சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியை திணிக்கும் மத்திய அரசு.. ராமதாஸே தேங்காய் உடைப்பது போல பட்டென்று சொல்லி விட்டார்!

இந்தி திணிப்பு உள்ளது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: இந்தி திணிப்பு இருப்பதை டாக்டர் ராமதாசே ஒப்புக்கொண்டுவிட்டார்."ரயில் விபத்துகளை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டாலும், உண்மையில் இதன் பின்னணியில் மொழித்திணிப்பு நோக்கம் இருப்பதை மறுக்க முடியாது" என்று ராமதாஸ் அறிக்கையே வெளியிட்டு விட்டார்.

பாஜக கூட்டணியில் பாமகவும் உள்ளது. ஆனால் பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் தமிழக நலன்களை விட்டுத் தர மாட்டோம் என்று அன்றே அன்புமணி தெளிவாக சொல்லி இருந்தார். அதன்படி மக்களை பாதிக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு பாமகவும் தனது பக்க எதிர்ப்பை தவறால் தெரிவித்து வருகிறது. ஏற்கனவே இந்தி திணிப்பு என்ற விவகாரத்தில் தமிழகம் சிக்கி உள்ள நிலையில், ரெயில்வேயில் வேலை பார்ப்பவர்கள் இந்தியில் பேச வேண்டும் என்ற அறிவிப்பு இன்று காலை வந்தது.

இதற்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அந்த அறிவிப்பு வாபஸ் ஆனாலும், இது மொழி திணிப்பு கிடையாது என்று தமிழக பாஜக விளக்கம் சொல்கிறது, இவர்கள் போதாதென்று துணை போவது மாதிரி, பிரேமலதாவும் பேசினார். கூட்டணியில் உள்ள பாஜக, தேமுதிக இப்படி ஆதரவு கருத்துக்களை முன்வைத்தாலும், பாமக தரப்பில் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் டாக்டர் ராமதாஸ். அது சம்பந்தமான அறிக்கை இதுதான்:

ஆங்கிலம் (அ) இந்தி

ஆங்கிலம் (அ) இந்தி

தெற்குத் தொடர்வண்டித் துறையில் கோட்ட தொடர்வண்டிக் கட்டுப்பாட்டு அதிகாரிக்கும், நிலைய அதிகாரிகளுக்கும் இடையிலான அலுவல் சார்ந்த உரையாடல்கள் அனைத்தும் ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் மட்டும் தான் இருக்க வேண்டும்; எக்காரணத்தை முன்னிட்டும் தமிழில் உரையாடக் கூடாது என்று ஆணையிடப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு தெளிவாக இருக்க வேண்டும் என்ற காரணத்தைக் காட்டி இந்தியைத் திணிப்பதற்கான இந்த முயற்சி கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

திருமங்கலம் விபத்து

திருமங்கலம் விபத்து

மதுரையை அடுத்த திருமங்கலத்தில் கடந்த மே மாதம் 9-ஆம் தேதி மதுரை - செங்கோட்டைக்கு இடையே இயக்கப்படும் இரு தொடர்வண்டிகள் ஒரே பாதையில் எதிரெதிரே வந்தன. அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு அந்த வண்டிகளை தடுத்து நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இரு தொடர்வண்டி நிலைய அதிகாரிகளுக்கு இடையிலான தகவல் தொடர்பில், மொழிப்பிரச்சினை காரணமாக ஏற்பட்ட குழப்பம் தான் அனைத்துக்கும் காரணம் என்று கூறி சம்பந்தப்பட்ட இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அதுபோன்ற குழப்பங்கள் மீண்டும் ஏற்பட்டுவிடக்கூடாது; ஒருவர் பேசுவது மற்றவருக்கு தெளிவாக புரிய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அனைத்து உரையாடல்களும் இந்தி அல்லது ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என ஆணையிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

பணியாளர்கள்

பணியாளர்கள்

தொடர்வண்டி விபத்துகளை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்று கூறப்பட்டாலும், உண்மையில் இதன் பின்னணியில் மொழித்திணிப்பு நோக்கம் இருப்பதை மறுக்க முடியாது. தொடர்வண்டித்துறையின் ஆணையைப் பார்த்தால், மாநில மொழிகளில் பேசப்படுவதை இந்தி பேசுபவர்களால் புரிந்து கொள்ள முடியாததால் தான் விபத்துகள் ஏற்படுவது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. உண்மையில் தமிழ்நாடு முழுமைக்கும் சேவை வழங்கும் தெற்கு தொடர்வண்டித் துறையில் இந்தி பேசும் வட இந்திய பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததும், அவர்களின் இந்தியை தமிழ் பேசும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களால் புரிந்து கொள்ள முடியாததும் தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் ஆகும். இதை தொடர்வண்டித்துறை மறைக்கிறது.

உள்ளூர் பணியாளர்கள்

உள்ளூர் பணியாளர்கள்

மதுரை திருமங்கலத்தில் ஏற்பட்ட பிரச்சினைக்கும் இது தான் காரணம் ஆகும். அங்கு கள்ளிக்குடி தொடர்வண்டி நிலைய அதிகாரி பீம்சிங் மீனா இந்தியில் தெரிவித்த தகவல் திருமங்கலம் தொடர்வண்டி நிலைய அதிகாரி ஜெயக்குமாருக்கு புரியாதது தான் விபத்துக்குக் காரணம் எனக் கண்டறியப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் தெற்கு தொடர்வண்டித் துறையில் இந்தி பேசும் வட இந்திய பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அவர்களின் மொழியை உள்ளூர் பணியாளர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

புதிய சிக்கல்கள்

புதிய சிக்கல்கள்

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பணியாற்றும் வட இந்தியர்கள் தமிழ் உள்ளிட்ட உள்ளூர் மொழிகளைக் கற்றுக் கொள்வதை கட்டாயமாக்குவது அல்லது தெற்கு தொடர்வண்டித்துறையில் முழுக்க முழுக்க தமிழர்களை நியமிப்பது தானே தவிர, தமிழ் பேசும் உள்ளூர் அதிகாரிகளை இந்தியில் பேசும்படி கட்டாயப்படுத்துவது அல்ல. இது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மாறாக வேறு வேறு வழிகளில் புதிய சிக்கல்களுக்கே வழிவகுக்கும்.

கட்டாயப்படுத்த முடியாது

கட்டாயப்படுத்த முடியாது

சென்னைப் புறநகர் பகுதியில் பயணச்சீட்டு வழங்கும் பணியில் இருக்கும் வட இந்திய பணியாளர்கள் மொழிப்பிரச்சினை காரணமாக தவறாக ஊர்களுக்கு பயணச்சீட்டு தருவது வாடிக்கையாகி விட்டது. வட இந்திய பணியாளர்களுக்கு தமிழ் கற்றுத் தருவதன் மூலமாகவே இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண முடியுமே தவிர, தொடர்வண்டியில் பயணம் செய்யும் அனைவரும் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.

தமிழர்களுக்கு வேலை

தமிழர்களுக்கு வேலை

இதே வாதம் தொடர்வண்டி கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் பொருந்தும். மாறாக, மாநில மொழிகளைப் புறக்கணித்து விட்டு ஆங்கிலமும், இந்தியும் தான் பேச வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால் அது தெற்கு தொடர்வண்டித்துறையில் தமிழர்களை வெளியேற்றிவிட்டு, முழுக்க முழுக்க இந்தி பேசும் வட இந்தியர்களை நியமிப்பதற்கே வழி வகுக்கும். இது ஆபத்தானது. எனவே, தெற்குத் தொடர்வண்டித்துறையில் பணியாற்றும் வட இந்தியர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி விட்டு, அவர்களுக்கு மாற்றாக தமிழர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

English summary
PMK Founder Dr Ramadoss has asked to appoint Tamils ​​in the Southern Railways
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X