பஞ்சாயத்து முடிஞ்சுது.. பாஜக சமரசத்தை ஏற்ற எடப்பாடி!? நெருப்பில்லாம புகையுமா? அதான் அந்த ட்விஸ்ட்டா?
சென்னை : ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே பாஜக தலைமை சமரசம் செய்து வைக்கும் முயற்சி கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும், ஜனவரிக்குள் அதிமுக பஞ்சாயத்துகள் முடிவுக்கு வரும் என்றும் தகவல்கள் பரபரக்கின்றன.
எடப்பாடி பழனிசாமி முரண்டு பிடித்த நிலையில், டெல்லி பாஜக தலைமை சில ஆப்ஷன்களை கொடுத்து, சமரசத்திற்கு ஓகே சொல்ல வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதில், எடப்பாடி பழனிசாமிக்கு டேமேஜ் இல்லை என்பதால் அவரும் ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இருப்பதாகவும், அதையொட்டியே, அதிமுக பஞ்சாயத்தை விரைந்து முடிவுக்குக் கொண்டு வர பாஜக இந்த சமரச முயற்சியில் இறங்கியதாகவும் சொல்லப்படுகிறது.
அதன்படி, ஓபிஎஸ்ஸூக்கு ஒரு முக்கிய பதவியும், ரவீந்திரநாத்துக்கு எம்.பி சீட்டும் உறுதி, அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக எடப்பாடியே தொடர்வார் என்பதுதான் கண்டிஷனாம்.

சமரச முயற்சி
அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவை, பாஜக தங்களது வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளும், அதனால், ஓபிஎஸ் - ஈபிஎஸ் சண்டையை வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருக்கும், தீர்த்து வைக்காது என்ற கருத்துகள் இருந்து வந்தாலும் தேர்தல் கண்ணோட்டத்தில் பாஜக தலைமை சிந்திப்பதால், விரைவாகவே இந்தப் பிரச்சனையை தீர்த்து வைக்க விரும்புகிறதாம். இதையொட்டியே, ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரிடமும், தலைமைக்கு நெருக்கமான புள்ளிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம். சமரச முயற்சியாக, இரு தரப்புக்கும் சில ஆப்ஷன்களை கொடுத்திருக்கிறதாம் பாஜக தலைமை.

தேர்தல் ஆணையம்
அதிமுகவை பொறுத்தவரை தேர்தல் ஆணையத் தகவல்படி, தற்போது 2017 செப்டம்பரில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் தான் இருக்கின்றன. அதுவும் 2022 செப்டம்பரோடு 5 ஆண்டு பதவிக்காலம் முடிந்துவிட்டதால், தற்போது எந்தப் பதவியுமே இல்லாத நிலை தான் இருக்கிறது. அதற்கடுத்து 2021 டிசம்பரில் தேர்தல் நடத்தி அனுப்பிய நியமனங்களை இன்னும் தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. அதன்பிறகு, ஓபிஎஸ் - ஈபிஎஸ் பஞ்சாயத்தைத் தொடர்ந்து இரு தரப்பிலும் பல மனுக்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்கவில்லை.

அமைதியோ அமைதி
இதற்கிடையே, அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் சுப்ரீம் கோர்ட்டில் செய்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. வழக்கமாக, ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்பும், எதிரெதிர் வாதங்களை முன்வைத்து வாதாடுவார்கள். ஆனால், கடந்த 15ஆம் தேதி நடந்த இந்த வழக்கு விசாரணையின்போது இரு தரப்புமே மிகவும் அமைதியாக இருந்தனர். இது இதுவரை காணாத நிகழ்வாக இருந்தது. சமீபத்தில் கூட, கூடுதல் மனுவை தாக்கல் செய்தது எடப்பாடி பழனிசாமி தரப்பு. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே அமைதிக்குத் திரும்பியுள்ளது.

பொதுக்குழு வழக்கு ட்விஸ்ட்
இந்த வழக்கை நேரமின்மை காரணமாக நாளைக்கு தள்ளி வைக்கலாமா என நீதிபதிகள் கேட்டதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பே முன்வந்து, கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின் விசாரிக்கலாம் என்று சொன்னது. ஓபிஎஸ் தரப்பும் அதையே வழிமொழிந்தது. இதையடுத்து நீதிபதிகள் விசாரணையை ஜனவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். எடப்பாடி தரப்பு, முன்கூட்டிய விசாரணையைக் கூட கோரவில்லை. இது வழக்கத்திற்கு மாறானதாக இருந்தது. ஓபிஎஸ், வழக்கை இழுத்தடிக்க முயன்று வந்த நிலையில், ஈபிஎஸ் தரப்பும் அதே முயற்சியை மேற்கொண்டது பெரிய ட்விஸ்ட்டாக அமைந்தது.

என்ன நடக்குது?
அப்படியென்றால் அடுத்த விசாரணை தேதியான ஜனவரி 4ஆம் தேதிக்குள், ஈபிஎஸ் - ஓபிஎஸ்ஸுக்கு வேறு ஏதாவது திட்டம் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜக தலைமை தரப்புடன், ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே ஆலோசித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், ஈபிஎஸ் சமீபத்தில் டெல்லி சென்றார். ஓபிஎஸ், குஜராத் சென்று பாஜகவின் முக்கிய தலைவர்களைச் சந்தித்தார். அதன்பிறகு நடந்த இந்த வழக்கு விசாரணையில் தான் இருதரப்பிலும் இத்தகைய நடவடிக்கை மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

பஞ்சாயத்து ஓவர்
இதனால், அதிமுகவின் இரு தரப்பும், பாஜகவின் சமாதானத்தை ஏற்றுக்கொண்டு விட்டதா என்ற யூகங்கள் கிளம்பியுள்ளன. பாஜக வட்டாரத்தில், ஓபிஎஸ், ஈபிஎஸ் பஞ்சாயத்து முடிவுக்கு வந்துவிட்டது என்று தகவல்கள் அலையடிக்கின்றன. அதிமுக பொதுச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி எடுத்துக்கொள்வார், ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சியில் பொறுப்பு இல்லாமல், பாஜக தயவில் ஒரு முக்கியமான பதவி, அதாவது ஆளுநர் போன்ற நியமனப் பதவி கொடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

ஓபிஎஸ் டீமுக்கு பதவிகள்
ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத்துக்கு அதிமுகவில் எம்.பி சீட் வழங்கப்பட வேண்டும், தேர்தலில் ஜெயிக்க முடியவில்லை என்றால், ராஜ்யசபா சீட் வழங்க வேண்டும். நாடாளுமன்றத்தில் எம்.பியாக இருக்கும் ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்படும், அதற்கு ஈபிஎஸ் தரப்பு குறுக்கே நிற்கக்கூடாது என சமரசம் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இரு தரப்பும் தொடர்ந்த வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற வேண்டும் என்ற சமரச பேச்சுவார்த்தைகள் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கைம்மாறு
அதிமுக சிக்கலை தீர்த்து வைப்பதற்கு கைம்மாறாக பாஜகவுக்கு கூட்டணியில் கணிசமான இடங்களை அதிமுக வழங்க வேண்டும், கூட்டணி கட்சிகளை பாஜக விரும்புவது போல தீர்மானித்துக் கொள்ளலாம், அதாவது அமமுக கூட்டணியில் இணைவதை எடப்பாடி விரும்பவில்லை என்றால், பாஜகவே தங்களுக்கு ஒதுக்கப்படும் சீட்களில் அமமுகவுக்கு பிரித்துக் கொடுக்கும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பதாக பாஜக வட்டாரத்தில் பேச்சுகள் உலவுகின்றன.

ஆளுநர் ஓபிஎஸ்?
பாஜக தலைமை, ஓபிஎஸ் - ஈபிஎஸ் பிரச்சனையை தீர்க்க, ஓபிஎஸ்ஸுக்கு ஆளுநர் பதவி தருவதாக பேசி வருவதாக கூறப்படும் நிலையில், இதேபோன்ற கருத்தை ஈபிஎஸ் ஆதரவாளரான ராஜன் செல்லப்பா சமீபத்தில் முன்வைத்ததும் குறிப்பிடத்தக்கது. பாஜகவுடன் தொடர்பில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், மணிப்பூர், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் ஆளுநர் பதவியை வாங்கிக் கொண்டு போய்விட்டால் அதிமுகவுக்கு தொல்லை நீங்கும் என்று ராஜன் செல்லப்பா பேசி இருந்தார்.

நெருப்பில்லாமல் புகையுமா?
பாஜக வட்டாரத்தில் பேசப்படுவது போன்றே ஈபிஎஸ் ஆதரவாளரும் பேசியிருப்பது, இந்தப் பேச்சுகளுக்கு வலு சேர்க்கிறது. சமீபத்தில் குஜராத் சென்ற ஓபிஎஸ், காவித் துண்டு அணிந்து போஸ் கொடுத்ததும், அவர் பாஜகவுக்கு எப்போதும் அனுசரணையாக இருப்பேன் எனக் காட்டுவதாகவே எடுத்துக் கொள்ளலாம், பாஜக அரசு, அவரை ஆளுநராக நியமித்தால் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications