நீட் மரணங்கள்: இனி களத்தில் இறங்குவதுதான்-அதிரடி முடிவில் ஆளும் திமுக- ஆக.20-ல் உண்ணாவிரத போராட்டம்!
சென்னை: மாணவர்கள், பெற்றோர்கள் தற்கொலை செய்தும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை திணிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வரும் 20-ந் தேதி தமிழ்நாட்டில் ஆளும் திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை தமிழ்நாடு தொடக்கம் முதலே மிக கடுமையாக எதிர்த்து வருகிறது. 2017-ம் ஆண்டு அரியலூர் அனிதா தொடங்கி சென்னை ஜெகதீஸ்வரன் வரை எண்ணற்ற மாணவர்கள் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஜெகதீஸ்வரனின் தந்தையும் மகனுக்கு மருத்துவ படிப்பு கிடைக்காமல் போன விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நீட் தேர்வில் மதிப்பெண்கள் எடுத்தும் அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்காமலும் தனியார் கல்லூரியில் சேர்ந்து படிக்க போதுமான பணம் இல்லாத விரக்தியிலும் சென்னை ஜெகதீஸ்வரவனும் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாட்டை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இத்தனை தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்தும் மத்திய அரசு நீட் தேர்வை தொடர்ந்து நடத்தி வருவது தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் நீட் தேர்வை தொடர்ந்து திணிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வரும் 20-ந் தேதி திமுக சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுகவின் இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், திமுக மருத்துவ அணி
செயலாளர் டாக்டர் எழிலன் நாகநாதன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து - அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக நீட் தேர்வு உருவெடுத்திருக்கிறது.

உண்ணாவிரதப் போராட்டம்: மாணவர்களை மட்டுமன்றி, பெற்றோரையும் மரணக்குழியில் தள்ளும் நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், பொறுப்பற்ற ஆளுநரையும் கண்டித்து, கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தி.மு.கழக இளைஞர் அணி - மாணவர் அணி - மருத்துவ அணி சார்பில், தமிழ்நாடு முழுவதும், வரும் ஆகஸ்ட் 20 அன்று அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரத அறப்போரை நடத்தவுள்ளோம்.
மத்திய அரசு, ஆளுநர் ரவி காரணம்: அரியலூர் அனிதாவில் ஆரம்பித்த நீட் மரணம், குரோம்பேட்டை ஜெகதீஸ்வரன், அவரது தந்தை திரு.செல்வசேகர் வரை தொடர்கிறது. செல்வசேகர் அவர்களின் திருவுடலுக்கு மரியாதை செய்யச் சென்றபோது, யாரை தேற்றுவது - யாருக்கு ஆறுதல் சொல்வதென்று கேட்கும் அளவுக்கு அங்கு எல்லோரும் சோகத்தில் உறைந்திருந்தார்கள். நமக்கே அங்கு ஆறுதல் தேவை என்ற நிலைதான் இருந்தது. இந்த மரணங்கள் அனைத்திற்கும், ஒன்றிய பா.ஜ.க. அரசும் - அவர்களுக்கு அடிமைச்சேவகம் செய்யும் அதிமுகவினரும் - நீட் பாதுகாவலர் ஆளுநர் ரவியுமே காரணம்.
ஆளுநர் ரவியின் பிடிவாதம்: ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் எண்ணத்தின் வெளிப்பாடாக நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. ஆனால், அந்த நடவடிக்கைகளுக்கு எல்லாம் ஆளுநர் ரவி முட்டுக்கட்டை போட்டு வருகிறார். நம் மாணவச்செல்வங்களின் மரணம், ஆளுநரையோ, அவரை இங்கு அனுப்பியுள்ள ஆரிய மாடல் ஆட்களையோ துளியும் பாதிக்கவில்லை. "நீட் மசோதாவில் கையெழுத்துப் போட மாட்டேன்"என்று கூறிய ஆளுநரிடம், சேலத்தைச் சேர்ந்த திரு.அம்மாசியப்பன் ராமசாமி நேருக்கு நேர் கேள்வி எழுப்பியபோது, அதற்குப் பதில் அளிக்க முடியாத ஆளுநர் அவரிடம் இருந்த மைக்கை பிடுங்கி உட்காரச் சொல்கிறார். இத்தனைக்கும் ஆளுநரிடம் கேள்வி எழுப்பிய திரு.அம்மாசியப்பன் ராமசாமி அவர்களின் மகள் நீட் தேர்வில் வெற்றிப் பெற்றுள்ளார். நீட் தேர்வில் வெற்றிபெற்றவர்கள், பயிற்சி மையம் சென்று லட்சங்கள் செலவு செய்து தேர்வில் வென்றவர்கள்கூட நீட்டை எதிர்க்கிறார்கள்.
மறைத்தது அதிமுக அரசு: நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு அனுப்பி வைத்த பிறகு, ஆளுநர் எப்படி அதில் கையெழுத்திட முடியும்? கருணாநிதி ஆட்சியின் போது-அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது வராத நீட், எடப்பாடி பழனிச்சாமியின் அடிமை ஆட்சியின் போது தமிழ்நாட்டுக்குள் வந்தது. நீட் விலக்கிற்காக 2017-ஆம் ஆண்டு அ.தி.மு.க. அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாவை, குடியரசுத்தலைவர் நிராகரித்ததை, 21 மாதங்கள் வரை, தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் தெரிவிக்காமல் அ.தி.மு.க. அடிமைகள் மறைத்தனர். ஒன்றிய உள்துறை அமைச்சகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியபோதுதான், அது தமிழ்நாட்டுக்கே தெரியவந்தது. இப்படிப்பட்ட துரோக வரலாற்றைக் கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கோ, பிற அதிமுக அடிமைகளுக்கோ நம்மை விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை.
நீட் எதிர்ப்பில் திமுக: நீட் தேர்வுக்கு எதிராக, தமிழ்நாட்டில் தொடர்ச்சியாகக் குரல் எழுப்புகிற இயக்கமாக நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் இருந்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், தி.மு.கழக இளைஞர் அணி - மாணவர் அணி சார்பில் நீட் தேர்வுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. ஒரு மாநில அரசால் நீட்டை ரத்து செய்ய என்னென்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ, அவை அனைத்தையும், முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்கள். இப்படித் தமிழ்நாடு அரசு எத்தனை முறை கோரிக்கை வைத்தாலும் ஒன்றிய பா.ஜ.க. அரசு அதனைப் பொருட்படுத்துவதே கிடையாது.
ஆகஸ்ட் 20-ல் உண்ணாவிரதம்: இந்த நேரத்தில் மாணவச்செல்வங்களுக்கு நாங்கள் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான், நீட் தேர்வு என்பது நிரந்தரம் கிடையாது. முதல்வர் ஸ்டாலின் நிச்சயம் நீட் தேர்வை ஒழிப்பார்கள். அதற்கான காலம் வெகுதொலைவில் இல்லை. எனவே, மாணவச்செல்வங்கள் தன்னம்பிக்கையுடனும்- மன உறுதியுடனும் பொறுமை காத்திருக்க வேண்டுகிறோம். எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும், நீட் தேர்வு நடக்கும் என்ற எதேச்சதிகாரப் போக்கில் உள்ள ஒன்றிய அரசையும் - இல்லாத அதிகாரம் இருப்பது போல் மாளிகையில் கொக்கரிக்கும் ஆளுநரையும் கண்டித்து, இந்த மாபெரும் உண்ணாவிரதம் தமிழ்நாடெங்கும் நடைபெறவுள்ளது. கழக இளைஞர் அணி - மாணவர் அணி - மருத்துவ அணி செயலாளர்கள் சென்னையில் நடக்கின்ற உண்ணாவிரத அறப்போரில் பங்கேற்கவுள்ளனர். அதேபோல, தமிழ்நாட்டில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடைபெறவுள்ள இந்த உண்ணாவிரத அறப்போரில் அனைத்துத் தரப்பினரும் திரளாகப் பங்கேற்க அழைக்கின்றோம். நீட் தேர்வை ஒழித்து, தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமையும் - விலைமதிப்பில்லா உயிரையும் காக்க ஓரணியில் திரள்வோம்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications