"ஒற்றுமை பாத யாத்திரை!" சென்னை வந்திறங்கிய ராகுல் காந்தி.! பக்காவாக களமிறங்கும் காங்கிரஸ் தலைவர்கள்
சென்னை: சென்னை விமான நிலையம் வந்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு அவரது தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
காங்கிரஸ் கட்சியில் கடந்த சில காலமாகவே மூத்த தலைவர்கள் தொடர்ச்சியாக விலகி வருகின்றனர். மேலும், தேர்தல்களிலும் காங்கிரஸால் பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை.
இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. குறிப்பாக மூத்த தலைவர்கள் டெல்லி காங்கிரஸ் தலைமை மீதே குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள்.

காங்கிரஸ்
இதனால் காங்கிரஸ் தலைமை இக்கட்டான சூழலில் உள்ளது. கட்சியை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாகக் கட்சிக்குள் இருந்தே குரல்கள் எழத் தொடங்கி உள்ளது. இந்தச் சூழலில் ராகுல் காந்தி பாரத் ஜோடா யாத்திரை என்ற பாத யாத்திரையை நாடு முழுக்க நடத்த உள்ளார். இது தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியினருக்கு புதியதொரு வேகத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாத யாத்திரை
நாடு முழுக்க காங்கிரஸ் கட்சியை மீட்டு எடுக்கும் விதமாக இந்த யாத்திரை நடைபெறுகிறது. ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் நடைபெறும் இந்த பாத யாத்திரை மூலம் தேசிய அளவில் பாஜகவிற்கு எதிராக மக்களைத் திரட்ட முயல்கிறது. காங்கிரஸ் நடத்தும் மிக பெரிய யாத்திரையாக இது பார்க்கப்படுகிறது. இதை நாளை (செப்.7) ராகுல் காந்தி கன்னியாகுமரி தொடங்க உள்ளார். இதை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

சென்னை வந்தடைந்தார்
இந்த நடைப்பயணத்தைத் தொடங்க ராகுல் காந்தி இன்றே டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். ஏர்போர்ட்டில் திரண்டு இருந்த காங்கிரஸ் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இன்றிரவு சென்னையில் ஓய்வெடுக்கும் ராகுல் காந்தி, நாளை காலை ஸ்ரீபெரும்பதூரில் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். அதைத் தொடர்ந்து கன்னியாகுமரி சென்று பாரத் ஜோடோ யாத்திரையைத் தொடங்குகிறார்.

அரசியல் மாற்றங்கள்
கன்னியாகுமரியில் தொடங்கும் இந்த யாத்திரை காஷ்மீரில் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு ராகுல் காந்தி நடைப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். இதுவரை நாட்டில் பெரிய யாத்திரைகள் நடந்து முடிந்த பின்னர் அரசியல் ரீதியாகவும் மாற்றங்கள் நடந்துள்ளன. எனவே, ராகுலின் இந்த நடைப்பயணம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பாதயாத்திரையை ஒருங்கிணைப்பார்கள்.












Click it and Unblock the Notifications