அடை மழையால் தமிழகத்தில் நிரம்பி வழியும் அணைகள்..ஆர்ப்பரிக்கும் அருவிகள்..தெறித்து ஓடும் ஆறுகள்
சென்னை: தமிழகம் முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல மாவட்டங்களில் விடாது கொட்டி வரும் கனமழையால் அணைகள் நிரம்பிகள் வழிகின்றன. ஆடி மாதத்திலேயே அருவிகள் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன. ஆறுகளில் புதுப்புனலாய் தண்ணீர் பிரவாகம் எடுத்துள்ளது. பல லட்சம் கனஅடி தண்ணீர் கடலோடு சங்கமித்துக் கொண்டிருக்கின்றது.
Recommended Video
தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வந்ததால் மேட்டூர் அணைக்கு வழக்கத்தை விட மிக அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
இதன் காரணமாக சேலம், தர்மபுரி, நாமக்கல், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருப்பூர், ஈரோடு ஆகிய 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. காவிரி ஆற்றில் பெருமளவுக்கு நீர் திறக்கப்பட்டுள்ளதால் நாமக்கல் குமாரபாளையம் நகராட்சியில் ஆற்றங்கரையில் உள்ள பல வீடுகளுக்கு வெள்ள நீர் புகுந்துள்ளது.

கொள்ளிடத்தில் பெரு வெள்ளம்
முக்கொம்பு அணைக்கு சுமார் வினாடிக்கு 2.5 லட்சம் கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.
திருச்சி முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தின் வழியாக வினாடிக்கு 1 லட்சத்து 38 ஆயிரத்து 712 கனஅடியும், காவிரியில் 66,396 கனஅடியும் திறக்கப்பட்டது. கல்லணையில் இருந்து கொள்ளிடத்தில் வினாடிக்கு 50,520 கனஅடி திறக்கப்படுவதால் மொத்தமாக கொள்ளிடத்தில் வினாடிக்கு 2 லட்சத்து 5 ஆயிரத்து 108 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் முழுவதும் கீழணை வழியாக கடலுக்கு திறக்கப்பட்டுள்ளது.

பொங்கி வரும் காவிரி கடலில் சங்கமம்
காவிரியிலும், கொள்ளிடத்திலும் வெள்ள நீர் அபாய கட்டத்தை தாண்டி செல்கிறது. எனவே காவிரி, கொள்ளிடத்தில் மக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்ல வேண்டாம் என திருச்சி, கரூர், தஞ்சை, திருவாரூர் மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். காவிரி ஆற்றுக்கு செல்லும் பாதை தடுக்கப்பட்டு எச்சரிக்கை வாசகம் ஒட்டப்பட்டுள்ளது. பல இடங்களில் காவல் துறையினர், கிராம நிர்வாக அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேட்டூரில் திறந்து விடப்படும் 2 லட்சம் கன அடி நீரும் முக்கொம்பில் கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு கடலுக்கு அனுப்பப்படுகிறது. கொள்ளிடம் ஆறு மயிலாடுதுறை மாவட்டம் பழையாறு என்ற இடத்தில் கடலில் கலக்கிறது.

நிவாரண முகாம்கள்
திருச்சியில் ஆற்றின் கரையோரமாக வசிப்பவர்கள் தங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஆறு மையங்களில் 308 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, கரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் காவிரி கரையோரம் உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 4,035 பேரை பத்திரமாக மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து உள்ளனர். இதில் 1,608 பேர் ஆண்கள், 1827 பேர் பெண்கள், குழந்தைகள் 600 பேர் உள்ளனர்.

பவானி ஆற்றில் வெள்ளம்
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்துவரும் கனமழையால் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பிய நிலையில் அந்த அணையிலிருந்து 16 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. பில்லூர் அணையின் நீரும் நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழையின் நீரும் வந்துகொண்டிருப்பதால் பவானி சாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. ஆழியார் அணையின் நீர்மட்டம் 118 அடியை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்புக் கருதி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

போக்குவரத்து துண்டிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாது மலை அருகே நம்பியம்பட்டு பகுதியில் தரைப்பாலத்திற்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் தொடர்ந்து பெய்த மழையால் மணலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் 20க்கும் அதிகமான கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பெய்த கன மழையால் சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அருவிகளில் வெள்ளம்
முல்லைப்பெரியாறு அணை 137 அடியை எட்டி கடல் போல காட்சியளிக்கிறது. அணையில் இருந்து கேரளாவிற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள கும்பக்கரை, சுருளி அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அந்த அருவிகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்யும் கனமழையால் வரதமாநதி நீர்த்தேகம் நிரம்பியுள்ளது. குதிரையாறு அணை நிரம்பியதால் அந்த அணையும் திறக்கப்பட்டுள்ளது.

வைகையில் பெருகிய வெள்ளம்
வைகை அணையின் நீர் பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் கன மழையின் காரணமாக, வைகை அணை நிரம்பும் நிலையை எட்டியுள்ளதால், அணை திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் மதுரை நகரைக் கடந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இதனால், மதுரை நகரின் மையப் பகுதியில் உள்ள கல் பாலம் நீரில் மூழ்கியுள்ளது. வைகை அணைக்கு வினாடிக்கு 3502 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீர் முழுவதுமாக உபரி நீராக வெளியேற்றப்படுவதால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆர்ப்பரித்து கொட்டும் குற்றால அருவிகள்
விடாது கொட்டி வரும் தொடர் கனமழையால் பிரதான அருவியான குற்றால மெயின் அருவி, புலியருவி, ஐந்தருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரித்து வருவதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு நலன்கருதி போலீசார் அருவியில் குளிக்க தடை விதித்துள்ளனர். கொடைக்கானலில் வெள்ளி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் அழகை சுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர்.

அடைமழை
திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, விருதுநகர் மாவட்டங்களிலும் தொடர் மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தால் அங்குள்ள மக்களும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி நீலகிரி, திருச்சி, கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையும் தயார் நிலையில் உள்ளது. ஒவ்வொரு மீட்பு படையிலும் 22 வீரர்கள் உள்ளனர். இது தவிர மாவட்ட நிர்வாகம் சார்பில் நீச்சல் தெரிந்த வீரர்கள், பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல்வர் ஸ்டாலின் பேச்சு
மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் அதிக அளவு உபரி நீரினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர்களுக்கு அங்கு போதுமான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்டறிந்தார்.

வெள்ளக்காடாக மாறும் தமிழகம்
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த ஆண்டு பருவமழை ஆரம்பத்தில் நிதானமாக பெய்தாலும் ஜூலை மாதத்தில் பல மாவட்டங்களில் கொட்டித்தீர்த்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகின்றன. ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலும் பெய்யும் மழையால் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அக்டோபர் மாதத்தில் வடகிழக்குப் பருவமழையும் தீவிரமடைந்தால் இந்த ஆண்டும் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாற வாய்ப்புள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications