Exclusive: அப்பாவுடன் என்னை ஒப்பிடாதீங்க! இழந்த செல்வாக்கை மீட்பேன்! மனம் திறந்த துரை வைகோ!
சென்னை: தனது தந்தை வைகோவுடன் தன்னை ஒப்பிட வேண்டாம் என்றும் மதிமுகவின் செல்வாக்கை மீட்டெடுப்பேன் எனவும் அக்கட்சியின் தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
அரசியலை பொறுத்தவரை தாம் இன்னுமே ஒரு கத்துக்குட்டி தான் எனக் கூறி தனது அடக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஒன் இந்தியா தமிழ் இணையதளத்துக்கு மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ அளித்த சிறப்புப் பேட்டியின் விவரம் வருமாறு;
கேள்வி: அப்பா எப்படி இருக்கிறார், உங்க கட்சிப்பணிகளை பற்றி ஏதாவது சொல்லியிருக்கிறாரா?
பதில்: வயது மூப்பு காரணமாக முன்பை போல் அவரால் சுற்றுப்பயணம் செல்ல முடியவில்லையே தவிர மற்றபடி அப்பா நல்லாயிருக்காரு. எனது கட்சிப் பணிகளை பொறுத்தவரை Work in Progress நிலையில் தான் இருக்கிறேன். இதனால் இப்போது அது தொடர்பாக அப்பா எதுவும் தெரிவிக்கவில்லை.
கேள்வி: மேடைகளில் அப்பாவை போல் பேச வேண்டும் என ஆசை உள்ளதா?
பதில்: சான்ஸே இல்லைங்க, அப்பாவுடன் தயவு செய்து என்னை ஒப்பிடவே ஒப்பிடாதீங்க. தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவராக தலைவர் வைகோ இருக்கிறார். நிறைய இளம் தலைவர்களுக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேஷனாக உள்ளர். என்னை பொறுத்தவரை அப்பா மாதிரி பேச முடியாவிட்டாலும் கூட மனதில் பட்டதை யதார்த்தமாக பேசி வருகிறேன். இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் தமிழ் இலக்கணத்தில் நான் POOR. அடுக்கு மொழியில் இலக்கணத் தமிழில் எனக்கு பேசத் தெரியாது. அதனால் அப்பா மாதிரி பேசனும் என ஆசைப்பட்டதில்லை.
கேள்வி: அரசியல் பொதுவாழ்வில் நீங்கள் சந்திக்கும் சவால்கள் என்னென்ன? குறிப்பாக உங்கள் வருகைக்கு பிறகு மதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகியிருக்கிறார்களே, அதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: நேரடி அரசியலுக்கு வந்த பிறகு நிறைய சவால்களை சந்தித்திருக்கிறேன், எதைச் சொல்வது எதை விடுவது. அரசியலை பொறுத்தவரை ஒவ்வொரு நாளுமே சவாலானது தான். நிர்வாகிகளை அனுசரித்துச் செல்ல வேண்டும், தொண்டர்கள் என்னை நம்பி என்னிடம் வைக்கும் கோரிக்கையை எப்பாடு பட்டேனும் நிறைவேற்றித் தர வேண்டும், நிர்வாகிகளை கையாள்வதில் கவனமுடன் இருக்க வேண்டும், இப்படி பல சவால்கள் உள்ளன.
மதிமுகவிலிருந்து ஒரு சில நிர்வாகிகள் வெளியேறியது நீங்கள் சொல்வது போல் நான் அரசியலுக்கு வந்த காரணத்தினால் அல்ல. 2021 சட்டமன்றத் தேர்தலில் சீட் எதிர்பார்த்து கிடைக்காத கோபத்தில் இருந்தவர்கள் தான், என்னை ஒரு சாக்காக கூறி வெளியேறிவிட்டார்கள்.

கேள்வி: உங்கள் தந்தை வைகோ குறித்து, மாமனிதன் என்ற ஆவணப்படத்தை உருவாக்க காரணம் என்ன?
பதில்: இது எனது 7 வருடக் கனவு, 3 வருட முயற்சி, 1 வருட உழைப்பு. நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பாக தொழில்களை கவனித்து வந்த போதே அப்பாவை பற்றி அவர் செய்த தியாகங்கள், போராட்டங்கள், மக்கள் நல உரிமைகளுக்காக கொடுத்த குரல்களை படமாக எடுக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆன திரைப்படம் எடுக்கும் அளவுக்கு பணமில்லை. அதனால் ஆவணப்படமாக எடுத்தேன்.
தலைவர் வைகோவை பற்றி அறியாதவர்கள் அவர் குறித்து கேலியும் கிண்டலும் செய்தது என் மனதை பாதித்தது. அதனால் தான் இளைய தலைமுறையினரும் மாற்றுக் கட்சி நண்பர்களும் வைகோவின் தியாக வரலாற்றை அறிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மாமனிதன் ஆவணப்படத்தை எடுத்தேன். விரைவில் இந்த ஆவணப்படத்தை முக்கிய தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிப்பரப்பும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறேன்.
கேள்வி: தமிழக நலன் சார்ந்த பிரச்சனைகளில் வைகோவிடம் இருந்த போர்க்குணத்தை உங்களிடம் காண முடியவில்லையே..
பதில்: இப்போது தான் சொன்னேன், அப்பாவுடன் என்னை கம்பேரே பண்ணாதீங்க ப்ளீஸ். அவர் ஒரு சகாப்தம். நான் எப்படி அவர் போல் வர முடியும். அப்பாவின் போர்க்குணத்தை என்னிடம் நீங்கள் எதிர்பார்ப்பது தவறு. ஆனால் அதே வேளையில் என்னுடைய அரசியல் மையக்கரு என்னவென்றால், சாதாரண சாமன்யர்களின் பிரச்சனைகளுக்கும், கோரிக்கைகளுக்கும் தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது தான். சும்மா வெறுமனே தலையாட்டிவிட்டு கோரிக்கை மனுவை வாங்கிச் செல்லாமல், அதன் மீது நடவடிக்கை எடுத்து அதனால் பயன் அடைந்தவர்கள் அடுத்தமுறை என்னை சந்திக்கும் போது அவர்கள் கூறும் நன்றி என்ற ஒற்றை வார்த்தையை கேட்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையில்லை.

கேள்வி: உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என திமுகவில் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன, கூட்டணிக் கட்சி என்ற முறையில் உங்கள் கருத்து என்ன?
பதில்: உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுப்பது பற்றி என்னிடம் கேட்டால் நான் என்ன சொல்ல முடியும். இது திமுக தலைமை முடிவெடுக்க வேண்டிய விவகாரம். ஆனால் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன், தம்பி உதயநிதி அமைச்சரானால் நான் விமர்சிக்க மாட்டேன். அந்தப் பதவியை ஒரு கருவியாக வைத்து அவரது நிர்வாகத் திறமையை வெளிப்படுத்தி மக்கள் நலப் பணிகள் மூலம் சிறந்த பெயரை அடைய வேண்டும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி: முன்பைக்காட்டிலும் கட்சியினரை அதிகம் சந்திக்கிறீர்கள், தொடர் சுற்றுப்பயணம் செல்கிறீர்கள் -உங்கள் இலக்கு தான் என்ன?
பதில்: மதிமுகவின் வாக்குவங்கி சரிந்திருப்பது கசப்பான உண்மை. இதில் மறைப்பதற்கு எதுவுமில்லை. வாக்கு வங்கியை அதிகப்படுத்த வேண்டும் என்பதும் இழந்தை செல்வாக்கை மீட்டெடுக்க வேண்டும் என்பது தான் எனது இலக்கு. மற்றப்படி சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதெல்லாம் எனது இலக்கல்ல. நான் சட்டமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என நினைத்திருந்தால் கடந்த தேர்தலிலேயே சாத்தூரில் போட்டியிட்டிருப்பேன். ஆனால் அது போல் செய்து அப்பாவுக்கு தர்மசங்கடமான சூழலை உருவாக்க விரும்பவில்லை. கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் மதிமுகவில் புதுமுகங்களுக்கும், இளைஞர்களுக்கும் திறமைக்கேற்ற வாய்ப்புகளை வழங்குவேன்.