தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிக்கும்! எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு
சென்னை: நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடரில் கொண்டு வரப்படும் தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிப்பது என எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதை நீலகிரி தொகுதி எம்பி ஆ.ராசா அறிவித்தார். Fair Delimitation என்பதால் திமுக ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை-மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் , 28ம் தேதி காலை 10 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், 'முரசொலி மாறன் வளாகத்தில்' உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் திமுகவின் 22 மக்களவை உறுப்பினர்களும் 8 மாநிலங்களவை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். வரும் டிசம்பர் 1 ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்கிறது.
முன்னதாக நேற்றைய தினம் சில முக்கிய திருத்தங்களுடன் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. அதில் ஸ்டாலின் சொன்ன 2 திருத்தங்களும் இடம்பெற்றிருந்தன. இது குறித்து ஸ்டாலின், இன்றைய தினம் எம்பிக்களுடன் ஆலோசனை நடத்தினார்.
மத்திய அரசு கொண்டு வருவது Fair Delimitation என்பதால் திமுக அந்த மசோதாவுக்கு ஆதரவு தருவது என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. தற்போது தமிழகத்தின் பிரதிநிதித்துவம் 7.18 இருக்கும் நிலையில் புதிய மசோதாவால் 7.21 என்ற அளவில் பிரதிநிதித்துவம் உயர்கிறது. இதனால் இந்த மசோதாவுக்கு ஆதரவு வழங்க திமுக முடிவு செய்துள்ளது. மேலும் மாநிலங்கள் முழுவதும் ஒரே விகிதத்தில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதமாக உயர்த்தும் மசோதா என்பதாலும் திமுக ஆதரவு தெரிவித்துள்ளது என திமுக எம்பிக்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை நீலகிரி எம்பி ஆ.ராசா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் வரும் 30ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது என மத்திய அரசு அறிவித்துள்ளது. மக்களவையில் நவம்பர் 30ஆம் தேதியும் மாநிலங்களவையில் டிசம்பர் 2 ஆம் தேதியும் இந்த கூட்டத் தொடர் தொடங்குகிறது என மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்திருந்தார்.
இந்த கூட்டத் தொடரில் டிசம்பர் 1 ஆம் தேதி தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த மார்ச் மாதத்தில் இந்த மசோதா கொண்டு வரப்பட்ட போது அது தோற்கடிக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு 298 பேர் ஆதரவாகவும், 230 பேர் எதிராகவும் வாக்களித்தனர். ஆனால் மசோதா நிறைவேற 352 பேரின் ஆதரவு தேவைப்படுகிறது.
அந்த மசோதாவை தோற்கடித்தததில் திமுகவுக்கு முக்கிய பங்கு இருந்தது. தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலை எரித்து அப்போது முதல்வராக இருந்த ஸ்டாலின், எதிர்ப்பை காட்டியிருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் தாக்கல் செய்த மசோதாவில் தற்போது 3 திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மாநிலங்கள் முழுவதும் மக்களவை இடங்களை 50 சதவீதம் வரை அதிகரிக்கப்படுகிறது.
மாநிலங்களுக்கு இடையேயான விகிதாச்சார முடக்கத்தை 25 ஆண்டுகளுக்கு நீட்டித்து மக்களவையில் ஒவ்வொரு மாநிலத்தின் விகிதாச்சார பங்கை தீர்மானிக்க 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை தொடர்ந்து பயன்படுத்தவுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளும் தொகுதி எல்லைகளை மறுவரையறை செய்ய 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை பின்பற்றப்படவுள்ளது. தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுகவின் 22 மக்களவை உறுப்பினர்கள், 8 மாநிலங்களவை உறுப்பினர்களின் வாக்குகள் முக்கியத்துவம் வாய்ந்தது.


Click it and Unblock the Notifications
