சூர்யாவின் அதிரடிக்கு பின்னணியில் ‘ட்விஸ்ட்’.. டெல்லியில் இருந்து வந்த மெசேஜ்.. 2 பேர் ‘டார்கெட்’!
சென்னை : பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகன் மட்டுமல்லாது, மத்திய அமைச்சர் எல்.முருகனையும் திருச்சி சூர்யா விமர்சித்துவிட்டு பாஜகவில் இருந்து விலகியிருப்பது பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவில் அண்ணாமலைக்கு குடைச்சலாக இருக்கும் நிர்வாகிகளை கட்டம் கட்ட, திருச்சி சூர்யா மூலம் அண்ணாமலை ஸ்கெட்ச் போட்டிருக்கலாம் என கமலாலய வட்டாரத்திலேயே கிசுகிசுக்கப்படுகிறது.
இந்நிலையில் தான், நேற்று அண்ணாமலை டெல்லி சென்றிருந்த நிலையில், திருச்சி சூர்யா, அண்ணாமலைக்கு கடிதம் எழுதிவிட்டு பாஜக உடனான உறவை முறித்துக்கொள்வதாக அறிவித்தார்.
திருச்சி சூர்யா விவகாரம் தொடர்பாக அண்ணாமலையிடம் பாஜக மேலிடம் விளக்கம் கேட்ட நிலையில், திருச்சி சூர்யாவை டிஸ்மிஸ் செய்யுமாறு தலைமை கூறியதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலை அண்ணாமலை திருச்சி சூர்யாவுக்கு தெரிவித்ததும் தான் அவர் உடனே விலகுவதாக அறிவித்ததாக பேச்சுகள் உலவுகின்றன.
திருச்சி சூர்யாவின் ஓயாத அதிரடி- பாஜகவில் இருந்து வெளியேற காரணமே 'நீங்க'தான் பிரதர்...பொளேர் போடு!

அண்ணாமலை தலைவரானதும்
தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டதும், தமிழக பாஜகவின் புதிய தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியமனம் செய்யப்பட்டார். அண்ணாமலை பாஜக தலைவர் ஆனதில் இருந்து தமிழக பாஜகவின் மூத்த தலைவர்கள் யாரையும் மதிப்பது இல்லை, யாரிடமும் எந்த ஆலோசனையும் கேட்பதும் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் சீனியர்கள் பலர் அதிருப்தியில் இருந்து வந்தனர்.

கேசவ விநாயகன் தலையீடு
சீனியர்களான பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் போன்றவர்களே அண்ணாமலை மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்பட்டது. மாநிலம் முழுவதும் பல்வேறு பொறுப்புகளிலும் தனக்கு தோதானவர்களையே நியமிக்க முயற்சிகளை மேற்கொண்டார் அண்ணாமலை. ஆனால், பாஜகவைப் பொறுத்தவரை வலிமையான பதவியான மாநில அமைப்புச் செயலாளர் என்ற பொறுப்பில் இருந்த கேசவ விநாயகன், நிர்வாகிகள் நியமனத்தில் அதிகமாகத் தலையிட்டு வந்துள்ளார்.

நெருக்கடி
இதன் காரணமாக கேசவ விநாயகனுக்கும், அண்ணாமலைக்கும் இடையே உரசல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கட்சியின் பல்வேறு மட்டங்களிலும் ஆதிக்கம் செய்வதை விரும்பாமல், கேசவ விநாயகன் தொடர்ச்சியாக நெருக்கடி கொடுத்து வந்ததாகவும், முக்கிய பொறுப்புகளில் தனக்கு ஆதரவானவர்களை நியமிக்க உத்தரவிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே பனிப்போர் மூண்டது.

கேடி ராகவன் சர்ச்சை
இந்நிலையில் தான், மேலிடத்தில் தனது செல்வாக்கைப் பெருக்கிக்கொண்டு, தனக்கு எதிராக அரசியல் செய்பவர்களை காலி செய்ய அண்ணாமலை திட்டமிட்டுச் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடந்த ஆண்டு கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த கே.டி.ராகவனின் ஆபாச வீடியோ வெளியானது. இந்த விவகாரத்தில் பாஜகவின் மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன் மீது குற்றம்சாட்டப்பட்டது.

மீண்டும் மீண்டும் கேசவ விநாயகன்
இந்நிலையில் சமீபத்தில், பாஜகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டெய்சி சரண் - திருச்சி சூர்யா சிவா செல்போன் உரையாடல் ஆடியோ விவகாரத்திலும் கேசவ விநாயகன் பெயர் குற்றம்சாட்டப்பட்டது. பாஜக சிறுபான்மை அணி தலைவர் டெய்சி சரண் செல்போனில் வாக்குவாதம், ஆபாச பேச்சு விவகாரத்தில் சிக்கிய திருச்சி சூர்யா சிவா பாஜகவில் இருந்து விலகுவதாக நேற்று அதிரடியாக அறிவித்தார். வரும் தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும். அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் மாற்றவேண்டும் என்று கட்சியில் இருந்து விலகல் தொடர்பான அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

சபையேறும் சொல்
பாஜகவைப் பொறுத்தவரை அமைப்பு செயலாளர் பதவி என்பது முக்கியமான பதவி. அவர், நிர்வாக ரீதியாக மாநில தலைவரை விட அதிகாரம் மிக்கவர். ஆ.எஸ்.எஸ் பின்னணி கொண்ட அமைப்புச் செயலாளரின் சொல் நாக்பூர், டெல்லி வரை சபையேறும். அவரையும் காலி செய்து விட்டால் கட்சியில் நான் வைப்பது தான் சட்டம் என்ற வகையில் அண்ணாமலை கருதுவதாக கூறப்படுகிறது. இதனால் தான் 2 விவகாரத்திலும் கேசவ விநாயகன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டெல்லியில் அண்ணாமலை
இந்த நிலையில் தமிழக பாஜவில் நடைபெறும் சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக திடீரென பாஜக மேலிடம் அண்ணாமலையை டெல்லிக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. அதன் பேரில் டெல்லி சென்ற அண்ணாமலையிடம் தமிழக பாஜவில் நடக்கும் விவகாரம் தொடர்பாக விசாரிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அண்ணாமலை டெல்லியில் இருக்கும்போதே, திருச்சி சூர்யா, தனது விலகலை அறிவித்தார்.

கேசவவிநாயகத்தை மாற்ற வேண்டும்
நேற்று பிற்பகலில் தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜகவுடனான தனது உறவை முறித்துக்கொள்வதாக அறிவித்தார் சூர்யா. அதில், அடுத்த தேர்தலில் பாஜக இரட்டை இலக்கை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகத்தை, தமிழக பாஜக மாற்ற வேண்டும். இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும். இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலை ஆதரவு இருந்தும்
பாஜகவில் இருந்து 6 மாதங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டால் பதவி தேடி வரும் என அண்ணாமலை, சூர்யாவுக்கு மிகவும் அனுசரணையாகச் செயல்பட்டார். அண்ணாமலை எடுத்த நடவடிக்கையை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன் என்றும் மீண்டும் அவர் நம்பிக்கையை மீட்டு வருவேன் என்றும் கூறியிருந்தார் சூர்யா. இந்நிலையில் தான் திடீரென இந்த விலகல் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அப்போதும், அண்ணாமலை மீதான தனது நெருக்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் சூர்யா.

பாராட்டு பத்திரம்
அண்ணன் அண்ணாமலைக்கு நன்றி, இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம். நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம், நீங்கள் நிச்சயம் 2026யில் தமிழக முதலமைச்சராக வருவீர்கள். கடந்த சில மாதங்களாக உங்களுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் அடுத்த பிரதமர் வேட்பாளராக கூட தேர்வு செய்யப்படலாம். வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும் என அண்ணாமலைக்கு பாராட்டு பத்திரம் வாசித்துவிட்டே கிளம்பி இருக்கிறார்.

எல்.முருகன் + கேசவ விநாயகன்
மேலும், எல்.முருகன் மற்றும் கேசவ விநாயகம் அவர்களே, இனியாவது கட்சியில் உள்ளவர்களை நம்ப முயற்சியுங்கள். உங்களின் தலையீடு இல்லாமல் அண்ணாமலை பல அற்புதங்களை நிகழ்த்த கூடியவர். மக்களுடைய தலைவரை சுதந்திரமாக செயல்படவிடுங்கள். காயத்ரியை வைத்தும் டெய்சியை வைத்தும் உங்களுடைய விளையாட்டை இங்கு ஆடாதீர்கள். தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்றால் நீங்கள் இருவரும் அண்ணாமலையின் வழியில் வராதீர்கள் என்றும் கடிதம் எழுதியுள்ளார் சூர்யா.

டெல்லி மேலிடம் விசாரணை
சூர்யாவின் இந்த திடீர் விலகலுக்கும், எல்.முருகன், கேசவ விநாயகன் மீதான பரபர குற்றச்சாட்டுகளுக்கும் பின்னணி, அண்ணாமலையிடம் நடந்த டெல்லி மேலிட விசாரணை தான் என்கின்றனர் பாஜக வட்டாரத்தினர். டெல்லியில், அண்ணாமலையிடம் டெய்சி ஆடியோ விவகாரம் சர்ச்சை பற்றி விசாரித்த மேலிட பொறுப்பாளர்கள் பி.எல்.சந்தோஷ், சுதாகர் ரெட்டி ஆகியோர், கட்சி விவகாரம் அம்பலப்படுவது சரியல்ல, கட்சிக்கு மக்கள் ஆதரவு கிடைக்காமல் போய்விடும் எனக் கூறியுள்ளனர்.

டிஸ்மிஸ் - அண்ணாமலை
மேலும், கட்சிக்குள் இருப்பவர்கள் பற்றி கேவலமான விமர்சனங்களைச் செய்பவரை கட்சியில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர்கள் அண்ணாமலையிடம் கூறியுள்ளனர். எனினும் தனது தீவிர ஆதரவாளரான சூர்யாவை டிஸ்மிஸ் செய்ய விரும்பாத அண்ணாமலை, இதனை அவருக்கு தெரியப்படுத்தி, அவராகவே விலகும்படி சொல்லியுள்ளார். இதையடுத்தே, அண்ணாமலை டெல்லியில் இருக்கும்போதே, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டார் சூர்யா.

அண்ணாமலை அஜெண்டா
அதோடு, எல்.முருகன், கேசவ விநாயகனையும் குற்றம்சாட்டி, இவர்களால் பாஜக வளராது என்ற புகாரையும் வைத்திருக்கிறார் சூர்யா. கேசவ விநாயகன், எல்.முருகன் ஆகியோர் அண்ணாமலைக்கு எதிராக டெல்லி தலைமையிலும், தமிழக பாஜகவிலும் சில குடைச்சல்களை கொடுத்து வந்ததன் காரணமாகவே, அண்ணாமலை அவர்களைப் பற்றிய குற்றச்சாட்டுகளை தனது ஆதரவாளரான சூர்யா மூலம் வெளிப்படுத்த வைத்திருக்கிறார், எல்லாமே பக்காவான அஜெண்டா தான் என்கிறார்கள் பாஜக வட்டாரத்தில்.