நகரத்தின் சாலைப் பராமரிப்பு, தெருவிளக்குகள், கழிவுநீர் அகற்றம் மற்றும் தூய்மைப் பணிகள் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கிய நிதி ஆதாரமாக விளங்குகிறது.
இந்நிலையில், மாநகராட்சியின் பல்வேறு மண்டலங்களில் உள்ள சில குறிப்பிட்ட சொத்துகளுக்கான வரித் தொகை, திடீரென 3 முதல் 4 மடங்கு வரை உயர்த்தப்பட்டதாகக் கூறி வரைகாலைக் கட்டணப் ரசீதுகள் சொத்து உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்டன. இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த சென்னைவாசிகள் மற்றும் வர்த்தகர்கள், மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு எதிராகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
முகப்பேரில் வசிக்கும் ஒருவருக்கு அரை ஆண்டிற்கான சொத்து வரி ₹13,000-லிருந்து திடீரென ₹63,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. காரப்பாக்கத்தில் 1,600 சதுர அடி வீட்டின் வரி ₹895-லிருந்து ₹1,835 ஆக அதிகரித்துள்ளது.
கட்டிட அளவில், நிலத்தின் பரப்பளவில் முறையான மாற்றங்கள் எதுவுமில்லாத நிலையிலும் வரி உயர்த்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேற்கு மாம்பலத்தை சேர்ந்த நபர் ஒருவர் கூறுகையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2022-ல் 90% வரி உயர்த்தப்பட்டது. இப்போது 1,400 சதுர அடி வீட்டிற்கு ₹3,500 வரை செலுத்தச் சொல்கிறார்கள். எந்த மாற்றமும் இல்லாதபோது எப்படி மறுமதிப்பீடு செய்தார்கள்? எனக் கேள்வி எழுப்புகிறார்.
கிண்டியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், 2021-ல் கூடுதல் கட்டிடம் கட்டியபோது வரி ₹1,000-லிருந்து ₹2,125 ஆக உயர்ந்தது. ஆனால் இப்போது எந்த மாற்றமும் செய்யாத நிலையிலும் ₹4,100 ஆக மாற்றப்பட்டுள்ளது, என்கிறார். இதனால் பல இடங்களில் வரி வசூலிப்பாளர்களே அதிகாரப்பூர்வ விளக்கம் வரும் வரை வரியைச் செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
பொதுமக்களின் கொந்தளிப்பைத் தொடர்ந்து விளக்கமளித்த மாநகராட்சி அதிகாரிகள், இது நகரம் முழுமைக்குமான புதிய வரி உயர்வு அல்ல என்றும், பல ஆண்டுகளாகக் தவறாக மதிப்பிடப்பட்ட அல்லது குறைந்த வரி செலுத்தி வந்த சொத்துகளைச் சரிசெய்யும் வழக்கமான நடவடிக்கைதான் என்றும் தெரிவித்தனர்.
இருப்பினும், மாநகராட்சி கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வரும் சூழலில், சுமார் 30,000 சொத்து உரிமையாளர்களுக்கு இத்தகைய கூடுதல் வரி கோரிக்கை நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டது சர்ச்சையை மேலும் தீவிரமாக்கியது.
மன்றத்தின் அனுமதி இன்றி எடுக்கப்பட்ட நடவடிக்கை
இந்தச் சொத்து வரி தணிக்கைக்காக ட்ரோன் கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட வான்வழிப் படங்கள் மற்றும் ஜி.பி.எஸ் செயற்கைக்கோள் தொழில்நுட்ப முறைகள் பயன்படுத்தப்பட்டன. ஏற்கெனவே நடப்பு ஆண்டிற்கான முழுச் சொத்து வரியையும் முறையாகச் செலுத்திவிட்ட பலருக்கு, தொழில்நுட்ப ஆய்வைக் காரணம் காட்டி எதிர்பாராத விதமாகக் கூடுதல் தொகையைக் கட்டக் கூறி நோட்டீஸ் வந்ததால் பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.
இப்பிரச்சினை தொடர்பாக விளக்கமளித்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி மன்றத்தின் கலந்தாய்வோ அல்லது முறையான ஒப்புதலோ பெறப்படாமல், மாநகராட்சி அதிகாரிகளால் தன்னிச்சையாகவே இந்த வரி மறுசீரமைப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தினார்.
பணத்தை திரும்பப் பெறும் முறை
பொதுமக்கள், வர்த்தக அமைப்புகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்து தொடர்ந்து வந்த அழுத்ததைத் தொடர்ந்து, இந்தச் சொத்து வரி சீரமைப்பு நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்துச் சொத்துகளுக்கான வரி மதிப்பீடும் உடனடியாக பழைய நிலைக்குக் கொண்டுவரப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், உயர்த்தப்பட்ட புதிய விகிதத்தின்படி ஏற்கெனவே வரியைச் செலுத்திய சொத்து உரிமையாளர்களுக்கு அந்த கூடுதல் தொகை ரொக்கமாகத் திரும்ப வழங்கப்பட மாட்டாது. அதற்குப் பதிலாக, செலுத்திய கூடுதல் வரித் தொகையானது, வரவிருக்கும் அடுத்தடுத்த அரையாண்டு சொத்து வரித் தவணைகளில் முன்பணமாக சரிசெய்யப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
மாநகராட்சியின் இந்த அதிரடித் திரும்பப் பெறல் அறிவிப்பு, திடீர் வரிச் சுமையால் அவதிப்பட்டு வந்த சென்னை மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications
