மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் 7ஆம் ஆண்டு நினைவுதினம் - ட்விட்டரில் தலைவர்கள் அஞ்சலி
சென்னை : மக்கள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜெ அப்துல்காலமின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் ட்விட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கனவு காணுங்கள்.. உங்கள் கனவு மட்டும் தான் உங்கள் லட்சியங்களை அடைவதற்கானப் பாதையை வகுக்கும்' என்று இளைய தலைமுறையினரைத் தட்டி எழுப்பிய தலைவராக வாழ்ந்தவர் மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம்.
உறங்கும் போது காண்பதல்ல கனவு.. உறங்கவிடாமல் செய்வதே கனவு என்று சொன்னவர் ஜனாதிபதி அப்துல் கலாம்.
நமது நாட்டின் உன்னதமான தலைவர், தலைசிறந்த விஞ்ஞானி, மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர் என்பதை எல்லாம் தாண்டி மிகச் சிறந்த மனிதராக வாழ்ந்து மறைந்திருக்கிறார் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம். 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் பிறந்தார் அப்துல்கலாம். ராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கிய அப்துல் கலாமின் வாழ்க்கை பயணம் 2002 ஆம் ஆண்டு இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக உயரிய பதவியில் அரியணை ஏறும்படியாக மாறியது.

ராமேஸ்வரம்
2015 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி ஷில்லாங் பகுதியில் மாணவர்கள் மத்தியில் பேசி கொண்டிருந்த போது மாரடைப்பு காரணமாக அப்துல் கலாம் உயிரிழந்தார். அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் அருகில் உள்ள பேய்க்கரும்பு எனும் இடத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று 6ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அப்துல்கலாமின் நினைவிடம் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அப்துல்கலாம் அவர்களின் உறவினர்கள், மாவட்ட நிர்வாகம் சார்பில் மலர்கள் தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

7 ஆம் ஆண்டு நினைவு தினம்
வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும், சிந்திப்பதை நிறுத்தாதே.. அதுதான் மூலதனம் என்று மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் எபிஜெ அப்துல்கலாம் கூறியுள்ளார். மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் எபிஜெ அப்துல்கலாமின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் வாழ்ந்த வாழ்க்கை எத்தனை நேர்த்தியானது, உண்மையான உழைப்புடன் அர்ப்பணிப்பும் கூடியது என்பதெல்லாம் இனி வருங்காலங்களுக்கும் படிப்பினையாக விளங்குகிறது.

அண்ணாமலை அஞ்சலி
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் அப்துல்கலாமிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ராமேஸ்வரத்தில் பிறந்த ராக்கெட் விஞ்ஞானி, ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம், சாமானிய குடும்பத்தில் பிறந்த சாம்ராட். மதம் மொழி சாதி பிரிவு பிறப்பிடம் என வரம்புகளுக்குள் அடங்காத அறிவுச் சூரியன்! இறைவனை பகுத்தாய்ந்த வள்ளலார் இறைவனோடு கரைந்து விட்டார். மேகவெளியை பகுத்தாய்ந்த கலாம் ஐயா மேகாலயத்தில் மறைந்துவிட்டார். விண்வெளி, அணுமின் ஆற்றல், ராக்கெட்டுகள், ஏவுகணைகள் ஆகிய துறைகளின் விஞ்ஞானியாக,
ஆராய்ச்சியாளராக, ஆசிரியராக, இந்திய குடியரசுத் தலைவராக அக்கினி சிறகுகள் விரித்தவரே... 40க்கும் மேற்பட்ட முனைவர் பட்டங்கள் பெற்று, பத்மபூஷன் ஆகி, பத்ம விபூஷன் ஆகி, இன்னும் பெறற்கரிய பலப்பல சர்வதேச விருதுகள் பெற்ற பாரதத்தின் ரத்தினமே. இந்திய இளைஞர்களுக்காக, 2011ல் ஊழலை ஒழிக்க "நான் என்ன தர முடியும்" என்ற இயக்கத்தைத் தொடங்கினீர்கள். உங்களால் உருவாக்கப்பட்ட ஊழல் ஒழிக்கும் படையில் ஒருவனாக வணங்குகிறேன். வாழ்த்துங்கள். வழிகாட்டுங்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டிடிவி தினகரன் அஞ்சலி
இந்நிலையில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் 7ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தனது ட்விட்டர் பக்கத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். இளைய சமுதாயத்தினரிடம் புது எழுச்சியையும், நம்பிக்கையையும் விதைத்த ஏவுகணை நாயகர், முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாள் இன்று.
எல்லா வகையிலும் தன்னிறைவு பெற்ற வல்லரசு நாடாக நம் தேசம் உருவாக வேண்டும் என்ற கலாம் அவர்களின் கனவை நனவாக்க உழைத்திடுவோம் என்று பதிவிட்டுள்ளார்.

தமிழினத்தின் அடையாளம்
அதேபோல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழினத்தின் அறிவியல் அடையாளம்! நமது ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!" என்று ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications