அண்ணாமலை சார்.. சாராய கம்பெனிகளிடமிருந்து பாஜக ரூ.17 கோடி நன்கொடை பெற்றது தெரியுமா? விளாசிய திமுக
சென்னை: தீபாவளியன்று நடந்த மது விற்பனை குறித்து கடந்த இரண்டு நாட்களாக பாஜக தமிழக அரசை கடுமையாக விமர்சித்திருந்தது.
இந்நிலையில் சாராய நிறுவனங்களிடமிருந்து பாஜக சுமார் ரூ.17 கோடி நன்கொடையாக பெற்றிருப்பதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி பதிவிட்டுள்ள ட்வீட் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

மது விற்பனை
பொதுவாக தீபாவளி பண்டிகையில் மது விற்பனை அதிகரிக்கும். இந்நிலையில் இந்த ஆண்டு மது விற்பனைக்கு இலக்கு வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. சில செய்தி ஊடகங்களும் இதனை பதிவிட்டிருந்தன. ஆனால் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்திருந்தார். அதேபோல தீபாவளியன்று மது எத்தனை கோடிக்கு விற்பனையானது என்றும் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அண்ணாமலை
இந்த செய்தியும் உண்மையில்லை என்று மறுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி, உண்மைக்கு புறம்பான செய்தியை பரப்பியதாக சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனம் மற்றும் செய்தியாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு டிவிட்டரில் பதிலளித்திருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "கோவையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலை பற்றி பேச நேரமில்லாத சாராய அமைச்சர், டாஸ்மாக் மூலம் வந்த வருமானத்தை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுப்பாராம்.

பதில்
இந்த விற்பனையின் மூலமாக தனக்குக் கிடைக்கும் கமிஷன் வெளியில் தெரிந்துவிடும் என்று சாராய அமைச்சருக்கு அச்சமா? சாராயம் விற்றுப் பிழைப்பை நடத்தும் உங்களுக்கே இவ்வளவு நெஞ்சுரமிருந்தால், மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டு உண்மையான செய்திகளை மக்களுக்குக் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு எவ்வளவு நெஞ்சுரம் இருக்கும்?" என்று கேள்வியெழுப்பி இருந்தார். இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பிலும் பதிலளிக்கப்பட்டது.

அவதூறு
அதில், "தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்திவிட முடியாதா, அதனால் மக்கள் அடித்துக் கொள்ளமாட்டார்களா, அதன் மூலம் தமக்கு அரசியல் ஆதாயம் கிடைத்துவிடாதா என ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரிகளின் எண்ணம், சமத்துவம் மிளிரும் தமிழ் மண்ணில் ஒரு போதும் நிறைவேறாது. அரசு நிறுவனங்கள் மீது அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கைகள் தொடரும். 'நீங்க 2000 வாங்கிக்குங்க, 3000 வாங்கிக்குங்க' என்று பத்திரிக்கையாளர்களை தொடர்ந்து கேவலப்படுத்தும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் ரத்தவெறி கொண்ட சாத்தான்கள் ஓதும் வேதம் தமிழகத்தில் பலிக்கவே பலிக்காது." என்று கூறியிருந்தார்.

நன்கொடை
இப்படியாக டிவிட்டரில் கருத்து மோதல்கள் நடைபெற்றன. இந்நிலையில் 'சாராயம் விற்று பிழப்பை நடத்தும் உங்களுக்கு' என அண்ணாமலை கூறியிருந்ததற்கு பதிலடி தரும் விதமாக திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி பதிவிட்டுள்ள ட்வீட் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த ட்வீட்டில், "கடந்த 2020-2021ம் ஆண்டில் சாராய நிறுவனங்களிடமிருந்து பாஜக சுமார் ரூ.17 கோடி நன்கொடையாக பெற்றிருப்பதாக" ராஜீவ் காந்தி கூறியுள்ளார். அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications