பாஜக கையில் எடுத்ததால்தான்.. கோவை சம்பவத்தில் உண்மை வெளியானது.. அண்ணாமலை பெருமித பேட்டி
சென்னை: தமிழக காவல்துறையினர் கைகள் தற்போது கட்டப்பட்டுள்ளன. முன்பெல்லாம் சாலைகளில் தவறு செய்பவர்களை காவல்துறையினர் லத்தியால் அடிப்பார்கள். இப்போது அப்படி இல்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜகவை வலிமைப்படுத்த வேண்டும்,பூத் கமிட்டியை வலிமைப்படுத்த வேண்டும். பூத் கமிட்டி என்பது தேர்தல் நேரத்தில் மட்டும் வேலை செய்யக்கூடாது. மக்களின் அடிப்படை பிரச்சினைகளை அறிந்து 365 நாட்களும் சேவை செய்ய வேண்டும் என்பதற்காக புதிதாக வடிவமைக்கப்பட்ட பூத் கமிட்டி தொடங்கப்பட்டுள்ளது.

பூத் கமிட்டி மெம்பர்கள் வார்டு வார்டாக சென்று வலிமையான பூத் கமிட்டி மெம்பர்களை நியமனம் செய்து எனது பூத் வலிமையான பூத் என்று நிரூபிப்பார்கள். இது ஒரு நல்ல முன்னெடுப்பு. அவரோடு இருக்கும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள்.
மதுரை வந்ததற்கான நோக்கம் இதுதான் என்று கூறினார். தமிழகத்தில் இந்தி திணிக்கப்படுவதாக பொன்முடி குற்றம் சாட்டி வருவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, பொன்முடி சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்தி என்பது 2019ஆம் ஆண்டுவரை திணிக்கப்பட்ட மொழியாக கட்டாயம் படிக்க வேண்டிய மொழியாக இருந்தது. மூன்றாவது மொழியாக ஹிந்தி இருந்தது. காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்திய 10 ஆண்டு காலத்தில் கூட இந்தி என்பது கட்டாய பாடமாகத்தான் இருந்தது.
2020ஆம் ஆண்டு இந்தி வந்த பிறகு இந்தி என்பது ஆப்சனலாக உள்ளது. இந்தி திணிப்பு எங்கேயும் இருக்கக் கூடாது என்பதே பாரத பிரதமர் மோடியின் விருப்பம். பாஜகவின் விருப்பமும் அதுதான். இந்தியை தேவைப்பட்டால் படிக்கலாம். இல்லம் தேடி கல்வி என்பது புதிய கல்வி கொள்கையில் உள்ள அம்சம். மருத்துவம், பொறியியல் பாடத்திட்டத்தை தமிழில் கொண்டு வர கூறியுள்ளோம்.
கோவையில் நிகழ்ந்த கார் வெடிப்பு பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, கோவையில் நிகழ்ந்தது மனித வெடிகுண்டு தாக்குதல் என்று கூறினோம். குண்டு வெடித்து 54 மணி நேரம் கழித்து, மனித வெடி குண்டு தாக்குதல் என்று பாஜக கூறிய பிறகு ஊபா சட்டத்தின் கீழ் குற்றவாளிகளை கைது செய்தனர். கோவை சம்பவத்தை பாஜக கையில் எடுத்ததால்தான் உண்மைகள் வெளி வந்தன. ஆர்எஸ் பாரதி அரசியலுக்காக பேசுகிறார். அவர் பாஜகவிற்காக நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டும்.
பெண்களின் பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாகி வருகிறது. மதுரையிலும் பல பெண்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகிறார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, குற்றங்கள் நடைபெறுவது எல்லாமே போதையினால்தான் நிகழ்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைக்கு அடிமையாகின்றனர். பீர் பாட்டிலை பேருந்துகளில் கொண்டு செல்கின்றனர். கஞ்சா, போதை பழக்கத்திற்கு அடிமையாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
போதையில் இருப்பவர்கள் சாலைகளில் செல்லும் பெண்களின் சுடிதார் துப்பட்டாவை பெண்கள் பிடித்து இழுக்கின்றனர். காவல்துறையினர் கைகள் தற்போது கட்டப்பட்டுள்ளன. முன்பெல்லாம் சாலைகளில் தவறு செய்பவர்களை காவல்துறையினர் லத்தியால் அடிப்பார்கள். இப்போது அப்படி இல்லை. இதை செய்தியாளர்கள் பேசு பொருளாக மாற்ற வேண்டும். மது, போதை கலாச்சாரத்தை ஒழித்தால் மட்டுமே இளைஞர்கள் சமூதாயத்துடன் ஒன்றி செயல்படுவார்கள்.
காவல்துறையினர் கையில் லத்தி கொடுப்பது பூஜை செய்வதற்காக அல்ல. தவறு செய்பவர்களை தண்டிப்பதற்காகவே என்றும் அண்ணாமலை கூறினார்.












Click it and Unblock the Notifications