வந்தே பாரத்தை விடுங்க! இந்தியாவின் காஸ்ட்லி ரயில் பற்றி தெரியுமா? ஆனா டிக்கெட் ரேட்டை கேட்டால் தலை சுத்துது
சென்னை: இந்தியாவிலேயே மிகவும் விலையுயர்ந்த ரயில் என்றால் பலரும் வந்தே பாரத் என்றே சொல்வார்கள். ஆனால், உண்மையில் வந்தே பாரத்தை கூட தூக்கிச் சாப்பிடும் வகையில் ஒரு ரயில் இருக்கிறது. அதுதான் மகாராஜா எக்ஸ்பிரஸ். இதில் பயணிக்கும் ஒவ்வொரு நபரையும் ராஜா போல உணர வைக்கும் இந்த ரயிலில் நீங்கள் கனவிலும் யோசிக்காத வசதிகள் உள்ளன. ஆனால், ரேட்டை கேட்டால் தான் தலை சுற்றுகிறது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
உலகின் மிகப் பெரிய ரயில்வே நெட்வொர்க்குகளில் ஒன்றாக இந்தியன் ரயில்வே இருக்கிறது. பெரு நகரங்கள், சிறு நகரங்கள் மட்டுமின்றி நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கும் ரயில் சேவை வழங்கப்படுகிறது. அனைத்துத் தரப்பு மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு வகையான ரயில் சேவை வழங்கப்படுகிறது.

காஸ்ட்லி ரயில்
அதில் வந்தே பாரத், ராஜ்தானி எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ் போன்ற பிரீமியம் மற்றும் சொகுசு ரயில்கள் அதிவேகம் மட்டுமின்றி சிறந்த வசதியையும் வழங்குகின்றன. இந்தச் சிறப்பு ரயில்களில் ஏசி பெட்டிகள், ஆடம்பர உணவு மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் கிடைக்கின்றன. அதேநேரம் இந்த ரயில்களின் டிக்கெட் சாதாரண ரயில்களை விட அதிகமாகவே இருக்கும்.
இந்தியாவின் மிகவும் காஸ்ட்லியான ரயில் எது எனக் கேட்டால் பலரும் வந்தே பாரத் அல்லது சதாப்தி என்றே சொல்வார்கள். ஆனால், உண்மையில் இந்த இரண்டுமே இல்லை.. காஸ்ட்லி ரயில் டிக்கெட் எவ்வளவு என்பதைக் கேட்டால் வந்தே பாரத் ரயில் டிக்கெட் கூட நமக்கு குறைவாகவே தெரியும். அப்படி என்ன ரயில்.. அதன் சிறப்பு என்ன.. டிக்கெட் விலை என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
மஹாராஜா எக்ஸ்பிரஸ்
இந்தியாவில் மிகவும் காஸ்ட்லி ரயில் என்றால் அது மஹாராஜா எக்ஸ்பிரஸ் தான். இந்தியா மட்டுமின்றி ஆசியாவிலேயே மிக விலையுயர்ந்த ரயில் டிக்கெட்டை கொண்ட ரயில் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. சமீபத்தில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூட இந்த ரயிலைப் பயன்படுத்தினார். உலகின் மிகவும் ஆடம்பரமான ரயில்களில் ஒன்றாகக் கருதப்படும் மஹாராஜா எக்ஸ்பிரஸில் ஒரு பிரசிடென்ஷியல் சூட், டீலக்ஸ் சூட்கள் என இரு வகை டிக்கெட்கள் உள்ளன.
உணவகங்கள், ஓய்வறைகள் என ஹோட்டலுக்கு நிகரான வசதிகளைக் கொண்டது. ஐஆர்சிடிசி மூலம் இயக்கப்படும் இது இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை எடுத்துரைக்கிறது. மற்ற ரயில்களில் மது குடிக்க அனுமதி இல்லை. ஆனால், இந்த ரயிலில் மதுவும் கொடுக்கப்படும். இதில் வழக்கமான ரயில்களைப் போலக் குறிப்பிட்ட ஊருக்குச் செல்லவெல்லாம் டிக்கெட் புக் செய்ய முடியாது. மாறாக அவர்களே ஒரு சுற்றுலா பேக்கேஜ்ஜை கொடுப்பார்கள். அதை நாம் புக் செய்ய வேண்டும்.
டிக்கெட் ரேட் எவ்வளவு
மஹாராஜா எக்ஸ்பிரஸில் 7 நாட்கள் பயணிக்க ஒரு நபருக்கு 6.9 லட்சம் ரூபாய் முதல் 22.2 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இந்தப் பயணத்தில் அரண்மனை போன்ற சூட்கள், இரண்டு உணவகங்கள் கொண்ட ரயிலில் நீங்கள் பயணம் செய்வீர்கள். வெறுமன ரயில் பயணம் மட்டுமில்லை.. இந்த 7 நாட்கள் பல நகரங்களுக்குச் சென்று அந்த நகரங்களையும் நமக்குச் சுற்றிக் காட்டுவார்கள். அதுவும் கூட இந்த பேக்கேஜ்ஜில் இணையும். எல்லாம் ஓகே தான் ஆனால் ரயில் டிக்கெட் ரேட் தான் கொஞ்சம் ஓவர் போல தெரியுது. 22 லட்சம் ரூபாய் என்பது ஒரு ஹூண்டாய் க்ரெட்டா காரின் விலையாகும்!
மிரள வைக்கும் மஹாராஜா எக்ஸ்பிரஸ்
இந்தியாவின் மிக ஆடம்பரமான ரயிலான மஹாராஜா எக்ஸ்பிரஸ் சுமார் அரை மைல் நீளம் கொண்டது. சர்வதேச தரத்திலான வசதிகளைக் கொண்டுள்ள இந்த ரயில் நமது நாட்டின் அரச பாரம்பரியத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. வெறுமன பயணம் மட்டுமின்றி இது ஒரு அனுபவத்தைக் கொடுக்கிறது. குறிப்பாக அரச குடும்பத்தினர் எப்படிப் பயணிப்பார்களோ.. அதுபோன்ற ஒரு அனுபவத்தை வழங்குகிறது!
மஹாராஜா எக்ஸ்பிரஸின் மிகத் தனித்துவமான அம்சம் என்றால் அது "நவரத்னா" எனப்படும் பிரசிடென்ஷியல் சூட் தான். இதில் மிகப் பெரிய வரவேற்பறை, இரண்டு படுக்கையறைகள் மற்றும் ஒரு தனிக் குளியலறை ஆகியவை உள்ளன. இந்தச் சூட்டில் தங்கும் விருந்தினர்களுக்கு 24 மணிநேரமும் தனி உதவியாளர்கள் இருப்பார்கள். உங்களுக்கு என்ன தேவை என்றாலும் அவர் பூர்த்தி செய்து கொடுப்பார்.












Click it and Unblock the Notifications