“பூதமென” உயர்ந்த பெட்ரோல் விலை.. “புஷ்ஷென” சரிந்த கச்சா எண்ணெய் விலை! எண்ணெய் நிறுவனங்கள் எங்கே?
சென்னை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிவடைந்து இருக்கும் நிலையில், உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை எப்போது குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு வாகன ஓட்டிகளிடையே எழுந்து இருக்கிறது.
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளாகவே பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் கடுமையாக அதிகரித்து வருகிறது. ஓராண்டுக்கு முன்பாகவே பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை ரூ.100 ஐ தாண்டியது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிலையும் இதே தான்.

உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை
குறிப்பாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததைக் காரணம் காட்டி கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கடுமையாக உயர்த்தின. கடைசியாக பெட்ரோல், டீசல் விலை கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி உயர்த்தப்பட்டது. அதன் பிறகு பெட்ரோல், டீசல் விலை மாற்றம் செய்யப்படாமல் அதே நிலையே தொடர்கிறது.

கச்சா எண்ணெய்
விலை ஏற்றத்தால் இந்தியாவில் பெட்ரோல் விலை பல இடங்களில் ரூ.110 ஐ தாண்டியும் சென்றது. டீசல் விலையும் கனிசமாக உயர்ந்ததால் சரக்கு போக்குவரத்துக்கான செலவு அதிகரித்து விலைவாசி உயர்வுக்கும் காரணமாக அமைந்தது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை அடுத்தடுத்த மாதங்கள் குறையத் தொடங்கியது.

203 நாட்களாக ஒரே விலை
கச்சா எண்ணெய் விலை உயரும்போது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள், கச்சா எண்ணெய் விலை குறையும்போது பெட்ரோல், டீசல் விலையையும் குறைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், கடந்த 203 நாட்கள் பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் செய்யாமல் அதே விலையே நீடிக்க செய்துள்ளன.

சரிந்த கச்சா எண்ணெய் விலை
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும் டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.94.24 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த மார்ச் மாதம் 129 டாலராக இருந்த ஒரு பீப்பாய் கச்சாய் எண்ணெய் விலை தற்போது 76.82 ஆக சரிந்து உள்ளது. அதாவது பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்ட மார்ச் மாதத்தை ஒப்பிடுகையில் தற்போது கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு ரூ.4300.70 என்ற அளவில் குறைந்து இருக்கிறது.

குறைக்காத எண்ணெய் நிறுவனங்கள்
ஆனாலும், ஒரு பைசா கூட பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 200 நாட்களில் குறைக்காதது வாகன ஓட்டிகளுக்கு ஏமாற்றத்தை கொடுத்து உள்ளது. அதேபோல் நியூயார்க் எண்ணெய் சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 71.59 டாலர் என்ற அளவில் வீழ்ச்சி கண்டு உள்ளது.

வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையிலேயே இந்தியாவில் எரிபொருள் விலை நிர்ணயம் செய்யப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன. ஆனால், கச்சா எண்ணெய் விலை உயர்த்தும்போது பெட்ரோல், டீசல் விலையை கணிசமாக உயர்த்தும் நிறுவனங்கள், கச்சா எண்ணெய் குறையும்போது கண்டுகொள்ளாமல் இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகிறார்.












Click it and Unblock the Notifications