ஒரே கையெழுத்து.. சென்னையில் 122 காவல் ஆய்வாளர்கள் டிரான்ஸ்ஃபர்! நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி நடவடிக்கை
சென்னை: நாடாளுமன்ற தேர்த்ல் நெருங்கி வரும் நிலையில் அதை ஒட்டி சென்னையில் மட்டும் ஒரே நாளில் 122 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்கள்.
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தார். சொந்த ஊரில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்கள் அல்லது ஒரே இடத்தில் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் போலீசாரின் பட்டியலை அனுப்புமாறு அவர் அறிவுறுத்தி இருந்தார். அதன் அடிப்படையில் தேர்தல் விதிகளை பின்பற்றி போலீசாரின் பணியிட மாறுதல் பட்டியலும் தயாரிக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த நிலையில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு போலீசாரின் பணியிட மாற்றம் தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு காவல் துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி சென்னையில் மட்டுமே ஒரே நாளில் 122 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்ய சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டு உள்ளார். சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர்கள், குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்கள், விபச்சார தடுப்பு காவல் ஆய்வாளர்கள் என பல்துறை பிரிவுகளை சேர்ந்த காவல் ஆய்வாளர்கள் அடங்குவார்கள்.
ஏற்கனவே சென்னையில் மட்டும் இதேபோன்று 40 க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதேபோன்று 20 க்கும் மேற்பட்ட காவல்துறை உதவி ஆணையர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருந்தனர். அதேபோன்று தமிழ்நாடு முழுவதும் 100 க்கும் அதிகமான டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருந்தனர். அடுத்தக்கட்டமாக காவல் துறை உதவி ஆய்வாளர்களும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இடமாற்றம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தலுக்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. அதேபோன்று தேர்தல் ஆணையமும் இதற்கான பணிகளை முடுக்கிவிட்டு உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகலாம் என்று கூறப்படும் நிலையில், தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள இன்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னை வருகிறார்கள். இவர்கள் தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications