சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போராட்டம்..தாய்மையின் இலக்கணம்... பேரறிவாளன் விடுதலைக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

தன் மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் களைந்திட எந்த எல்லை வரை சென்றும் போராடத் தயங்காத அற்புதம்மாள் தாய்மையின் இலக்கணம் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருக்கும் தீர்ப்பு வரலாற்றில் இடம்பெறத்தக்கது என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தன் மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் களைந்திட எந்த எல்லை வரை சென்றும் போராடத் தயங்காத அற்புதம்மாள் தாய்மையின் இலக்கணம் என்றும் பாராட்டியுள்ளார்.

Recommended Video

    Perarivalan தாய் Arputhammal தாய்மையின் இலக்கணமாக இருக்கிறார் - முதல்வர் Stalin பாராட்டு

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. உச்சநீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது. மகனின் விடுதலை குறித்து கருத்து கூறியுள்ள அற்புதம்மாள், முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி கூறினார்.

    Chief Minister Stalin welcomes the release of Perarivalan

    பேரறிவாளன் விடுதலை குறித்து தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்

    32 ஆண்டுகளாகச் சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது உச்சநீதிமன்றம். இது நீதி - சட்டம் - அரசியல் - நிர்வாகவியல் வரலாற்றில் இடம்பெறத் தக்க தீர்ப்பு! தமிழ்நாடு அரசின் வாதங்களை முழுமையாக ஏற்று இந்த இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள்தண்டனையை நிறுத்தி வைத்து தன்னை விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் மனுத் தாக்கல் செய்து இருந்தார். தமிழ்நாடு அரசு இந்த மனு மீதான விவாதத்தில் தனது அழுத்தமான கருத்தை முன் வைத்து வாதிட்டது.

    தமிழக அரசின் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், ''பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவு எடுக்க மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. அரசின் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினால் போதுமானது. இந்திய தண்டனைச் சட்டம் 302 மாநில அரசின் பொது அமைதிக்கு கீழ் வருகிறது. எனவே, அது மாநில அரசின் நிர்வாகத்துக்கு உட்பட்டது.

    இந்த வழக்கில் பேரறிவாளனை விடுவிக்க மாநில அரசு முடிவு எடுக்க முழு அதிகாரம் உள்ளது. அரசியல் சாசன பிரிவு 161 படி அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தால் போதுமானது. அவர் புதிய முடிவு எடுக்கத் தேவை இல்லை. அரசு முடிவை குடியரசு தலைவருக்கு அனுப்ப தேவை இல்லை" என்று அழுத்தமாக வாதிட்டார்.

    ஆனால் ஒன்றிய அரசின் வழக்கறிஞர், 'இதில் மாநில அரசுக்கு உரிமை இல்லை' என்றும், 'ஒன்றிய அரசும், குடியரசுத் தலைவரும் தான் முடிவெடுக்க முடியும்' என்று வாதிட்டார். 'நீங்கள் முடிவெடுக்கும் வரை பேரறிவாளன் சிறையில் இருந்தாக வேண்டுமா?' என்று நீதிபதிகள் கேட்டார்கள். அதற்கு ஒன்றிய அரசின் வழக்கறிஞரால் பதில் அளிக்க முடியவில்லை.

    உச்சநீதிமன்ற நீதியரசர்கள் மாண்புமிகு எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், போபண்ணா அடங்கிய அமர்வு, முதலில் பேரறிவாளனை பிணையில் விடுதலை செய்தது. இப்போது முழுமையான விடுதலையை வழங்கி உள்ளது. இப்படி விடுவிப்பதற்கு முன்னதாக நடந்த விசாரணையின் போது தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் வைத்த வாதம், மாநில உரிமைகளை நிலைநாட்டுவதாக அமைந்திருந்தது. அதுவே இறுதித் தீர்ப்பாக வழங்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    மனிதாபிமான - மனித உரிமை அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை என்பது வரவேற்கத்தக்கதாக அமைந்திருக்கும் அதே நிலையில் - மாநிலத்தின் உரிமையானது இந்தத் தீர்ப்பின் மூலமாக மிகக் கம்பீரமாக நிலைநாட்டப்பட்டுள்ளது. இது இந்த வழக்கின் மற்றொரு மாபெரும் பரிமாணம் ஆகும்.

    'மாநில அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை' என்று மாண்புமிகு நீதியரசர்கள் சொல்லி இருப்பது மிகமிக முக்கியமானது ஆகும். 'ஆளுநர் செயல்படாத நேரத்தில் நீதிமன்றம் தலையிடும்' என்று சொல்லி இருக்கிறார்கள் நீதிபதிகள். 'இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசிடம் கேட்கத் தேவையில்லை' என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள் நீதியரசர்கள்.

    இதன் மூலமாக மாநில அரசின் அரசியல், கொள்கை முடிவுகளில் தனது அதிகார எல்லைகளைத் தாண்டி ஆளுநர்கள் தலையிட அதிகாரம் இல்லை என்பது மேலும் மேலும் உறுதி ஆகி இருக்கிறது. இது தமிழ்நாடு அரசால், இந்தியா முழுமைக்குமான மாநில சுயாட்சி - கூட்டாட்சித் தத்துவத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
    2018 ஆம் ஆண்டு தமிழக அமைச்சரவை கூடி, எழுவர் விடுதலை குறித்து தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்தது. அதற்கு தமிழக ஆளுநர் அவர்கள் உடனடியாக ஒப்புதல் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் அதனை அளவுக்கு மீறி தாமதம் செய்தார் தமிழக ஆளுநர். உடனடியாக இதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று திமுக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.

    2020 நவம்பர் மாதம் மாண்புமிகு ஆளுநர் அவர்களைச் சந்தித்து, கடந்த முப்பது ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆளுநர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அப்போது வலியுறுத்தினேன்.

    2018 ஆம் ஆண்டு தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று சொன்னேன். பரிசீலிப்பதாக ஆளுநர் அவர்களும் அப்போது சொன்னார். ஆனால் முடிவெடுக்கவில்லை. திடீரென்று, குடியரசுத் தலைவருக்கு ஒப்புதலைக் கேட்டு அனுப்பியதாக ஆளுநர் மாளிகை அறிக்கை கொடுத்தது. இது அனைவர்க்கும் அதிர்ச்சி அளித்தது.

    ஆட்சி மாற்றம் நடந்தது. கழக ஆட்சி அமைந்ததும், குடியரசுத் தலைவருக்கு ஒரு கடிதத்தை அனுப்பி வைத்தோம். ஆளுநர் உங்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்துக்கு விளக்கம் தாருங்கள் என்று விளக்கம் கேட்டோம்.
    குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அவர்கள் இப்படி ஒரு கடிதம் அனுப்பி இருந்ததால், குடியரசுத் தலைவரிடம் விளக்கம் கேட்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு ஏற்பட்டது.

    அதேநேரத்தில், பேரறிவாளன் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வந்தபோது, இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்குத்தான் அனைத்து உரிமைகளும் உள்ளது என்று வாதிட்டோம். கிடைத்த வாய்ப்பு அனைத்தையும் பயன்படுத்தி - மாநில அரசுக்கு அரசியல் சட்டம் வழங்கி உள்ள 161 ஆவது பிரிவு உரிமையை நிலைநாட்டினோம்.

    இதனையே தங்களது மையக் கேள்வியாக மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் அவர்களும் எழுப்பினார்கள். '' இது அமைச்சரவையின் முடிவு. அதில் ஆளுநருக்கு முடிவெடுக்கும் சுதந்திரமான இடம் உள்ளதா? ஏன் மத்திய அரசுக்கு அனுப்பினார்? அவர் மாநில அரசின் பிரதிநிதியா? ஆளுநருக்கு சில விலக்குகள் உள்ளன, ஆனால் இதுபோன்ற விஷயங்களில் எந்த உத்தரவையும் நிறைவேற்ற முடியாது. இந்த வழக்கில் ஆளுநருக்கு சுதந்திரமான விருப்புரிமை ஏதேனும் உள்ளதா? மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது ஏன்?" என்று அடுக்கடுக்கான கேள்வி எழுப்பினார் நீதிபதி நாகேஸ்வரராவ் அவர்கள். அந்த வகையில் மாநில அரசு தனது உரிமையை நிலைநாட்ட எடுத்த முயற்சிகள் அனைத்துக்கும் இறுதி வெற்றி கிடைத்துள்ளது.

    இது முப்பது ஆண்டுகளைக் கடந்த சட்டப்போராட்டம் ஆகும். சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய 4 பேருக்கு மட்டும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். கடந்த 2000-ஆம் ஆண்டு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின் மூலம் நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மற்ற மூவரது தண்டனையையும் ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்தது.

    அரசியல் சட்டம் 161 ஆவது பிரிவின் படி மாநில அரசின் உரிமையை நிலைநாட்டி அவர்களது விடுதலைக்கு தொடர்ந்து திமுக குரல் கொடுத்து வந்தது. எதிர்க்கட்சியாக இருந்தபோதும், ஆளும் கட்சியாக ஆனபோதும் ஒரே நிலைப்பாட்டை திமுக எடுத்தது.

    ஆளும்கட்சியாக ஆனபிறகும் குடியரசுத் தலைவருக்கு கடிதம் - ஆளுநருக்கு அழுத்தம் - ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தல் - உச்சநீதிமன்றத்தில் அழுத்தமான வாதங்கள் என நாலா பக்கமும் முனைப்புடன் திமுக அரசு இயங்கியது. இறுதித் தீர்ப்பு இந்த அடிப்படையில் கிடைக்க இவை மிக முக்கியமான அடித்தளத்தை அமைத்திருந்தது.

    சிறையில் இருந்த பேரறிவாளன், சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவர் சட்ட உரிமையின் அடிப்படையில் பரோல் கேட்டார். மனிதாபிமான அடிப்படையில் அரசு அவருக்கு அந்த உரிமையை 10 முறை வழங்கியது. பரோலில் இருந்தபடியே தனது சட்டப்போராட்டத்தை நடத்தி முதலில் பிணையில் வந்தார். இப்போது விடுதலை ஆகி இருக்கிறார்.

    முப்பத்தி இரண்டு ஆண்டு கால வாழ்வை சிறைக் கம்பிகளுக்கு இடையே தொலைத்த அந்த இளைஞர் இன்று விடுதலைக் காற்றை சுவாசிக்க இருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகளும், வரவேற்பும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தன் மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் களைந்திட எந்த எல்லை வரை சென்றும் போராடத் தயங்காத திருமதி. அற்புதம்மாள் அவர்கள், தாய்மையின் இலக்கணம். பெண்மையின் திண்மையை அவர் நிரூபித்துக் காட்டி இருக்கிறார். சட்டத்தின் ஷரத்துகளை வெல்லும் திறன், ஒரு துளி நியாயமான கண்ணீருக்கு உண்டு என்பதைக் காலம் காட்டி இருக்கிறது. அற்புதம்மாளுக்கு என் வாழ்த்துகள்.

    பேரறிவாளன் என்ற தனிமனிதனின் விடுதலையாக மட்டுமல்ல, கூட்டாட்சித் தத்துவத்துக்கும், மாநில சுயாட்சி மாண்புக்கும் இலக்கணமாகவும் அமைந்துவிட்ட இத்தீர்ப்பு மீண்டும் மீண்டும் வரலாற்றில் நினைவுகூரத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Perarivalan release MK Stalin Statement: (பேரறிவாளன் விடுதலை பற்றி மு.க ஸ்டாலின் அறிக்கை)Tamil Nadu Chief Minister MK Stalin has said that the verdict in the Rajiv Gandhi assassination case is historic.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X