எடப்பாடி vs அண்ணாமலை.. "இதுக்காகவே காத்திருந்தோம்” வெடித்த கலக குரல்கள்! கட்டம் கட்டிட்டாங்க போலயே!

Subscribe to Oneindia Tamil

சென்னை : சி.வி.சண்முகம், ஜெயக்குமார் போன்ற சீனியர்கள் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் ஆங்காங்கே, பாஜகவையும், அண்ணாமலையையும் கடுமையாக விமர்சித்துப் பேசத் தொடங்கியுள்ளனர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள். ஈபிஎஸ் தரப்பினர் தொடர்ச்சியாக அண்ணாமலையைச் சீண்டுவதன் மூலம், பாஜகவை கூட்டணியில் இருந்து விலக்க ஈபிஎஸ் அணி கங்கணம் கட்டிக் களமிறங்கி விட்டது என்றே தெரிகிறது.

அமித்ஷா சென்னை வந்திருந்தபோது, அவரைச் சந்திக்காமல் தவிர்த்த எடப்பாடி பழனிசாமி, அதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோதும் சீறினார். அதைத் தொடர்ந்து சமீபத்தில் முன்னாள் அமைச்சர் சண்முகம், பாஜக திமுகவுடன் கூட்டணி அமைக்கப்போகிறது எனக் கூறி பரபரப்பைக் கிளப்பினார்.

அதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் நாராயணன் ஆகியோர் உடனடியாக எதிர்வினை ஆற்றிய நிலையில், 'இதற்காகத்தான் காத்திருந்தோம்' எனக் களமிறங்கி விட்டார்கள் ஈபிஎஸ் அணியினர். அதிமுக ஆர்ப்பாட்ட மேடைகளில் ஆங்காங்கே அண்ணாமலைக்கு எதிராக போர்க்குரல்கள் எழுந்திருக்கின்றன. இந்தக் குரல்கள் அடங்குமா? இன்னும் ஆர்ப்பரிக்குமா என்பது போகப்போகத் தெரியும்.

 கூட்டணியில் விரிசல்

கூட்டணியில் விரிசல்

அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான சந்தேகங்களும், சலசலப்புகளும் சில நாட்களாக தொடர்ந்து எழுந்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக அதிமுகவின் பின்னால் நாம் செல்ல வேண்டிய தேவை இல்லை என்றும், காலையில் எடப்பாடி வாழ்க, மாலையில் ஓபிஎஸ் வாழ்க என்று சொல்லமுடியாது என்றும் தனித்துப் போட்டியிடும் அளவிற்கு நாம் வளர வேண்டும் என்றும் அண்ணாமலை பேசியது அதிமுக - பாஜக இடையேயான கூட்டணி உறவு குறித்த சந்தேகங்களை மேலும் வலுப்பெறச் செய்தது.

 ஷட் அப் பண்ணுங்க

ஷட் அப் பண்ணுங்க

பாஜக, திமுக அரசுக்கு எதிராக தீவிரமாக போராட்டங்களை முன்னெடுத்து, நாங்கள் தான் எதிர்க்கட்சியாகச் செயல்படுகிறோம் எனப் பேசத் தொடங்கியபோதே, அதிமுக தலைவர்கள் சீண்டப்பட்டனர். ஜெயக்குமார், பொன்னையன், கேபி முனுசாமி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் அப்போதே பாஜகவுக்கு பதிலடி கொடுத்தனர். ஆனால், ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல் ஏற்பட்டதன் காரணமாக, ஈபிஎஸ்ஸும், பாஜக தலைமையின் தயவை எதிர்பார்த்து வந்ததால், தனது அணியின் நிர்வாகிகளை, பாஜகவுக்கு எதிராகப் பேச வேண்டாம் என அமைதிப்படுத்தி வந்தார்.

 அடுத்த இன்னிங்க்ஸ்

அடுத்த இன்னிங்க்ஸ்

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் பாஜகவுக்கு எதிரான குரல்கள் அதிமுகவில் உக்கிரமாக எழத் தொடங்கி இருக்கின்றன. அமித்ஷா சென்னை வந்தபோது சந்திக்காதது பற்றிய கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி சீறியதே, இந்த இன்னிங்ஸின் தொடக்கம். அவர்கள் மத்தியில் ஆளுங்கட்சி, நாங்கள் மாநிலத்தில் எதிர்க்கட்சி, எங்களுக்குள் டீலிங் அவ்வளவுதான், அவர்கள் வரும் போதெல்லாம் சும்மா சும்மா போய்ப் பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை எனச் சீறினார் எடப்பாடி. இது டெல்லியின் காதுக்கும் சென்றுள்ளது. அதன் பிறகு, ஓ.பன்னீர்செல்வம், குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார்.

 கூட்டணியே தேவையில்லை

கூட்டணியே தேவையில்லை

குஜராத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோரைச் சந்தித்துப் பேசினார் ஓ.பன்னீர்செல்வம். அங்கு, ஓபிஎஸ்ஸை பிரதமர் மோடி தேடிப் பிடித்து முக்கியத்துவம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் ஈபிஎஸ்ஸூக்கு கடும் அப்செட்டைக் கொடுத்துள்ளது. ஓபிஎஸ்ஸை பாஜக கைக்குள்ளேயே வைத்திருப்பதன் மூலம், அதிமுகவில் அவரைச் சேர்க்க வேண்டும் என்று நெருக்கடி தரத்தான் முயற்சிக்கிறார்கள் என்பதை ஈபிஎஸ் புரிந்து கொண்டுள்ளாராம். இதனால், தனது ஆதரவாளர்களிடமே, பாஜக கூட்டணியில் தொடர்வது கேள்விக்குறிதான், ஓபிஎஸ்ஸை சேர்க்க வேண்டும் என்று அவர்கள் கூறினால் கூட்டணியே தேவையில்லை என்ற முடிவைத் தெரிவித்துள்ளாராம்.

 திரியைக் கொளுத்திய சண்முகம்

திரியைக் கொளுத்திய சண்முகம்

இந்த நிலையில் தான் சமீபத்தில் நெய்வேலியில் பேசிய அதிமுக எம்.பியும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், திமுகவுடன் பாஜக கூட்டணி வைக்கப்போகிறது. விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளை திமுக கழற்றி விடப் போகிறது. திமுகவிடம் எங்களுடன் கூட்டணி வையுங்கள் அல்லது காங்கிரஸ் கட்சியை கழற்றி விடுங்கள் என்று பாஜக கூறுகிறது, பாஜகவும் திமுகவும் ஒன்றுதான் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். கூட்டணியில் இருக்கும் பாஜக பற்றி சிவி சண்முகம் இப்படி பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

 அண்ணாமலை பதிலடி

அண்ணாமலை பதிலடி

சி.வி.சண்முகத்திற்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை, எந்தக் கட்சி யாரோடு கூட்டணி வைக்கும் என்று அந்தந்த கட்சியில் இருக்கக்கூடிய தலைவர்கள் பேசலாம். யாரோ மூன்றாம் கட்ட தலைவர்கள், நாங்கள் திமுகவுடன் கூட்டணி வைக்கிறோம் என்று சொன்னால் அதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது. திமுக அல்லது பாஜகவில் இருப்பவர்கள், அக்கட்சிகளின் கூட்டணி பற்றி பேசலாம் நான் நான்கு நாட்களாக கமலாலயத்திற்குப் போகவில்லை, சிவி சண்முகம் பாஜகவில் சேர்ந்துவிட்டாரா எனத் தெரியாது என்று தெரிவித்திருந்தார்.

 ஜெயக்குமார்

ஜெயக்குமார்

தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியைக் கூட்டணியில் இருந்து வெளியேற்றிவிட்டு பாஜகவுடன் கூட்டணி வைக்கத் துடியாய் துடிக்கும் கட்சி திமுக. அதைத்தான் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை எங்களுக்கு யாரையும் வெளியேற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. எங்கள் தலைமையை ஏற்று வரும் கட்சிகளுக்கு எங்களின் உடன்பாடு உண்டு எனத் தெரிவித்தார் ஜெயக்குமார்.

 கூட்டணியில் இருந்து விலகலாம்

கூட்டணியில் இருந்து விலகலாம்

இப்படியான வார்த்தை மோதல்களால் அதிமுக - பாஜக கூட்டணி நீடிப்பது குறித்த சந்தேகம் மேலும் தீவிரமடைந்தது. இந்நிலையில் தான் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள், பாஜகவையும், அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலையையும் சீண்டத் தொடங்கியுள்ளனர். கூட்டணியில் இருந்து பாஜக விலகிச் செல்லலாம் என்று ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த அதிமுகவின் கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன், முன்னாள் எம்.பி கோ.ஹரி உள்ளிட்ட பலர் பேசியுள்ளனர்.

 பாப்புலர் முத்தையா

பாப்புலர் முத்தையா

திமுக அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், அண்ணாமலையையும் விளாசியுள்ளனர். அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, நெல்லையில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது, "அதிமுக கூட்டணியில் இருப்பதால்தான் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நாம் வாக்குகளை இழந்தோம். பாஜக நம்மை விட்டு சென்றுவிட்டால் நமக்கு கிடைக்கும் வாக்குகள் பிரிந்து செல்லாது." எனப் பேசினார்.

 பாஜகவை தூக்கி சுமந்து

பாஜகவை தூக்கி சுமந்து

அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகினாலும் எங்களுக்கு நல்லது தான். உங்களை தூக்கி சுமந்துதான் நாங்கள் மோசமாகி போனோம் என்று தெரிவித்த பாப்புலர் முத்தையா, அதிமுக என்ற இயக்கம் இல்லாமல் எந்த தேசியக் கட்சியும் தமிழகத்தில் காலூன்ற முடியாது. அதிமுக தயவு இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைத்து விடலாம் என நினைத்து வரும் பாஜக தலைவர் அண்ணாமலையின் பகல் கனவு பலிக்காது என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

 அமைதிப்படை அமாவாசை - அண்ணாமலை

அமைதிப்படை அமாவாசை - அண்ணாமலை

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது பாஜக தலைவர் அண்ணாமலையைக் கடுமையாக விமர்சித்தார். "அண்ணாமலை திடீரென பாஜக தலைவராக ஆகிவிட்டார். அவரை பார்த்தால் அமாவாசை சத்யராஜ் தான் ஞாபகத்திற்கு வருகிறார்" என்றார். மேலும் பேசிய அவர், "பாஜக திமுகவுடன் கூட்டணி வைக்கப்போகிறது என அதிமுகவினர் சொன்னால், இல்லை எனச் சொல்லிவிட்டுப் போங்கள். அதை விட்டுவிட்டு இரண்டாம் கட்ட தலைவர் மூன்றாம் கட்ட தலைவர் என ரேங்க் போடுவதற்கு இந்த அண்ணாமலை யார்?" எனக் கேள்வி எழுப்பினார்.

 எடப்பாடி போட்ட பிச்சை

எடப்பாடி போட்ட பிச்சை

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அதிமுக சார்பில் திமுக அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக அமைப்புச் செயலாளர் திருத்தணி கோ. ஹரி, "எந்தக் காலத்திலும் பாஜகவால் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது. 4 தொகுதிகளை வென்ற பாஜக தன்னை எதிர்க்கட்சியாக நினைத்துக் கொண்டுள்ளது. வெறும் 4 எம்.எல்.ஏ. அதுவும், அதிமுக போட்ட பிச்சை, எடப்பாடி பழனிசாமி போட்ட பிச்சையாலேயே பாஜக நான்கு எம்.எல்.ஏக்களை பெற்றது. நாள்தோறும் நாளிதழ்கள், மீடியாக்களில் தன் பெயர் வரவேண்டும் என்பதற்காகவே பாஜக தலைவர் அண்ணாமலை எதை எதையோ பேசி வருகிறார்" என்று விமர்சித்துள்ளார்.

 மாஃபா பாண்டியராஜன்

மாஃபா பாண்டியராஜன்

இதேபோல, அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும், அண்ணாமலையைக் கண்டித்துப் பேசியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க தனித்து போட்டியிட முடியும். பா.ஜ.கவை தோழமை கட்சியாக மட்டும் தான் பார்க்கிறோம். கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமிதான் முடிவு செய்வார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை 3-ம் கட்ட தலைவர் என விமர்சனம் செய்த அண்ணாமலையை கண்டிக்கிறேன்" எனப் பேசியுள்ளார்.

 இன்னும் உக்கிரமாகுமா?

இன்னும் உக்கிரமாகுமா?

இப்படியாக, எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து அண்ணாமலையை அட்டாக் செய்து பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வார்த்தை மோதல்கள் பாஜக - அதிமுக கூட்டணியில் குண்டு வைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கடந்த சட்டப்பேரவை தேர்தலிலேயே பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்காவிட்டால், கூடுதல் இடங்களைப் பிடித்திருக்கலாம் எனக் கருதும் அதிமுக சீனியர்கள், நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடனான கூட்டணியைக் கைவிட முடிவெடுத்து விட்டதாகவே தெரிகிறது. வரும் நாட்களில் அதிமுகவினரின் பாஜக மீதான விளாசல்கள் உக்கிரமாகுமா? அல்லது அப்படியே அடங்குமா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+