சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுப்பில் நெருப்பேற்ற வழியில்லாது நிற்கையில் விளக்கில் நெருப்பேற்றச் சொல்லுவது எதற்கு? சீமான்

Google Oneindia Tamil News

சென்னை: தேசத்தின் மக்கள் அடுப்பில் நெருப்பேற்ற வழியில்லாது நிற்கையில் விளக்கில் நெருப்பேற்றச் சொல்லும் வெற்றுச்சடங்கு எதற்காக என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Recommended Video

    மாஸ்க் எப்படிக் கட்டணும்.. கையை எப்படிக் கழுவணும்.. சபாஷ் குட்டீஸ்!

    இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

    நல்ல நண்பனை ஆபத்தில் அறி; நல்ல ஆட்சியாளனை அழிவு காலத்தில் அறி' என்கிறார் கியூபப் புரட்சியாளர் சேகுவாரா. இந்நெருக்கடியான கொரோனா அழிவு காலக்கட்டத்தில் நமது ஆட்சியாளர்களின் செயல்பாடுகள், அவர்களின் உண்மையான திறனைக் காட்டிவருகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டாண்டுகளுக்கு நிறுத்தி வைக்க முடிவுசெய்திருக்கும் மத்திய அரசின் முடிவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தவறானப் பொருளாதாரக் கொள்கைகளாலும், பிழையான பொருளாதார முடிவுகளாலும் நாட்டின் பொருளாதாரத்தை மொத்தமாய் சூறையாடிவிட்டு தற்போது பாராளுமன்றத் தொகுதிகளின் மேம்பாட்டுக்காக உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் நிதியுரிமையைப் பறிப்பது மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் எதேச்சதிகாரப்போக்காகும்.

    கொரொனோ நோய்த்தொற்றினால் விளைந்திருக்கும் அசாதாரண நெருக்கடிச் சூழலுக்கும், நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் அதீத வீழ்ச்சிக்கும் மத்திய அரசே முழுமுதற் பொறுப்பேற்க வேண்டும். ஊரடங்கு உத்தரவு தொடங்கி 10 நாட்களிலேயே நாட்டின் நிதியாதாரம் காலியாகிவிட்டதென்றால், அந்நிலையில்தான் நாட்டின் பொருளாதாரம் இருக்கிறதா?இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு இலட்சம் கோடிக்கும் மேலான தொகையைப் பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கையையும் மீறி எடுத்து அதனை என்ன செய்தார்கள்? அந்நிதி எங்கே? மாநிலங்களின் வரி வருவாயை முழுக்க எடுத்துக் கொள்ள கொண்டு வரப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் மூலம் ஈட்டிய வரி வருவாய் எங்கே? அதனைக் கொண்டு என்ன செய்தார்கள்?

    மத்திய அரசின் தவறு

    மத்திய அரசின் தவறு

    கடந்தாண்டு டிசம்பர் மாதமே கொரொனோ நோய்த்தொற்று சீனாவிலிருந்து பரவத்தொடங்கி உலக நாடுகளை ஆட்கொள்ளத் தொடங்கியிருந்தது. அக்காலக்கட்டடத்திலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தகுந்த முன்னேற்பாடுகளையும் செய்ய மத்திய அரசு தவறிவிட்டதன் விளைவாகவே இக்கொடியச் சூழலை நாம் எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது என்பது மறுக்கவியலா உண்மை. கொரொனோ நோய்த்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கும், நாட்டுமக்களை விழிப்புறச்செய்து தயார் செய்வதற்கும் ஏறக்குறைய இரண்டரை மாதத்திற்கு மேலாகக் கால இடைவெளி இருந்தபோதும் அப்போதெல்லாம் அதுகுறித்து அக்கறையற்று எவ்வித ஏற்பாட்டையும் செய்யாது காலங்கடத்திவிட்டு, தற்போது நிலைமை கையை மீறிப்போகையில் நாட்டு மக்கள் மீதே பாரத்தைச் சுமத்தி பொறுப்பைத் தட்டிக்கழிப்பது என்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது.

    முன் நடவடிக்கைகள் இல்லை

    முன் நடவடிக்கைகள் இல்லை

    நாடு முழுமைக்கும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்கச் செய்ய வேண்டிய முன்நடவடிக்கைகள் எதையும் முடுக்கிவிடவுமில்லை. அடித்தட்டு உழைக்கும் மக்களான 45 கோடி அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பேணிக்காப்பதற்கும், தங்களது வாழ்விடம்விட்டு புலம்பெயர்ந்து பிறமாநிலங்களில் பணிசெய்து வாழும் தொழிலாளர்களின் இருப்பை நிலைநிறுத்தம் செய்வதற்கும், வாழ்விடமில்லாத கைவிடப்பட்ட முதியவர்கள், சாலையோரம் வாழ்ந்துவரும் ஆதரவற்றவர்கள், பிச்சையெடுத்து வாழ்வோர் போன்றவர்களின் நலமிக்க வாழ்க்கையை உறுதிப்பாடு செய்வதற்கும் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவுமில்லை. பண மதிப்பிழப்பைப் போல ஒரே நாள் இரவில் நாடு முழுமைக்கும் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்திவிட்டு தனது பொறுப்பிலிருந்தும், கடமையிலிருந்தும் நகர்ந்துகொண்டார் பிரதமர் மோடி.

    சமூகப் பரவல் தொடக்கம்

    சமூகப் பரவல் தொடக்கம்

    வெளிநாட்டிலிருந்து வந்தவர்களிடமிருந்த நோய்த்தொற்று பரவல் தற்போது அடுத்த கட்டமான சமூகப்பரவலின் தொடக்க நிலைக்குச் சென்றிருக்கும் துயர்மிகு சூழலில் மக்களுக்கு அதுகுறித்து அறிவுறுத்தாமல் "உன்னுடைய ஆட்சி முறைகேட்டால் மக்கள் விழிப்படைவதாக உனக்குத் தோன்றினால் ஊரின் நடுவிலுள்ள உயரமான மரத்தின் உச்சியில் ஒருவனை ஏற்றி புரியாத மொழியில் அவனை உரக்கக் கூவிக்கொண்டிருக்கச் சொல்வாயாக" என சாணக்கியர் கூறியதைப்போல, மக்கள் விழிப்படையாமல் இருக்க அவர்களைத் திசைதிருப்ப கைதட்டச் சொல்வதும், விளக்கேற்றச் சொல்வதுமான வேடிக்கை வினோத காரியங்களை மேற்கொள்ள சொல்வது கொடுமையிலும் கொடுமை.

    எதற்கு கைதட்ட வேண்டும்?

    எதற்கு கைதட்ட வேண்டும்?

    கையுறையும், முக்கவசமும், பாதுகாப்பு உபகரணங்களுமில்லாது நோய்த்தொற்றால் மருத்துவர்களும், செவிலியர்களும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்க அவர்களுக்கு அச்சாதனங்களை உறுதிப்படுத்தாது கைதட்டி என்னப் பயன் பிரதமரே? தனிமைப்படுத்தலும், சமூக விலகலும்தான் இப்போது அத்தியவாசியத் தேவையாக இருக்க, அதனைத் தகர்த்து முறிக்கும் விதத்தில் பிரதமரே கைதட்டச் சொல்லி அழைப்பு விடுத்து ஓரிடத்தில் ஒன்றுகூடுவதற்கு அனுமதிப்பது முறைதானா ஆட்சியாளரே? நாடு முழுமைக்கும் கோடிக்கணக்கான அடித்தட்டு, நடுத்தர வர்க்க மக்கள் அடுப்பில் நெருப்பேற்ற வழியில்லாது நிற்கையில் விளக்கில் நெருப்பேற்றச் சொல்லும் வெற்றுச்சடங்கு எதற்காக? பேரிடர் ஏற்படுத்தியிருக்கும் பேராபத்துமிக்கச் சூழலில் அவற்றிலிருந்து மீள்வதற்கும், இக்காலக்கட்டத்தில் குறைந்தபட்சத்தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டு வாழ்வதற்கும் வழிவகை செய்யாது கைதட்டவும், விளக்கேற்றவும் கூறி மக்களை கொண்டாட்ட மனநிலைக்குத் தள்ளுவது முறைதானா?

    கொரளி வித்தை, கோமாளி அறிவிப்புகள்

    கொரளி வித்தை, கோமாளி அறிவிப்புகள்

    இக்கொரளி வித்தைகளும், கோமாளித்தனமான அறிவிப்புகளும் ஒரு கவளம் சோற்றுக்கு ஆகுமா? முறையான முன்னறிவிப்பில்லாது தான்தோன்றித்தனமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் வாழ்விடமிழந்த இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி அகதியாய் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்களை நடந்தே பயணப்படும் அவலத்தை அறிவீரா பிரதமரே? கால்கடுக்க நடந்து, பசியால் செவியடைத்துப் போன அவர்களின் துயரத்தைத் துடைக்குமா உங்களது கைதட்டலும், விளக்கேற்றலும்? ‘மன்னித்துக் கொள்ளுங்கள்' என்பதென்ன துயரம் தீர்க்கவல்ல மந்திரச் சொல்லா? அதனைச் சொல்லிவிட்டதோடு தனது கடமை முடிந்துவிட்டதென நினைக்கிறாரா பிரதமர் மோடி? இராமாயணம், மகா பாரதம் எனத் புராணத் தொடர்களைப் பார்ப்பதைப் பெருமையோடு பதிவுசெய்கிற ஆட்சியாளர் பெருமக்கள், பொறுப்பற்ற ஆட்சியின் கீழ் மக்கள் படும் பாடுகளை எப்போது பார்க்கப் போகிறார்கள்?

    அன்று தற்சார்பு குறித்து கேலி

    அன்று தற்சார்பு குறித்து கேலி

    தற்சார்புப் பொருளாதாரமும், வேளாண்மையைக் கையகப்படுத்தலுமே நாட்டின் நலனுக்கு உகந்ததென வள்ளுவன் உரைத்ததை நாங்கள் உரத்து முழங்கியபோது அதனைக் கேலிசெய்தவர்கள் இப்போதுதான் அவற்றின் தேவையை உணர்ந்து அச்சொல்லையே பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். தனியார் மயம், தாராளமயம், உலகம் மயம் எனும் பொருளாதாரக் கொள்கைகள் மூலம் நாட்டையே சந்தைப்படுத்திவிட்டு இப்போது தற்சார்பு பற்றிப் பேசிப் பயனென்ன பிரதமரே? இதுகுறித்தெல்லாம் பேசினால் அவர்களைத் தேசத்துரோகி என விளிப்பது என்ன மாதிரியான சனநாயகம்? மத்திய அரசின் இத்தகையத் தொடர் செயல்பாடுகள் யாவும் முழுக்க முழுக்க மக்களின் நலனுக்கு எதிராக, பேரிடர் தந்த துயரத்தினால் காயம்பட்டு நிற்பவர்களுக்கு மேலும் துயர் கூட்டுவதாகவே இருக்கிறது என்பதே எவராலும் மறுக்க முடியா உண்மை.

    எம்பி நிதி நிறுத்தம்

    எம்பி நிதி நிறுத்தம்

    ‘ஒருநாள் வானூர்தி பறப்பது நிறுத்தப்படலாம். கப்பல் ஊர்வது நிறுத்தப்படலாம். யாவும் முடக்கப்பட்டு நிறுத்தப்படலாம். அக்காலத்தில் வேளாண்மை கைவசமிருந்து அதன்மூலம் உணவு தானியங்கள் கையிருக்கப் பெற்றால் நாம் யாரிடமும் கையேந்தி நிற்கத் தேவையில்லை' என்று எங்களது பெரிய தகப்பன் நம்மாழ்வார் கூறியதன் மகத்துவம் இப்போதாவது உங்கள் சிந்தையில் உரைக்கட்டும். இப்பேரிடர் காலத்தை எதிர்கொள்ள கூரிய திட்டமிடலும், சீரிய நடவடிக்கைகளும் பேரவசியமானது என்பதை இனியாவது ஆட்சியாளர்கள் உணர்ந்து, மக்கள் மீது சுமையை ஏற்றாது தனிப்பெரு முதலாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளையும், வரிகளையும் ரத்து செய்து, பெரும் பொருளியல் வாய்ப்புகொண்டோரிடமிருந்து வரி வருவாயைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்குரிய தொகுதி மேம்பாட்டு நிதி கையகப்படுத்தலைக் கைவிட்டு மாற்று பொருளாதாரத் தேடல் முறைகளை நோக்கிச் செல்ல வேண்டும் எனவும் மத்திய அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

    English summary
    Naam Tamilar Katchi Chief Seeman has questioned that the suspend of MPLADs.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X