அவுக லேப்டாப்.. இவுக டேப்.. ஸ்டூடண்ட்ஸ் 'ஹேப்பி'.. 'அதை'யும் கொடுத்தா நல்லாருக்குமே!
சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச டேப் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக கூட்டணியில் ம.தி.மு.க, வி.சி.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.ம.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, கொ.ம.தே.க உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க 173 தொகுதிகளில் களம் காண்கிறது. கூட்டணிக் கட்சிகள் சில உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால், மொத்தம் 188 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. இதனிடையே நேற்று 173 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் பட்டியலை மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.

ஆல்ரெடி இருக்கும் திட்டம்
இந்நிலையில், இன்று திமுக வெளியிட்ட தேர்தல் அறிவிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச டேப் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டில் மட்டும் தமிழக பள்ளி மாணவர்கள் 5.32 லட்சம் பேருக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட உள்ளது.

மாற்றுத்திறனாளி மாணவர்கள்
2020-2021 கல்வியாண்டில் 5.16 லட்சம் பதினோராம் வகுப்பு மாணவர்கள் மற்றும் 11,553 முதலாம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவர்களும், 463 மாற்றுத்திறனாளி ப்ளஸ் 1 மாணவர்களும், மேலும் கடந்த ஆண்டு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்த 1293 மாற்றுத்திறனாளி மாணவர்கள் என மொத்தம் 5.32 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரப்பிரசாதம்
பள்ளி மாணவர்களின் தொழில் நுட்ப வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் தான் ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. இதற்காக 500 கோடி ரூபாய் நிதி தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. கிராமப்புற மாணவர்களுக்கு இந்த இலவச லேப்டாப் என்பது உண்மையில் வரப்பிரசாதமாக உள்ளது. (ஆனால் அதற்கு இன்டர்நெட் பேக் போட முடியாமல் அவர்கள் அல்லாடுவது வேறு விஷயம்).

பெற்றோர்கள் நிம்மதி
இந்த சூழலில், திமுக மாணவர்களின் கனத்தை சற்று குறைக்கும் விதமாக, லேப்டாப்பில் இருந்து டேப்-க்கு மாறியுள்ளது. அட்வான்ஸ் திங்கிங் தான் வேறென்ன. டேப் என்றால் ஒற்றைக் கையில் அவர்கள் ஹாயாக எடுத்துச் செல்ல முடியும். திமுகவின் இந்த தேர்தல் அறிக்கை யாருக்கு நன்மை பயக்குமோ இல்லையோ, நிச்சயம் அரசு பள்ளி மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் நன்மை பயக்கும்.
அப்படியே நிறுவனங்களிடம் பேசி Net Pack-ம் வழங்கிவிட்டால் கோடி புண்ணியம் வந்து சேரும்.