மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் பணி! முதல்வர் அசத்தல் அறிவிப்பு! 11 வருட போராட்டத்திற்கு முடிவு
சென்னை : அதிமுக ஆட்சிக் காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு, அவர்கள் விருப்பத்தின் பேரில் 7500 ரூபாய் ஊதியத்தில் மீண்டும் பணி வழங்கப்படும் என சட்டப் பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக அரசால் பணி அமர்த்தப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேர் கடந்த 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தின் போது திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
முன்னதாக, திமுக ஆட்சியில் பணியில் சேர்த்துக்கொள்ளப்படுவதும், அதிமுக ஆட்சியில் டிஸ்மிஸ் ஆவதுமாக இந்த விவகாரம் தற்போது வரை உள்ளது.

மக்கள் நல பணியாளர்கள் வழக்கு
மக்கள் நல பணியாளர்களுக்கு தொடர் கதையாகவே இருந்து வந்தது. 2011ல் மீண்டும் டிஸ்மிஸ் செய்யப்பட்டதும், பணியாளர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

நீண்டகால எதிர்பார்ப்பு
அப்போதைய அதிமுக அரசு சார்பில் அவர்களை மீண்டும் பணியில் சேர்க்க முடியாது என உறுதியாக கூற நிலையில் கடந்த 5ஆண்டுகளாக இவ்விவகாரம் பெரிய அளவில் பேசப்படவில்லை. அதே நேரத்தில் அரசு பணியை எதிர்பார்த்து மக்கள் நல பணியாளர்களின் இளமை காலம் வீணாகிவிட்டது. 25 ஆண்டுகளாக இந்த வேலையை நம்பியே அவர்கள் உள்ளனர். இதில் பட்டினியால் 126பேர் உயிரிழந்துவிட்டனர், விரக்தியால் 26 பேர் தற்கொலை செய்துகொண்டதாக மக்கள் நலப் பணியாளர்களாக இருந்தவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின்
தற்போது இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது . இந்நிலையில் அதிமுக ஆட்சிக் காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு, அவர்கள் விருப்பத்தின் பேரில் 7500 ரூபாய் ஊதியத்தில் மீண்டும் பணி வழங்கப்படும் என சட்டப் பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் நீண்ட காலமாக போரட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள் நலப் பணியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

7500 ரூபாய் ஊதியம்
இது குறித்து சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், " ஊரகப் பகுதிகளில் படித்த வேலையற்ற இளைஞர்கள் 25,354 பேரை திமுக அரசு மக்கள் நலப்பணியாளர்களாக நியமித்தது. பின்னர் ஆட்சிக்கு வந்த உடன் மக்கள் நலப்பணியாளர்களை அதிமுக அரசு பணி நீக்கம் செய்தது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அதிமுக ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு மாத ஊதியமாக 7,500 ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. கிராமப்புற வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் என்றஅடிப்படையில் மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி வழங்கப்படும்." என பேசினார்.












Click it and Unblock the Notifications