சென்னைக்கு அருகே 180 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல்-நாளை அதிகாலை கரையை கடக்கிறது!
சென்னை: வங்கக் கடலில் உருவான மாண்டஸ் சூறாவளி புயல் சென்னைக்கு தென்கிழக்கே 180 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. தற்போது மணிக்கு 12 கி.மீ.வேகத்தில் நகர்ந்து வரும் மாண்டஸ் புயல் நாளை அதிகாலை மாமல்லபுரம் அருகே கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த 5-ந் தேதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியது. பின்னர் இது புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டிருக்கிறது.

தென்கிழக்கு வங்க கடலில் மையம் கொண்டிருக்கும் மாண்டஸ் புயல் தற்போது தீவிர புயலாக வலுவடைந்த்உள்ளது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 180 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டிருக்கிறது. இப்புயல் இன்று இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்க உள்ளது. மணிக்கு 15 கி.மீ.வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த மாண்டஸ் புயல் தற்போது மணிக்கு 12 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 80 கி.மீ.வேகத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் வடதமிழகம், புதுச்சேரியிலும் மிக மிக பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் மொத்தம் 28 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் இன்றும் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.