எடப்பாடி செய்த தவறு.. தமிழகத்தில் ஆட்சியை பிடித்த திமுக.. ‛பிளாஷ்பேக்’ கூறிய நடிகை சிஆர் சரஸ்வதி
சென்னை: டெண்டர் அல்ல தொண்டரே முக்கியம். தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமியால் தான் திமுக ஆட்சிக்கு வந்தது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான சிஆர் சரஸ்வதி கூறினார்.
தமிழகத்தில் சொத்துவரி, மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமை தாங்கினார்.

சிஆர் சரஸ்வதி பேச்சு
இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகையும், அமமுகவின் செய்தி தொடர்பாளருமான சிஆர் சரஸ்வதி எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: வெயிலோ, மழையோ, கஷ்டமோ, நஷ்டமோ, வெற்றியோ, தோல்வியோ எதை பற்றியும் கவலைப்படாமல் நேர்மையாக இருக்க வேண்டும். தியாக உள்ளத்துடன் இருக்க வேண்டும். துரோகத்துக்கு இடம் கொடுக்கக்கூடாது என்பதை கொள்கையாக வைத்து கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என போராடிய கூட்டம் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கூட்டம்.

டெண்டர் அல்ல தொண்டர்...
டெண்டர் பக்கம் போகாத அமமுக உண்மையான தொண்டருடன் இருக்கிறது. காசு கிடைக்கிறது என்பதற்காக அங்கேயும், இங்கேயும் போகாத இயக்கம் தான் அமமுக. காசு முக்கியம் இல்லை. பதவி முக்கியம் இல்லை என்பதோடு அதிமுக எனக்கு பின்னாலும் 100 ஆண்டு இருக்க வேண்டும் என ஜெயலலிதா கூறிவிட்டு சென்றதை காப்பாற்ற நாம் பாடுபட்டு வருகிறோம்.

எடப்பாடி தான் காரணம்
அதிமுகவின் முதல் அமைச்சராக எடப்பாடி பழனிச்சாமியை சசிகலா, டிடிவி தினகரன் அறிவித்தனர். அப்போது எடப்பாடி யார்? எடப்பாடி யார்? என பொதுமக்கள் கேள்வி கேட்டனர். இப்போது எடப்பாடியார் என போஸ்டர் ஒட்டுகின்றனர். 2021ல் அனைவருடன் சேர்ந்து தமிழகத்தில் சட்டசபை தேர்தலை சந்தித்து இருந்தால் திமுகவின் ஆட்சி வந்திருக்காது. எடப்பாடி பழனிச்சாமி இதனை செய்யவில்லை. இதனால் தான் திமுக ஆட்சிக்கு வந்தது. எனவே இன்று நடக்கும் தமிழகத்தின் அவலங்களுக்கு திமுகவும், எடப்பாடி பழனிச்சாமியும் தான் காரணம்.

2 பேரும் தான் பொறுப்பு
இதனால் தற்போதைய தமிழகத்தின் நிலைக்கு இவர்கள் 2 பேரும் பாதி பாதி என பொறுப்பேற்று கொள்ள வேண்டும். அதிமுக மிகப்பெரிய இயக்கம். உலக தலைவர்கள் பார்த்து வியந்த இயக்கம் அதிமுக. அன்னை தெரசா, ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் வந்து பார்த்த இயக்கம். ஆனால் இன்று எடப்பாடி பழனிச்சாமியால் உள்ளாட்சியில் தோல்வியடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications