தவெகவிற்கு சிக்கல்.. சென்னை – காஞ்சி – திருவள்ளூர் – செங்கல்பட்டு மாவட்டங்களில் திமுக மெகாபிளான்
சென்னை: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களை வென்றது. இந்நிலையில் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க திமுக முக்கிய வியூகத்தை கையில் எடுத்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் மொத்தம் 37 சட்டசபை தொகுதிகள் உள்ளன. சென்னையில் 16 தொகுதிகள், திருவள்ளூரில் 10 தொகுதிகள், செங்கல்பட்டில 7 தொகுதிகள், காஞ்சிபுரத்தில் 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

பொதுவாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் திமுகவின் கோட்டையாக இருக்கும். ஆனால் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக மற்றும் அதிமுகவை வீழ்த்தி பெரும்பாலான இடங்களை தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏக்கள் வென்றனர்.
குறிப்பாக சென்னை கொளத்தூரில் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் தோல்வியடைந்தார். சென்னையில் 2 தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது. இந்நிலையில் தான் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இழந்த செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் திமுக தயாராகி வருகிறது. திமுகவில் தற்போது அமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. திமுகவில் அமைப்பு ரீதியாக இருக்கும் மாவட்டங்களின் எண்ணிக்கை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
திமுகவில் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 77 ஆக இருந்த நிலையில் தற்போது 110 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களில் திமுகவில் மொத்தம் 11 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே இருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக திமுகவில் அமைப்பு ரீதியாக 7 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மொத்த மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரிக்கும். இதன்மூலம் 2 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற வகையில் நியமனங்கள் இருக்கும். அதோடு கூடுதல் நிர்வாகிகளுக்கு பொறுப்பு வழங்கி கட்சி பணியை சிறப்பாக மேற்கொள்ள முடியும் என்பது திமுகவின் திட்டமாகும்.
இதுபற்றி திமுகவின் நிர்வாகி ஒருவர் கூறுகையில்,''சமீபத்தில் சட்டசபை தேர்தல் முடிவுகள் மற்றும் வரக்கூடிய உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கட்சியை பலப்படுத்தும் பணியில் திமுக ஈடுபட்டு வருகிறது. இந்த 4 மாவட்டங்களில் திமுகவின் அமைப்பு ரீதியாக மொத்தம் 18 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன'' என்றார்.


Click it and Unblock the Notifications
