சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காமராஜர் தந்த 'K - Plan'... அரசியலில் தொலைநோக்கான தூய அத்தியாயம்... மு.க.ஸ்டாலின் புகழாரம்

Google Oneindia Tamil News

சென்னை: காமராஜர் தந்த 'K - Plan' துணைக்கண்ட அரசியலில் தொலைநோக்கான தூய அத்தியாயம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

நாளை காமராஜர் பிறந்தநாளை ஒட்டி அவரது புகழ்பாடும் வகையில் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது;

அடுத்த மாதம் வெளியாகிறது கொரோனா தடுப்பூசி.. தேதியை அறிவித்த ரஷ்ய ஆய்வாளர்கள்.. WHO சம்மதிக்குமா?அடுத்த மாதம் வெளியாகிறது கொரோனா தடுப்பூசி.. தேதியை அறிவித்த ரஷ்ய ஆய்வாளர்கள்.. WHO சம்மதிக்குமா?

காமராஜர் பிறந்தநாள்

காமராஜர் பிறந்தநாள்

ஜூலை 15 - உலக நாட்காட்டிகள் அனைத்திலுமே இந்தத் தேதி இருக்கும் என்றாலும், தமிழகத்திற்கு இந்த நாளுக்கென தனியானதொரு சிறப்பு உண்டு. ஆம்.. கல்வி வளர்ச்சி நாளாகத் தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்திலும் கொண்டாடப்படும் இந்த நன்னாள்தான் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளாகும். தமிழக அரசியல் வரலாற்றில், தனி முத்திரை பதித்த முதல்வராக, 9 ஆண்டுக்காலம் ஆட்சி செய்து, இந்திய அரசியலுக்கும் அதுவரை இல்லாத புதிய வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் பெருந்தலைவர் காமராஜர்.

தூய அத்தியாயம்

தூய அத்தியாயம்

அவர் தந்த 'K - Plan' துணைக்கண்ட அரசியலில் தொலைநோக்கான தூய அத்தியாயம். திராவிட இயக்கத்துக்கும், காங்கிரஸ் பேரியக்கத்துக்கும் சமூக - அரசியல் களத்தில் மாறுபட்ட நிலைப்பாடுகள் இருந்தபோதும், மேடைகளில் கடுமையான விமர்சனங்கள் மாறி மாறி வைக்கப்பட்டபோதும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களை, தந்தை பெரியார் அவர்கள் ‘பச்சைத்தமிழர்' என்று அழைத்தார்; பேரறிஞர் அண்ணா அவர்களோ, "குணாளா.. குலக்கொழுந்தே.." என்றே கொண்டாடி எழுதினார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தனது சட்டமன்ற அனுபவங்கள் குறித்த பேட்டியில், தமிழகத்தின் ‘சிறப்பான முதல்வர்' என்று காமராஜரைக் குறிப்பிட்டிருக்கிறார்.

புகழாரம்

புகழாரம்

சமூகநீதியின் தாய்மடியாக விளங்கும் தமிழகத்தில், நீதிக்கட்சி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ‘கம்யூனல் ஜி.ஓ.' எனப்படும் வகுப்புவாரி இடஒதுக்கீட்டு முறைக்கு, ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்று குடியரசு நாடான இந்தியாவில் ஆபத்து ஏற்பட்டபோது, இடஒதுக்கீட்டினைக் காப்பதற்காக தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் அறப்போராட்டத்தை நடத்தினர். எழுச்சிமிகுந்த இந்தப் போராட்டத்தின் தன்மையையும் தாக்கத்தையும் உணர்ந்திருந்தவர் பெருந்தலைவர் காமராஜர்.

ஜிம்கானா கிளப்

ஜிம்கானா கிளப்

சென்னை மாநகராட்சிக்கு 1959-ல் நடைபெற்ற தேர்தலில் பேரறிஞர் அண்ணா அவர்களின் ஆணையை ஏற்று, தலைவர் கலைஞர் அவர்கள் வகுத்த வியூகத்தால், தி.மு.கழகம் முதன்முறையாக வெற்றி பெற்று மாநகராட்சி நிர்வாகத்தை மேற்கொண்டது. அப்போது, பேரறிஞர் அண்ணா அவர்களின் அன்புக்கட்டளைப்படி, மாநகராட்சியின் சார்பில் சென்னை ஜிம்கானா கிளப் அருகே பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு திருவுருவச்சிலை அமைக்கப்பட்டது.

எதிர் துருவங்கள்

எதிர் துருவங்கள்

அரசியல் களத்தில் எதிர்துருவங்களாக இருந்தபோதும், ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு' என்கிற அரசியல் பண்பாட்டினைப் போற்றுவதில் முன்னோடியாக இருந்ததற்கு இப்படி எத்தனையோ சான்றுகள் உண்டு. பேரறிஞர் அண்ணா அவர்கள் நோய்வாய்ப்பட்டபோது, அவரது உயிரைக் காக்கும் எத்தகைய சிகிச்சையையும் மேற்கொள்வதற்கேற்ப வெளிநாட்டுப் பயணத்திற்கான மத்திய அரசின் ஒத்துழைப்பைப் பெறுவதில் பெருந்தலைவர் அவர்கள் தனிப்பட்ட ஆர்வம் செலுத்தினார்.

முன் கூட்டியே வந்து

முன் கூட்டியே வந்து

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை ஈன்ற அன்புத்தாயாரும் என் பாசத்திற்குரிய பாட்டியாருமான அன்னை அஞ்சுகம் அம்மையார் அவர்கள் மறைந்தபோது, அரசியல் பணி காரணமாக தலைவர் கலைஞர் அவர்கள் வருவதற்கு நேரமானது. அவருக்கு முன்னதாக தலைவரின் கோபாலபுரம் வீட்டிற்கு வந்து, அஞ்சுகம் அம்மையாருக்கு அஞ்சலி செலுத்தியதுடன், இறுதி ஊர்வலத்திற்கான பணிகளையும் திட்டமிட்டுக் கொண்டிருந்தார் பெருந்தலைவர்.

கொட்டும் மழை

கொட்டும் மழை

தேர்தல் கள அரசியலைக் கடந்து, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பெருந்தலைவருக்கும் இருந்த நட்புறவை விளக்க இப்படி நெஞ்சை நெகிழ வைக்கும் எத்தனையோ நிகழ்வுகள் உண்டு! பெருந்தலைவருக்காகத் தேர்வு செய்யப்பட்ட இடம் முட்கள் நிறைந்த பகுதியாக இருந்ததால், அதனை விரைவாக சீர்படுத்துவதற்காக கொட்டும் மழையையும் இருளையும் பொருட்படுத்தாமல், தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு, தனது ‘கார் ஹெட்லைட்டை' ஒளிரச் செய்து, சீர்படுத்தும் பணிகளை நேரில் நின்று மேற்கொள்ளச் செய்தவர் முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள்.

நினைவாடுகிறது

நினைவாடுகிறது

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் மறைவதற்கு 40 நாட்களுக்குமுன் நடைபெற்ற என்னுடைய திருமண விழாவில்; உடல்நலம் குன்றியிருந்த நிலையிலும், அவர் வருவதற்கென்றே அமைக்கப்பட்ட தனிவழியில் மணமேடைக்கு வந்து, அன்றைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரி, மத்திய அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம் ஆகியோருடன் இணைந்து, வாழ்த்தும் ஆசியும் வழங்கிய அந்த நிகழ்ச்சி இன்றும் எனது கண்களின் நினைவுகளில் நின்று நிலைத்திருக்கிறது.

காமராஜர் பெயர்

காமராஜர் பெயர்

13 ஆண்டுகால இடைவெளிக்குப்பிறகு, 1989-ல் தமிழகத்தின் முதல்வராக மூன்றாம் முறையாகத் தலைவர் கலைஞர் பொறுப்பேற்று, ஆட்சி செய்தபோது, இந்தியாவின் பிரதமரான சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் சென்னை விமான நிலையத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தபோது, அந்த மேடையில் உரையாற்றிய முதல்வர் கலைஞர் அவர்கள், பன்னாட்டு முனையத்திற்கு அண்ணா பெயரையும், உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் பெயரையும் வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததும், விழா மேடையிலேயே அதனை ஏற்று, பிரதமர் வி.பி.சிங் அவர்கள் அண்ணா - காமராஜர் ஆகியோரின் புகழ்ப் பெயர்களைச் சூட்டியதையும் மறக்க முடியுமா?

திமுக மரியாதை

திமுக மரியாதை

கல்விக் கண் திறந்த கர்மவீரர் - தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றிய தலைசிறந்த முதல்வர் - அரசியல் பொதுவாழ்வில் அரிய மாமனிதர் - திராவிட இயக்கத் தலைவர்களின் மாறா அன்புக்குப் பாத்திரமானவர் - தலைவர் கலைஞர் அவர்களின் மரியாதைக்குரிய பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளாம் ஜூலை 15 அன்று, அண்ணா அறிவாலயத்தில் பெருந்தலைவரின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்படவிருக்கிறது. ஜூலை 15-ம் நாளினை, கல்வி வளர்ச்சி நாளாகக் கடைப்பிடித்து, பெருந்தலைவர் பெருமைகளை இன்றைய தலைமுறை அறியப் பேசுவோம்; ஏற்றிப் போற்றுவோம்!

English summary
dmk president mk stalin praises congress former cm kamarajar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X