"தமிழகத்திற்கு வந்த 450 டன் வெங்காயம் மாயம்.." விஜய் அரசை விளாசிய எடப்பாடி பழனிசாமி
சென்னை: வெங்காயத்தை குறைந்த விலையில் ரேஷன் கடைகளில் விற்பதாக தவெக அரசு அறிவித்த போதிலும், அதில் சில குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. இதை கடுமையாக விமர்சித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திற்கு வந்த 450 டன் வெங்காயத்தை காணவில்லை எனவும் குழப்பத்தில் உருவாகி, குழப்பத்திலேயே நாட்களைக் கடத்தும் இந்த திக்குத் தெரியாத தவெக ஆட்சியால் பாதிக்கப்படுவது தமிழக மக்கள் தான் எனவும் விமர்சித்துள்ளார்.
வெங்காய விலை உச்சம் தொட்டு வரும் நிலையில், வடமாநிலங்களில் இருந்து வெங்காயத்தை கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு விற்கப்படும் என தவெக அரசு அறிவித்திருந்தது. ஒரு சில இடங்களில் வெங்காய விலை ரூ.150 வரை போன நிலையில், இது மக்களுக்கு பெரியளவில் உதவும் என எதிர்பார்க்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி
இதற்காக சுமார் 450 டன் வெங்காயத்தை மத்திய அரசு நிறுவனத்திடம் இருந்து தமிழக அரசு கொள்முதல் செய்தது. இருப்பினும், அந்த வெங்காயம் நல்ல நிலையில் இல்லை எனவும், கெட்டு போய் விட்டதாக புகார் எழுந்த நிலையில் அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டு விட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது பெரிய விவாதமாகியுள்ள நிலையில், இது தொடர்பாக விஜய் அரசை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில், "வெளி சந்தையில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், வட மாநிலங்களில் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு நியாய விலைக்கடைகள் மூலம் குறைந்த விலைக்கு விற்கப்படும் என்று வார்த்தை ஜாலம் காட்டியது தவெக அரசு.
அழுகிவிட்டது
இந்நிலையில் கடந்த வாரம் சுமார் 250 டன் வெங்காயம் வட மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, சரக்கு ரயில் மூலமாக சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, கொருக்குப்பேட்டையில் உள்ள கிடங்கில் மற்ற மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 3 நாட்களாக இந்த வெங்காயம் லாரிகளில் இருந்து கீழே இறக்கப்படாததால் அத்தனையும் அழுகி வீணாகி வருவதாக செய்திகள் தெரிய வருகிறது.
450 கிலோ வெங்காயம் மாயம்
250 டன் அழுகிய வெங்காயத்துடன் கடந்த 3 நாட்களாக 10 லாரிகளும் அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. இதுமட்டுமன்றி, NAFED மூலம் நான்காம் கட்டமாக கொள்முதல் செய்து வரவழைக்கப்பட்ட 450 டன் வெங்காயம் தரமில்லாமல் இருந்ததால் பெற்று கொள்ளவில்லை என்று தமிழக அரசும், தங்களுக்கு திருப்பி அனுப்பப்படவில்லை என்று NAFED தரப்பிலும் கூறப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. அதாவது, தமிழகத்திற்கு வந்த 450 டன் வெங்காயத்தை காணவில்லை!
குழப்பத்தில் உருவாகி, குழப்பத்திலேயே நாட்களைக் கடத்தும் இந்த திக்குத் தெரியாத தவெக ஆட்சியால் பாதிக்கப்படுவது தமிழக மக்கள் தான்! இது என்ன சினிமாவா, டேக் சரியில்லை என்றால் கட் சொல்லிவிட்டு அடுத்த டேக்கில் பார்த்துக்கொள்ளலாம் என்று கடந்து போவதற்கு? ஆட்சி ! மக்கள் நலன், மக்கள் வரிப்பணம் சம்மந்தப்பட்டது!
ஆச்சரியக்குறி அரசு
அத்தியாவசியப் பொருளை எப்படி கையாள்வது என்பது கூட தெரியாமல், விலைவாசி உயர்வின் சீரியஸ்னஸ் புரியாமல், Lethargic-ஆக செயல்படும் ஆச்சரியக்குறி அரசுக்கு எனது கடும் கண்டனம். விலைவாசி கட்டுப்பாட்டிற்கான வழிமுறைகளை கவனத்துடன் செயல்படுத்த வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்" என்று அதில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
