“தொடை நடுங்கி தவெக.. பாசிசத்துக்கு அப்படி ஒரு ராஜவிசுவாசம்”.. காங்கிரஸ், தவெகவை விளாசிய ஆ.ராசா!
சென்னை: பாசிசத்திற்கு 'வாலாட்டும்' அப்படி ஒரு ராஜவிசுவாசம் தமிழக வெற்றி கழகத்துக்கு உள்ளது, காங்கிரஸுக்கு சுயமரியாதை சூனியமாகிவிட்டது என்று திமுக துணை பொதுச் செயலாளர் ஆ. ராசா எம்.பி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) கண்டித்தும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் தலைநகர் டெல்லியில் இந்தியா கூட்டணி சார்பில் நேற்று பிரமாண்ட பேரணி நடைபெற்றது. ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பில் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் பேரணி நடைபெற்றது.

இந்தியா கூட்டணி பேரணியில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், பரூக் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி, சஞ்சய் ராவத், சுப்ரியா சுலே, முதலமைச்சர்கள் வி.டி. சதீசன், ரேவந்த் ரெட்டி, டி.கே. சிவகுமார் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
டெல்லியில் இந்தியா கூட்டணி நடத்திய இந்தப் பேரணியில் தவெக பங்கேற்கவில்லை. இதனைச் சுட்டிக்காட்டி முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை திமுக துணை பொதுச்செயலாளரும் எம்.பியுமான ஆ.ராசா கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து இன்று ஆ.ராசா தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வாக்குத் திருட்டு'க்கு எதிராகத் தலைநகரில் களமாடும் இந்தியா கூட்டணியில் 'தொடை நடுங்கி' வெற்றிக் கழகம் தடம் பதிக்கவில்லை!
பாசிசத்திற்கு 'வாலாட்டும்' அப்படி ஒரு ராஜவிசுவாசம்!!
இருந்துவிட்டுப் போகட்டும்.
காலந்தோறும் மதச்சார்பின்மைக்கு 'காப்பிரைட்' கோரும் காங்கிரசுக்குமா சூனியமானது சுயமரியாதை?
பாவம் -
காந்தியும் நேருவும்தான் கலங்கி நிற்கிறார்கள்!!" என்று பதிவிட்டுள்ளார்.
இந்தியா கூட்டணியில் தவெக இடம்பெற்றுள்ள நிலையில், கூட்டணி சார்பில் பாஜகவை கண்டித்து நடைபெற்ற பேரணியில் தவெக பங்கேற்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. வேறு முக்கிய நிகழ்ச்சி எதுவும் இல்லாத நிலையிலும் விஜய் டெல்லி செல்லவில்லை. பாஜகவுக்கு எதிராக குரல் கொடுக்க விஜய் விரும்பவில்லை என்ற விமர்சனங்கள் கடுமையாக எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications
