சல்லி சல்லியாக நொறுக்கிய சிவி சண்முகம்! கொதித்தெழுந்த ‘தாமரை’ தலைகள்! ஓ.. எல்லாமே அவர் ப்ளான் தானா?
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரத்தை விட தற்போது பாஜக அதிமுக இடையிலான உரசல் தான் அரசியல் களத்தில் பேசுபொருளாக இருக்கிறது. பாஜகவுக்கு எதிராக அதிமுக மாஜி அமைச்சர்கள் தீவிரமாக பேசி வந்த நிலையில் சில நாட்களாக ஓய்ந்திருந்தது. தற்போது சிவி சண்முகத்தின் பேச்சு பாஜக அதிமுக உறவில் எரிமலையாக வெடித்திருக்கிறது.
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் அமித் ஷாவை தனியாக சந்தித்து பேசியது எடப்பாடி பழனிச்சாமி தரப்பை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதனால் பாஜக மீதான அதிருப்தியை முன்னாள் சீனியர் அமைச்சர்கள் மூலம் வெளிப்படுத்தி வருகிறது எடப்பாடி தரப்பு.
தற்போது பத்து நாடாளுமன்ற தொகுதிகள் கேட்பதாக கூறப்படும் நிலையில் தொடர்ந்து பாஜக தலைமை தனக்கு எதிராக செயல்படுகிறதோ என நினைக்கிறார் எடப்பாடி. இதன் காரணமாகத்தான் செங்கோட்டையன் உள்ளிட்ட சீனியர்கள் பாஜக தரப்பை மறைமுகமாக விமர்சித்து வந்தனர்.

ஓபிஎஸ் தரப்பு
தற்போது பாஜக தரப்பு ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாஜக கூட்டணியில் இல்லாமல், தனித்துப் போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என சில சீனியர் மாஜிக்கள் பேசிய நிலையில் தற்போது அதே பாணியை கையில் எடுக்க எடப்பாடி தரப்பு முடிவு செய்துள்ளது. இதனால் வரும் காலங்களில் பல சீனியர் மாஜிக்கள் பாஜக விமர்சனம் என்ற ஆயுதத்தை கையில் எடுப்பார்கள் என கூறப்படுகிறது. வரும் காலங்களில் இது போன்ற பேச்சுக்கள் அதிகம் இருக்கும் என சொல்லப்பட்டது.

சிவி சண்முகம்
அந்த வகையில் தான் நேற்றைய சிவி சண்முகத்தின் பேச்சும் இருந்தது என்கின்றனர் எடப்பாடி ஆதரவாளர்கள். கடலூர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர்,"தமிழகத்தில் திமுக அரசு மத்திய அரசை விமர்சித்து பேசுகிறார்கள். ஆனால் டெல்லி சென்றால் மத்திய அரசிடம் அய்யா அம்மா தாயே என கெஞ்சுகிறார்கள். 39 எம்.பி களும் பிச்சை எடுக்கிறார்கள். மத்திய அமைச்சர்களிடம் கெஞ்சுவது தான் திமுகவின் சமுகநீதி என விமர்சித்தார். மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக - பாஜக கூட்டணி வர உள்ளது. திமுகவுடன் கூட்டணி வைத்த கட்சிகள் ஓட போகிறார்கள்"என்றார்.

திமுக கூட்டணி
இந்த பேச்சு அதிமுக- பாஜக கூட்டணியில் மட்டுமல்லாது திமுக கூட்டணியிலும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சிவி சண்முகத்தின் பேச்சுகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என திமுக தரப்பு கூட்டணி கட்சிகளுக்கு தெரிவித்திருந்தாலும் அவர்களுக்குள்ளும் ஒரு அச்சம் இருக்கத்தான் செய்கிறது. ஏற்கனவே அதிமுக காங்கிரஸ் விசிக உள்ளிட்ட கூட்டணிகள் அமைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் சிவி சண்முகத்தின் பேச்சு இதனை உறுதி செய்வதாக அமைந்திருக்கிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

என்ன காரணம்?
அதே நேரத்தில் பாஜக தரப்பும் இதற்கு கடும் எதிர்வினை ஆற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பாஜக அண்ணாமலை, நாராயணன் திருப்பதி உள்ளிட்டவர்களும் கருத்து தெரிவித்திருக்கின்றனர். திமுக எதிர்ப்பே பாஜக அரசியல் செய்வதற்கு பிரதானம். அப்படி திமுகவுடன் கூட்டணி சேர வாய்ப்பில்லை. இதனால் அதிமுக திமுக நேரடி போட்டியோடு பாஜகவை கழட்டிவிடும் ஏற்பாடு தான் சிவி சண்முகத்தின் இந்த பேச்சு என்கின்றனர் அதிமுகவினர். ஏற்கனவே செங்கோட்டையன், கேபி முனுசாமி உள்ளிட்ட பலர் பாஜக தனித்துப் போட்டியிட முடியுமா என மறைமுக சவால் விட்டு நிலையில் தற்போது சிவி சண்முகம் கூட்டணி மாறும் பேச்சு முக்கிய விவகாரமாக இருக்கிறது.

அவர் தான் காரணமா?
சிவி சண்முகம், செங்கோட்டையன், கேபி முனுசாமி ஆகியோர் பேசியது அவர்கள் கருத்து இல்லை எனவும் பாஜக தலைமை ஓ.பன்னீர்செல்வத்தை தீவிரமாக ஆதரித்து வருவதால் கடும் அதிருப்தியில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி மாஜிக்களை விட்டு பாஜகவின் பல்ஸ் பார்க்கிறார் எனவும் அதன் வெளிப்பாடு சிவி சண்முகத்தின் இந்த பேச்சு என்கின்றனர். வரும் காலத்தில் பாஜக தலைமையின் நடவடிக்கைகள் மாறாவிட்டால் முன்னாள் அமைச்சர்களின் பேச்சுக்கள் இன்னும் அதிகரிக்கும் என்கின்றனர் சேலம் ரத்தத்தின் ரத்தங்கள்.












Click it and Unblock the Notifications