ஆந்திரா பக்கம் போன முரசு.. இனி புயல் உருவாகினால் தமிழகத்திற்கு தான்.. வானிலை மைய இயக்குனர் பேட்டி
சென்னை: முரசு புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை 4 மணிக்குள் கரையை கடக்கும் எனவும், கரையை கடக்கும் போது 120 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் துரை பேட்டியளித்துள்ளார். மேலும் இந்த புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூரில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், வட தமிழக மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தற்போது வரை 18 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது எனவும், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் உருவாகும் புயல்கள் தான் தமிழகத்திற்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

புயல் எப்போது கரையை கடக்கும்?
நேற்று தென் மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய முரசு புயல் வட மேற்கு திசையில் நகர்ந்து தற்போது தீவிர புயலாக மாறியுள்ளது. மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை 4 மணிக்குள் ஆந்திராவின் நெல்லூர் மற்றும் நரசாப்பூர் இடையே கரையைக் கடக்கக்கூடும். நெல்லூருக்கு தென்கிழக்கே 160 கிமீ தூரத்தில் நிலைகொண்டுள்ளது.
இந்த முரசு புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 100 முதல் 110 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். அவ்வப்போது 120 கிமீ வேகத்திலும் காற்று வீசக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழை முதல் மிக கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னை கடப்பாக்கத்தில் 15 செமீ மழை பதிவாகியுள்ளது. மணலியில் 14 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
சென்னையில் மிக கனமழை பெய்யும்
அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மீனவர்கள் வட தமிழக கடலோர பகுதிகளில் இன்று மாலை முதல் நாளை மாலை வரை 70 கிமீ முதல் 80 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.
பருவமழை 18 சதவீதம் கூடுதல் பெய்துள்ளது
வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 1 ஆம் தேதியில் இருந்து தற்போது வரை 22 செமீ மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 18 சதவீதம் அதிகம் பதிவாகியுள்ளது. நவம்பர் மாதம் பெரும்பாலும் இயல்பை விட அதிகமாகவே பெய்யும். எனவே தற்போதைய ஆண்டும் நவம்பர் மாதத்தில் அடுத்தடுத்து புயல்களின் காரணமாக மழையின் அளவு அதிகமாக இருக்கலாம். பருவமழை மட்டும் என்று பார்த்தால் இயல்புக்கு குறைவாகவே இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. புயல்களால் மழை அளவு இயல்புக்கு அதிகம் வர வாய்ப்பு உள்ளது.
இனி உருவாகும் புயல்கள் தமிழகம் நோக்கி வரும்
நவம்பர் 7 ஆம் தேதி முதல் தமிழகம் முழுக்க மீண்டும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் உருவாகும் புயல்கள் தமிழகத்தை நோக்கி வரும். அதற்கு முன்பு அதாவது அக்டோபர் மாதத்தில் உருவாகக் கூடிய பெரும்பாலான புயல்கள் தமிழகம் நோக்கி வர வாய்ப்பில்லை. எனவே இனி உருவாகும் புயல்கள் தமிழகம் நோக்கி வர வாய்ப்பு உள்ளது.. என்று கூறினார்.




Click it and Unblock the Notifications
