பாஜக மிரட்டறாங்க.. மோடி பெயரை சொல்லவே இல்லையே.. ஏன் குறுகுறுங்குது.. சிபிஎம் பாலகிருஷ்ணன் நறுக்
சென்னை: "நகைச்சுவை நிகழ்ச்சியைக் கண்டு நடுங்கி, சிறுவர்களுக்கு எதிராக பாய்ந்து பிராண்டும் இந்தப் போக்கு, உலகம் முழுவதும் எதேச்சாதிகாரிகளிடம் காணப்பட்ட அதே போக்குதான். இது ஆபத்தானது. சர்வாதிகாரத்தனமானது" என்று சிபிஎம் கட்சியின் கே பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஜீ தமிழ் டிவியில், ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4 என்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகிறது... கடந்த 15ம் தேதி இந்த டிவியில் குழந்தைகள் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது..
அதில், மறைமுகமாக பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
என்னாது.. மறுபடியும் யோகியா.. உ.பி. தேர்தல் மீண்டும் மலரும் தாமரை: Republic TV Opinion Poll 2022

பணமதிப்பிழப்பு
குறிப்பாக, பிரதமர் மோடி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு, அவரது சுற்றுப்பயணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் மறைமுகமாக அதில் விமர்சிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.. அதில் வரும் ஒரு சிறுவன், வடிவேலுவின் பிரபல இம்சை அரசன் போல வேடமிட்டு, அவரது உடல்பாவனைகளுடன் பேசுகிறான்... "நாட்டின் வளர்ச்சிக்கு எது தடையாக உள்ளது? இந்த கருப்பு பணம். எல்லா பணத்தையும் செல்லாது என சொல்லப்போகிறேன். அப்படி செஞ்சா கருப்பு பணம் ஒழிஞ்சிடும்ல" என்று பேசுகிறான்.

சிறுவர்கள்
அதற்கு அமைச்சர் கெட்டப்பில் இருந்த இன்னொரு சிறுவன், 'இதேமாதிரி ஒரு சம்பவம் சிந்தியானு ஒரு நாட்டுல நடந்துச்சு. அந்த மன்னரும் உங்களை மாதிரிதான் முட்டாள் தனமா பண்ணாரு. ஆனால் கருப்பு பணத்தை எங்க ஒழிச்சாரு. கலர் கலரா கோர்ட்டை மாத்திட்டுல சுத்துனாரு.. லாபத்தில் உள்ளதையும் ஏன் விற்கிறீர்கள் என்று கேட்கிறான்.

லாபம்?
அதற்கு மன்னன், என்ன அமைச்சு! நீங்களும் மக்களே போலவே கேள்வி கேட்கறீங்க.. கேட்கறீர்கள்! நஷ்டத்தில் உள்ளதை வித்தால் நாம் எப்படி லாபம் பார்க்க முடியும். லாபத்தில் உள்ளதை விற்றால் தானே நாம் லாபம் பார்க்க முடியும் என்று பதிலளிக்கிறான்... இந்த வீடியோதான்.சோஷியல் மீடியாவில் படுவேகமாக வைரலானது.. இதை பார்த்த பலரும், குழந்தைகள் நிகழ்ச்சிதானே என்று சாதாரணமாகவும், நகைச்சுவையாகவும் எடுத்து கொண்டனர்.. ஆனால் பாஜகவினரே கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நடவடிக்கை
பிரதமரை எப்படி கேலி செய்து நிகழ்ச்சி நடத்தலாம் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.. அந்த சேனல் நிர்வாகத்தின் மீதும், கலந்து கொண்ட நடுவர்கள் மீதும், அக்குழந்தைகளின் பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.. அத்துடன் மட்டுமல்லாமல், இந்த நிகழ்ச்சி தொடர்பாக ஜீ தமிழ் டிவி நிர்வாகத்திடம் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.

விளக்கம்
இது தொடர்பாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், 7 நாட்களுக்கும் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், மீறும் பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் இதுகுறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.. அது தொடர்பாக பதிவிட்ட ட்வீட்டில் உள்ளதாவது:

எதேச்சதிகாரம்
"ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரண்டு சிறுவர்கள் பங்கேற்ற நகைச்சுவை நிகழ்ச்சி, முறையற்ற ஆட்சியாளர்களை எள்ளி நகையாடுகிறது. அதில் பிரதமர் மோடியை எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால் 'குற்றமுள்ள நெஞ்சமே குறுகுறுக்கும்' என்ற வகையில் பாஜகவினர் அந்த தொலைக்காட்சியை மிரட்டத் தொடங்கியுள்ளனர்... நகைச்சுவை நிகழ்ச்சியைக் கண்டு நடுங்கி, சிறுவர்களுக்கு எதிராக பாய்ந்து பிராண்டும் இந்தப் போக்கு, உலகம் முழுவதும் எதேச்சாதிகாரிகளிடம் காணப்பட்ட அதே போக்குதான். இது ஆபத்தானது. சர்வாதிகாரத்தனமானது" என்று பதிவிட்டுள்ளார்.

சீமான் கண்டனம்
அதேபோல நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஜீ தமிழ்' தொலைக்காட்சியின் நிகழ்ச்சியொன்றில் சிறுவர்கள் இருவர் மோசமான ஆட்சியாளர் குறித்து மன்னர், அமைச்சர் வேடமிட்டு, பகடி செய்ததற்காக அத்தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தலும், மிரட்டலும் விடுக்கும் பாஜகவின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. பாஜகவின் ஆட்சி குறித்து அந்நிகழ்ச்சியில் நேரடியாக விமர்சிக்கப்படாதபோதும்கூட அத்தொலைக்காட்சியின் மீது அதிகாரத்தின் மூலம் அடக்குமுறையை ஏவிவிடத்துடிக்கும் பாஜகவின் செயல்பாடு கருத்துரிமை மீதானக் கோரத்தாக்குதலாகும்.

படுகொலை
கல்புர்கி, நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கௌரி லங்கேஷ் போன்ற கருத்தாளர்களும், செயற்பாட்டாளர்களும் கொலை செய்யப்படுவதும், ஆனந்த் டெல்டும்டே, வரவர ராவ், ஸ்டோன் சுவாமி போன்ற சமூகச்செயற்பாட்டாளர்கள் கொடுஞ்சட்டங்களின் மூலம் பிணைக்கப்படுவதும், ஊடகங்கள் வெளிப்படையாக அச்சுறுத்தப்படுவதுமான நிகழ்வுகள் நாட்டின் சனநாயகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.

அறச்சீற்றம்
ஏழு ஆண்டுகால பாஜகவின் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட கொடும் சட்டங்கள், பேரழிவுத்திட்டங்களின் விளைவினால் நாட்டு மக்கள் வாடி வதங்கிக்கொண்டிருக்கையில், அதுகுறித்த அறச்சீற்றத்தையும், உள்ளக்குமுறலையும் வெளிப்படுத்தவும் தடையிடுவார்களென்றால், நடப்பது மன்னராட்சியா? மக்களாட்சியா? எனும் கேள்வி எழுகிறது. இது மக்களாட்சித் தத்துவத்திற்கெதிரான மாபெரும் சனநாயகப்படுகொலை; கருத்துச்சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் அரசப்பயங்கரவாதம்.

அறிக்கை
இதனை ஒருபோதும் அனுமதிக்கவோ, சகித்துக்கொள்ளவோ முடியாது. அதிகாரப்பலம் கொண்டு ஊடகங்களை அடக்கியாள முற்படும் பாஜக அரசின் கொடுங்கோல் செயல்பாடுகளுக்கு எனது வன்மையான எதிர்ப்பினைப் பதிவுசெய்கிறேன்" என்று சீமான் அதில் தெரிவித்துள்ளார்.