பேரறிவாளன் கேஸ்... ஆளுநர் வறட்டு பிடிவாதம் பிடித்தால் 2 அவமதிப்பு தேடி வரும்... கேட்பது கி.வீரமணி
சென்னை: பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கில் ஆளுநர் தொடர்ந்து வறட்டு பிடிவாதம் பிடித்தால் நீதிமன்ற அவமதிப்பு, சட்டசபை அவமதிப்பு ஆகியவற்றை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
இது தொடர்பாக கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை: நீண்ட காலமாக தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவு என்ற தகுதியுடன் உள்ள தமிழ்நாடு அரசின் அமைச்சரவை முடிவான பேரறிவாளன் உள்பட எழுவர் விடுதலை சம்பந்தமானப் பிரச்சினையில் ஒரு பெரும் சட்டப் போராட்டமே நடந்து வருகிறது!

கேள்வி கேட்ட சுப்ரீம் கோர்ட்
''தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக உள்துறை அமைச்சக அறிக்கை தெரிவிக்கிறது. இதுபற்றி பேரறிவாளனின் 31 ஆண்டுகால சிறை வாழ்க்கை முன்னுதாரணமாக இருந்து வருகிறது. அவரை விடுவிப்பதற்குப் பொருத்தமான வழக்கு இது'' என பேரறிவாளன் சார்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் கோபால் சங்கரநாராயணன் கூறியுள்ளார்! அப்போது குறுக்கிட்ட (உச்சநீதிமன்ற) நீதிபதிகள் ''பேரறிவாளனை விடுவிக்கும் முடிவை ஏன் நாம் எடுக்கக் கூடாது? ஏன் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கவேண்டும்?'' என்று தமிழ்நாடு அரசுக்குக் கேள்வி எழுப்பினர்.

ஜனாதிபதிக்கு என்ன அதிகாரம்?
தமிழ்நாடு அரசின் சார்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் ராகேஷ் திவேதி, ''மசோதாக்களை மட்டுமே குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. மற்றபடி அமைச்சரவையின் பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் கேள்வியே எழவில்லை'' என்று தெளிவுபடுத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து நீதிபதிகள், ''இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா? ஒன்றிய அரசுக்கு உள்ளதா? என்ற முரண்பாட்டுக்குள் செல்லாமல், உச்சநீதிமன்றமே ஏன் முடிவு எடுக்கக் கூடாது? எந்த சட்ட விதிகளின்படி ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்? 31 ஆண்டுகள் சிறையில் உள்ள நபரை வேறு நபரோடு ஒப்பிடுகிறீர்களே, இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் என்ன முடிவு எடுக்கவேண்டியுள்ளது?'' என ஒன்றிய (மத்திய) அரசிடம் கேட்டனர்.

ஆளுநருக்கு கெடு அவசியம்
அதற்கு ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜ், ''அரசமைப்புச் சட்டம் 72 ஆவது பிரிவின்கீழ் தண்டனையைக் குறைக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவர் பெற்றுள்ளார். ஆளுநருக்கு அதிகாரம் இல்லாத விவகாரத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதைத் தவிர வேறு வழியில்லை'' என்று வாதிட்டார்.அப்போது நீதிபதிகள், ''மகிழ்வு தராத அமைச்சரவையின் ஒவ்வொரு முடிவையும் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைத்தால், கூட்டாட்சிக்கு எதிரானதான தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்'' என கருத்துக் கூறினர். அப்போது பேரறிவாளன் சார்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் கோபால் சங்கரநாராயணன், ''ஒன்றிய அரசின் வாதத்தை ஏற்றால், குற்ற வழக்குகளில் தண்டனை அனைத்தையும், ஒன்றிய (மத்திய) அரசுதான் முடிவு செய்ய வேண்டிவரும். முடிவெடுப்பதில் பேரவைத் தலைவருக்கு இருக்கும் காலக் கெடுவைப் போல, ஆளுநருக்கும் இருக்கவேண்டும்'' என வாதிட்டார்.

அவமதிப்புகள் தேவையா?
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் ''அடுத்தடுத்து விசாரணை ஒத்தி வைக்கப்பட்டு 3 ஆண்டுகள் கழித்து ஒன்றிய அரசு தன் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது. ஒன்றிய (மத்திய) அரசின் வாதங்கள் அரசியல் சாசன அமர்வு தீர்ப்புக்கு எதிராக உள்ளன. பரிந்துரை என்பது மாநில அரசின் முடிவே தவிர, ஆளுநரின் முடிவு அல்ல. அமைச்சரவை முடிவுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் ஆளுநர் செயலாற்ற முடியாது. அமைச்சரவை முடிவுக்குக் கட்டுப்பட்டவர் ஆளுநர்'' என்று கூறி, விசாரணையை தள்ளி வைத்தனர். இந்த அருமையான அரசமைப்புச் சட்ட விதிப்படி, ஆளுநர், அமைச்சரவை முடிவுக்கு மாறாக இழுத்தடிப்பதோ, காலதாமதம் செய்வதோ, அரசமைப்புச் சட்டப்படி அவர் ஆற்றவேண்டிய கடமையைச் செய்யத் தவறியவராவார் என்பதே - குறிப்பிட்ட இந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது. இதன் தத்துவமும், சட்ட விளக்கமும் 'நீட்' தேர்வு விலக்கு மசோதா உள்பட அனுப்பாமல் தேக்கி வைக்கும் ஆளுநரின் நிலைப்பாட்டுக்கு எதிரான எச்சரிக்கை மணி என்பதை அவரும், அவருக்கு ஆலோசனை கூறும் எவரும் உணரவேண்டிய சுவரெழுத்து - இந்த மேற்காட்டிய சட்ட விளக்கம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்! மேலும், ஆளுநர் வறட்டுப் பிடிவாதம் காட்டுவதோ, குறுக்குசால் ஓட்டுவதோ இரண்டு அவமதிப்புகள் ஆகும். 1. உச்சநீதிமன்ற அவமதிப்பு 2. தமிழ்நாடு சட்டமன்ற அவமதிப்பு எனவே, ஆளுநரே, தாங்கள் ''அரசியல் செய்யாதீர்கள்!'' ''அவப்பெயர் வாங்காதீர்!'' அனுப்புங்கள் விரைவில்!! இவ்வாறு கிவீரமணி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications