புயல் இல்லை... கடலூருக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் - பாலச்சந்திரன் தகவல்
தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் கடலூர் அருகே நாளை மாலை கரையை கடக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை மாலைக்குள் கடலூரில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் 11ஆம் தேதி காலை முதல் வீசக்கூடும் என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. ஆரம்பம் முதலே வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. சென்னையில் கடந்த 4 நாட்களாக மிக பலத்த மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சில நாட்களாக மழை பெய்தது. பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
இந்த நிலையில் வங்கக்கடலின் தென்கிழக்கில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. அது இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. காலை 8.30 மணியளவில் அது தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் மையம் கொண்டிருந்தது.

கடலூருக்கு அருகே கரையை கடக்கும்
இது அடுத்த 12 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடைகிறது. பின்னர் வலுவடைந்த நிலையிலேயே மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்கிறது. இது இன்று பிற்பகலில் இருந்து தமிழகத்தின் கடலோர பகுதியை நோக்கி நகரும். இன்று இரவு தமிழகத்தின் கடலோர பகுதிக்கு மிக அருகில் வந்து விடும். நவம்பர் 11ஆம் தேதி வியாழக்கிழமை வட தமிழக கடற்கரையை அடையும். அதன் பிறகு தொடர்ந்து மேற்கு- வட மேற்கு திசை நோக்கி நகரும். நாளை மாலை கடலூர் அருகே காரைக்கால்- ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

30 கிலோமீட்டர் வேகத்தில் காற்று
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன், தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக கடற்கரை பகுதியை நாளை காலை 11 மணி அளவில் நெருங்கும். அதனை தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா, வட தமிழகம் - புதுச்சேரி கடற்கரையை காரைக்காலுக்கும் - ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் கடலூருக்கு அருகில் நாளை மாலை கடக்கக்கூடும். இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் 11ஆம் தேதி காலை முதல் வீசக்கூடும் என்று கூறினார்.
Recommended Video

இன்று அதி கனமழை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கோயம்புத்தூர் தர்மபுரி ஈரோடு கிருஷ்ணகிரி நாமக்கல் அரியலூர் பெரம்பலூர் புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் .

அதிகனமழை கவனம்
நாளை திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், செங்கல்பட்டு, புதுச்சேரி, கோயம்புத்தூர், நீலகிரி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

கனமழை நீடிக்கும்
நவம்பர் 12ம் தேதி கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், வேலூர் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், நவம்பர் 13ம் தேதி நீலகிரி,கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

கனமழை நீடிக்கும்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சில பகுதிகளில் அதிகனமழையும் பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

சூறாவளி வீசும்
இன்றும் நாளையும் தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் தமிழக கடலோர பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடை இடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications